காடவராயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்கள் சேந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்.

காடவராயர்களின் தோற்றம்[தொகு]

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்களில் சேந்தமங்கலம் என்னும் பகுதிகளில் காணப்பட்ட காடவராயர்கள். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் வட ஆற்காடு மாவட்டம் ஆகனூர்நாடு என்னும் பகுதியிலும் தென்னாற்காடு, செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர்.

சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி இவர்கள் பல்லவர்களின் வழி தோன்றல்கள் என்றும், வேறுசிலர் இவர்கள் வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தின் கிழக்கு பகுதியைச் சார்ந்த பூர்வீக மக்கள் என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பல்லவ குல கடைசி மன்னன் அபராசித வர்மனை முதலாம் ஆதித்த சோழன் போரில் தோற்கடித்து பல்லவப் போரரசிற்கு ஒரு முடிவு கட்டினான். சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் என்றும் சுயம்புவராயர்கள் திருவண்ணாமலையைத் தலைநகராமாக வைத்து ஆட்சி புரிந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தை தலைநகராக வைத்து ஆட்சி புரிந்தனர். இவர்கள் இருவரும் சோழர்களின் மேலாதிக்கத்தின் கீழ் சிறு அதிகாரிகளாகவும், அரசியலில் வேலை ஆட்களாகவும் இருந்து வந்தனர்.

காடவராயன் அரசை நிறுவுதல்[தொகு]

கி.பி.12 நூற்றாண்டின் தொடக்கத்தில்கெடிலம் நதியின் தென்கரையில் உள்ள திருமாணிக்குழி வட்டாரத்தில் வளந்தனார் என்ற காடவராயர், சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்திவந்தார். அவரையடுத்து அவர் வழியைச் சேர்ந்தவர்களான ஆட்கொல்லி அரசநாராயணன் கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப்படும் மணவாளப் பெருமாள் ஆகியோர் சோழர்களின் கீழ் ஆணை செலுத்தி வந்தனர்” அவர் வம்சத்தவரின் கல்வெட்டுகள் விருத்தாசலம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் காணப்படுகின்றன.

வீரசேகரின் வழியில் வந்த காடவ அரசன் மணவாளப் பெருமாள் என்றழைக்கப்படும் காடவராயன் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனக்கெனத் தனி நாட்டை உருவாக்கினான். சேந்தமங்கலத்தில் அவன் பெயரிலேயே வாணிலைக் கண்டேசுவரம் (கூடல் ஏழிசை மோகனான மணவாளப் பெருமாள் வாணிலைக் கண்டனான் காடவராயன்) என்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். காடவராயர்களில் இவன் சிறந்த வீரனாக விளங்கியதால் சோழ மன்னர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனி அரசு அமைத்ததிலிருந்து காடவராயர்களின் அரசியல் வரலாறு ஆரம்பமாகிறது எனலாம்.

மேலும் காடவகுல மன்னன் மணவாளப் பெருமாள் தன்னுடைய தலைநகரை கி.பி.1195ல் தோற்றுவித்தான் என்று அவனது 5ம் ஆம் ஆண்டு கல்வெட்டுக் கூறுகிறது.A.R.E 480/1902 இதை 1995 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் சேந்தமங்கலத்தில் நடத்திய தொல்பொருள் ஆய்வின் மூலம் கிடைத்த சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. மணவாளப் பெருமாள் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகனான கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவ அரசர் ஆட்சிக்கு வந்தார்.

கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவ அரசர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. வரலாற்று ஆசிரியர் வேங்கட சுப்பையர் கூற்றப்படி காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் என்றும் இரண்ம்டா கோப்பெருஞ்சிங்கன் என்றும் கூறுகிறார். ஆனால் இவரின் கருத்தை கோப்பெருஞ்சிங்கன் என்ற வரலாற்று நூலை எழுதிய எஸ்.ஆர். சுப்பிரமணியம் மறுத்துக்கூறி மணவாளப் பெருமாளுக்குப் பின் அவரது மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்கு வந்தார் என்றும், அதன்பின் இவரது காடவகுமரன் ஆட்சிக்கு வந்தார் என்றும் திருவண்ணாமலைக் கல்வெட்டுச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு எடுத்துரைக்கின்றார்.

