உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்ட் ஜென்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடவர்ட் ஜென்னர்
Edward Jenner
ஜேம்சு நோர்த்கோட் என்பவரால் வரையப்பட்ட ஜென்னரின் உருவப்படம்
பிறப்பு17 மே 1749
பெர்க்லி, குளொஸ்டர்சயர்
இறப்பு26 சனவரி 1823(1823-01-26) (அகவை 73)
பெர்க்லி
வாழிடம்பெர்க்லி
தேசியம்ஆங்கிலேயர்
துறைமருத்துவம்/அறுவைச் சிகிச்சை, இயற்கை வரலாறு
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் பல்கலைக்கழகம் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்
Academic advisorsஜோன் ஹண்டர்
அறியப்படுவதுபெரியம்மை தடுப்பு மருந்து, தடுப்பு மருந்தேற்றம்
ஜென்னரின் ஓவியம்

எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.[1] இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.[2][3][4]

இளமை

[தொகு]

இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் 1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக எட்வர்ட் ஜென்னர் பிறந்தார்.[5] இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது.[6] ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார்.[7] இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது.[7]

கல்வியும் பணியும்

[தொகு]

தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்ந்தார்.[7] அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. 'கௌபாக்சு' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க 'கௌபாக்சு' நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர். ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தார். இதனிடையில் 1770 இல் புனித ஜார்ஜ் மருத்துவமனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு அறுவையாளராகவும் பணியாற்றினார்.[8] ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் இராயல் கழக உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773 இல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார்.

இயற்கை, அறிவியல், திருமணம்

[தொகு]
குயில்

இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார்.[9][10] மற்ற பறவைகளின் கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது.[11] 1788 இல் ராயல் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணம்

[தொகு]

எட்வர்சு ஜென்னர் 1788 மார்ச்சு மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட் பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார்.

மருத்துவமும் ஆய்வுகளும்

[தொகு]

1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவப் பட்டம் பெற்றார். குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும்.[12] ஹிபர்தீன் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி முறை

[தொகு]

தடுப்பூசி முறை 1721 இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கணவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர்.[13] சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.[14]

1765 இல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை.[15]

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார்.[16] எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.

சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார்.[17] அதன்பின் மேலும் பல ஆய்வுகளைச் செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770 களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791 ) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர்.[18][19] இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது.[20]

சிறப்புகள்

[தொகு]

பிரித்தானிய ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது.[21] ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது.

எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.[22]

மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரித்தானிய நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயைத் துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.

இறுதி வாழ்க்கை

[தொகு]
இங்கிலாந்தின் பெர்க்கிலீயில் உள்ள ஜென்னரின் வீடு
இலண்டனில் ஒரு பூங்காவில் உள்ள அவரது சிலை

1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவத் தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823 ஜனவரி 23 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது முறையும் பக்கவாத நோய் தாக்கியது. 1823-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.[23][24][25][26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stefan Riedel, MD, PhD (2005 January). Edward Jenner and the history of smallpox and vaccination. 18. Baylor University Medical Center. பக். 21–25. பப்மெட்:16200144. 
  2. "Edward Jenner - (1749–1823)". Sundaytimes.lk. 1 June 2008. பார்க்கப்பட்ட நாள் 28 July 2009.
  3. "History - Edward Jenner (1749 - 1823)". BBC. 1 November 2006. பார்க்கப்பட்ட நாள் 28 July 2009.
  4. "Edward Jenner - Smallpox and the Discovery of Vaccination". பார்க்கப்பட்ட நாள் 28 July 2009.
  5. The Jenner Institute[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "About Edward Jenner". The Jenner Institute. Archived from the original on 10 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 7.2 "About Edward Jenner". The Jenner Institute. Archived from the original on 10 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Young Edward Jenner, Born in Berkeley". Edward Jenner Museum. Archived from the original on 14 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. Observations on the Natural History of the Cuckoo. By Mr. Edward Jenner. In a Letter to John Hunter, Esq. F. R. S Jenner, E Philosophical Transactions of the Royal Society of London (1776-1886). 1788-01-01. 78:219–237 (Text at http://www.archive.org/details/philtrans06624558 )
  10. Cuckoo chicks evicting their nest mates: coincidental observations by Edward Jenner in England and Antoine Joseph Lottinger in France Spencer G. Sealy and Mélanie F. Guigueno Department of Biological Sciences, University of Manitoba, Winnipeg, Manitoba R3T 2N2, Canada (e-mail: sgsealy@cc.umanitoba.ca).Citation Information. Archives of natural history. Volume 38, Page 220-228 DOI 10.3366/anh.2011.0030, ISSN 0260-9541, Available Online October 2011
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  12. J R Coll Physicians Edinb 2011; 41:361–5எஆசு:10.4997/JRCPE.2011.416
  13. François Marie Arouet de Voltaire (1778). "Letters on the English or Lettres Philosophiques".
  14. "Voltaire on Circassian Medicine: Inoculation". Circassian World. Archived from the original on 2012-06-08. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19. from வோல்ட்டயர் (1733). The Works of Voltaire. Vol. Vol. XIX (Philosophical Letters). {{cite book}}: |volume= has extra text (help)
  15. Hopkins, Donald R. (2002). The greatest killer: smallpox in history, with a new introduction. University Of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-35168-1.
  16. "Edward Jenner & Smallpox". The Edward Jenner Museum. Archived from the original on 28 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 13 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. An Inquiry into the Causes and Effects of the Variolae Vaccinae, Edward Jenner. Retrieved 17 November 2012
  18. Plett PC (2006). "Peter Plett and other discoverers of cowpox vaccination before Edward Jenner [Peter Plett and other discoverers of cowpox vaccination before Edward Jenner]" (in German). Sudhoffs Archiv 90 (2): 219–32. பப்மெட்:17338405. 
  19. Hammarsten J. F. et al. (1979). "Who discovered smallpox vaccination? Edward Jenner or Benjamin Jesty?". Transactions of the American Clinical and Climatological Association 90: 44–55. பப்மெட்:390826. 
  20. Grant, John (2007). Corrupted Science: Fraud, Ideology and Politics in Science. London: Facts, Figures & Fun. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904332-73-2.
  21. Carlos Franco-Paredes, Lorena Lammoglia, and José Ignacio Santos-Preciado (2005). The Spanish Royal Philanthropic Expedition to Bring Smallpox Vaccination to the New World and Asia in the 19th Century. 41. Clinical Infectious Diseases. பக். 1285–1289. doi:10.1086/496930. http://cid.oxfordjournals.org/content/41/9/1285.full. 
  22. அறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர். பழனியப்பா பிரதர்சு வெளியீடு, 2010
  23. World Health Organization (2001). "Smallpox".
  24. "Smallpox Zero". African Comic Production House, Johannesburg, South Africa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-620-43765-3. Archived from the original on 2012-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  25. "Smallpox".
  26. Jonathan Roy (November 2010). Smallpox Zero: An Illustrated History of Smallpox and Its Eradication. 16. Centers for Disease Control and Prevention. doi:10.3201/eid1611.101145. http://wwwnc.cdc.gov/eid/article/16/11/10-1145_article.htm. பார்த்த நாள்: 2013-08-19. 

மேலதிக வாசிப்புக்கு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edward Jenner
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_ஜென்னர்&oldid=3924717" இலிருந்து மீள்விக்கப்பட்டது