சோழ வரலாறு என்ற நூலை எழுதிய வரலாற்று ஆசிரியர் கே.கே. அவர்கள் கூற்றுப்படி கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை ஆட்சிபுரிந்தான் என்று கூறுவதன் மூலம் கோப்பெருஞ்சிங்கன் என்பவனாக இருக்கக்கூடும் எனக் கருதலாம். மேலும் இந்த காலத்தில்தான் மூன்றாம் இராஜராஜ சோழனை தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து (கி.பி. தன்னுடைய தலைநகரான சேந்தமங்கலத்தில் சிறைச் செய்தான் இதிலிருந்து இவனே, சேந்தமங்கலத்தை ஆட்சி செய்த காடவராய கோப்பெருஞ்சிங்கன் எனக் கூறலாம்.

கோட்டை அரண் சுவர்

கோப்பெருஞ்சிங்கனின் போர்ச் செயல்[தொகு]

மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் குறு நில மன்னனாக விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன்.பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் கி.பி 1231ல் நடந்த யுத்தத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 3ம் ராஜராஜனை வென்று முடிகொண்ட சோழபுர்த்தில் வெற்றிவிழா கொண்டாடினான்.தோல்வியுற்ற மூன்றாம் ராஜராஜசோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து 3ம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம்.மீண்டும் ராஜராஜனின் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.மீண்டும் கி.பி 1253 ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.கி.பி 1255 ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான்.இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.ஆனால் கி.பி 1279ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழ நாடு,திருமுனைப்பட்டி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது.அவனோடு காடர்குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

காடவராயர்களின் ஆட்சி எல்லை[தொகு]

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரை வரை என ஆட்சியைப் பரப்பி ஆட்சிபுரிந்து வந்தான். கி.பி.1279ல் வீழ்ச்சியடைந்தான்.

கோப்பெருஞ்சிங்கன் மலையமான்களுடன் நட்பு[தொகு]

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மலையமான்கள், கோப்பெருஞ்சிங்கனின் வலிமையை உணர்ந்து நட்புறவுக் கொண்டிருக்கலாம். சோழராட்சியை முடிவுக்கு கொண்டு உருவாவதில் இந்த நட்புறவு பெரிதும் காரணமாக இருந்திருக்கலாம்.

சோழர்களது ஆட்சிக்குபட்பட்டிருந்த கோப்பெருஞ்சிங்கன் சோழர்களது நிர்வாக முறையை பெரிதும் பின்பற்றினான். அமைச்சர்கள், முதலிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர;. அவர்கள் சிவில் ராணுவ அதிகாரம் பெற்றவராய் திகழ்ந்திருந்தனர். கோப்பெருஞ்சிங்கனுடைய முக்கிய அமைச்சர;களில் ஒருவன் அரைசூருடையான் செங்கனிவாயன் சோழகோன் ஆன பெருமாள் பிள்ளை என்பவன் ஆவான். காடவ மன்னன் தன் பெயரிலேயே ஆணைகள் பிறப்பித்துள்ளான் என்பது திருவெண்ணெய்நல்லூரிலுள்ள கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

ஊர், நகரம், நாடு முதலிய பல பகுதிகளும் செவ்வனே ஆளப்பட்டு வந்தன. இப்பகுதியில் சுய ஆட்சி முறையே கையாளப்பட்டது. பெருங்குறி என்ற பொது மக்கள் சபையும், ஆளும் கணத்தார் என்ற நிர்வாகக் குழுவும் நிர்வாகத்தை நடத்திவந்தன.

இதன் மூலம் காடவராயர;கள் சேந்தமங்கலத்தில் தங்களுக்கென ஒரு ஆட்சியை ஏற்படுத்தி வலிமையான ஒரு அரசை அப்பகுதியில் நிறுவிநார் என்றும், சோழர்களின் ஆட்சி முறையிலான ஒரு சிறந்த ஆட்சியை அப்பகுதியில் வழங்கியிருக்கின்றனர் என்றும் அறிய முடிகின்றது. மேலும் தமிழகத்தில் தோன்றிய குறுநில மன்னர;களில் காடவராயர;கள் முக்கியமானவர;கள் என்பதையும் இவர்கள் ஆட்சியின் மூலம் சேந்தமங்கலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகத் திகழ்ந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகின்றது.

காடவராயர்களின் கோவில்

நாணயங்களும் அளவை முறைகளும்[தொகு]

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கழஞ்சு, காசு, மாடை, நெல்லூர், மாடை முதலிய பல நாணயங்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன.

காடவராயர்களின் சமய நிலை[தொகு]

சேந்தமங்கலம் கோட்டை கோயில்[தொகு]

[1]

குதிரை வடிவ இசைச் சிற்பம்

சேந்தமங்கலம் கோட்டை கோயில் கட்டடக் கலையில் ஒருப்புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தன்ர்.கோயில் திருச்சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மற்றுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்பட்டுள்ளது.கோயில் கோட்டையைச் சுற்றி அகழியுண்டு.இக்கோட்டையிலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இக்கோயிலில் பல்வேறு வகைச் சிற்பங்களும்,கோயில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு காணப்படுகிறது. இந்தக் கோட்டைக் கோயிலின் மேற்கே நீராழிக் குளம் என்ற பெயருடைய ஒரு குளமும் உள்ளது. இக்குளத்தின் நீர் சிவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்படிருக்கிறது. இக்குளத்தின் வடகரையில் இரண்டு குதிரைச் சிலைகள் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கின்றன. இக்குதிரைகள் இசைச் சிற்பமாகும். இக்குதிரையின் ஒவ்வொரு பாகத்திலும் தட்டிப்பார்க்கும்போது பல்வேறு இசைகளை தருவது இதன் சிறப்பாகும்.

கோவிலின் உள்தோற்றம்

வாணிலைக் கண்டேசுவரம் ஆலயம்[தொகு]

[2]

வாணிலைக் கண்டேசுவரம் ஆலயம்

சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார். இக்கோயிலிலுள்ள சிவன் ஆபத்தசகாயேசுவரர் என அழைக்கப்படுகிறார். அதன் அருகிலேயே திருக்காமக்கோட்ட நாச்சியார் திருச்சன்னதியும் உருவாக்கினார்.

வைணவம்[தொகு]

திருக்கோவிலூர; வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கோப்பெருஞ்சிங்கன் கோயில் ஒன்று அமைத்துள்ளான். இக்கோயில் வைகுந்த பெருமாள் கோயில் என்றும் அழகிய பல்லவ விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. அழகிய பல்லவனாகிய தன்னுடைய தந்தை மணவாளப் பெருமாள் பெயரில் அமைத்துள்ளான்.

ஜைனம்[தொகு]

உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள திருநறுங்கொண்டை என்ற ஊரில் அமைந்துள்ள பார்சுவப் பெருமான் கோயிலுக்கு ஆளப்பிறந்தான் மோகன், வீரசேகர காடவராயர் கூடல் ஆளப்பிறந்தான் மோகன் கச்சிராயன் என்ற காடவராய மன்னர்கள் தான தருமங்களை செய்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21]

  1. I.Annual Report on Epigraphy(கல்வெட்டு ஆண்டறிக்கை)
  2. 1.A.R.E.; 1902; Nos.466,213,480
  3. 2.A.R.E.; 1903; No.73
  4. 3.A.R.E.; 1906; No.166
  5. 4.A.R.E.; 1915; No.85
  6. 5.A.R.E.; 1918; No.69
  7. 6.A.R.E.; 1921; Nos.317,323,486,500
  8. II.Ephigraphic Indica (இந்திய கல்வெட்டியல்)
  9. 1.Ephigraphic Indica , Vol.VII,pp.163-164
  10. III.South Indian Inscriptions(தென்னிந்திய கல்வெட்டுக்கள்)
  11. 1.S.I.I; Vol.XII; Nos.159,202,204,206,213,214,221,233,234,235,246,256,316,432,717
  12. IV.English Books
  13. The Encyclopedia District Gazettears of India,Gyan Publishing House,New Delhi,1997
  14. V.தமிழ் நூல்கள்
  15. பிற்கால சோழர் வரலாறு,அண்ணாமலை பல்கலைக்கழகம்- சதாசிவ பண்டாரத்தார்,தி.வை
  16. கெடிலவளம் - சண்முகசுந்தரனார்
  17. சேந்தமங்கலம் கோட்டை - சேகரன்
  18. கோப்பெருஞ்சிங்கன் - பாலசுப்ரமணியன்
  19. கெடிலகரை நாகரீகம்
  20. பேரசனையே சிறை பிடித்த சிற்றரசன்- (புதினம்) பேரா.மோகனா
  21. நடு நாட்டில் சமணம்-ஆய்வு கட்டுரைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடவராயர்கள்&oldid=2715718" இருந்து மீள்விக்கப்பட்டது