ஊனுண்ணித் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பூச்சியைப் பிடிக்க வளையும் டிரோசெரா கேப்பென்சிசு (Drosera capensis) என்ற தாவரத்தின் இலை

ஊனுண்ணித் தாவரம் (Carnivorous plant), என்பது சிறு விலங்குகளையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும். பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும். இத்தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளையும்கணுக்காலிகளையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு இத்தாவரங்கள் சிறப்பான வடிவங்கள் மற்றும் உறுப்புகளைப் பெற்றுள்ளன. இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒருவகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துக் கொள்கிறது. ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளை தாவரம் சீரணித்துக்கொள்கிறது.மண்ணில் ஊட்டச்சத்துக்கள் (குறிப்பாக நைட்ரசன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன. எனவே பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து நைட்ரசனைப் பெறுகின்றன.
ஹூக்கர் (J.D.Hooker) என்ற தாவரவியல் அறிஞர் பூச்சிகளைச் செரிப்பது என்பது விலங்குகளைப் போல தாவரங்களிலும் நடக்கிறது என்றார். மனிதனின் வயிற்றில் சுரக்கும் நொதிகள் போல தாவரங்களிலும் சுரக்கிறது. பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரஙக்ள் ஆறு குடும்பங்களையும் 16 பேரினமும் சுமார் 450 வகைச் செடிகளையும், 30 க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களும் 39 வகைச் செடிகளும் உள்ளன.

இத்தாவரங்கள் பற்றிய கதைகள்[தொகு]

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றிய பல கட்டுக் கதைகள் வெளி வந்துள்ளன. 1900 ஆம் ஆண்டு சுண்டெலிக்கூண்டு (BLadder wort) செடி முதலையைப் பிடித்து சாப்பிட்டதாகவும், வில்பொறிக் கூண்டு (veenas fly trap) செடி மனிதனைப் பிடித்துச் சாப்பிட்டதாகவும் ஒரு கட்டுக் கதை வெளி வந்தது.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடி, அதில் சிக்கிய யானையின் சதையையும், ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டு எலும்புக்கூட்டை மட்டும் தூக்கி எறிந்ததாகவும் , மனிதர்களைச் சுற்றி வளைத்து சத்தை உறிஞ்சிவிட்டு எலும்புகளைத் தூக்கி எறிந்து விடுவதாகவும் கதைகள் வந்துள்ளன. இவை எல்லாம் உண்மையல்ல. கற்பனையாக எழுதப்பட்டவை. உண்மையில் சுண்டெலிக்கூண்டு செடியின் பை 0.5 செ.மீ அளவே உள்ளது. வில்பொறிக்கூண்டுச் செடியின் இலை 6.செ.மீ நீளமே உள்ளது. இதுவரைக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு சிறிய சுண்டெலியும், ஒரு தேன் சிட்டுப் பறவையுமே ஜாடிச் செடியின் பையில் கிடைத்துள்ளன. எனவே இச்செடிகள் மிகச் சிறிய பூச்சிகளை மட்டுமே பிடிக்கின்றன என்பது மட்டுமே உண்மையானதாகும்.

வகைகள்[தொகு]

இத்தாவரங்கள் நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன. இவை தங்கள் மீது பூச்சிகள் ஊர்வதைக் கண்டு கொள்கின்றன. இவற்றில் உள்ள சுவாரணைக் கொம்புகள் சிறு பூச்சிகள் தன் மீது வந்தவுடன் மூடிக் கொள்கின்றன. இதன் செயல்பாடுகளை வைத்தும், அமைப்பை வைத்தும் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.

சாடி வடிவச்செடிகள்[தொகு]

இனிப்பான காகிதம் போன்ற அமைப்பு[தொகு]

பசை காகிதம் போன்ற அமைப்பு[தொகு]

வில்பொறி போன்ற அமைப்பு[தொகு]

சுண்டெலிக் கூண்டு போன்ற அமைப்பு[தொகு]

கொடுக்குச் செடிகள்[தொகு]

பூச்சியைப் பிடிக்கும் முறைகள்[தொகு]

இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிக வியப்பானவை. இரையைப் பிடிக்கும் ஐந்து முறைகள் இத்தாவரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:

  1. குழி மூலம் பிடித்தல் - செரிக்க வைக்கும் நொத‌ி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக் கொண்ட உருண்ட இலைகள் மூலம் பிடித்தல்
  2. பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்
  3. இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்
  4. வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்
  5. செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்நோக்கிய முட்களை பயன்படுத்திப் பிடித்தல்

ஊனுண்ணித் தாவரங்களின் பகுப்பு அட்டவணை[தொகு]

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

குடுவைத் தாவரம்[தொகு]

குடுவைத் தாவரம் (Nepenthes) அழகிய குடுவை போன்ற இலைகளைக் கொண்டது. குடுவைக்குள் மணமுள்ள இனிய திரவம் சுரக்கப்படும். இதனால் கவரப்படும் பூச்சிகள் உள்ளே நுழைகின்றன. குடுவையின் அமைப்பும் ஓட்டும் தன்மையுள்ள திரவமும் பூச்சியை வெளியே விடாது. செரிமானத்திரவத்தால் செரிக்கப்பட்டு நைட்ரசன் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நீர் சுழல் தாவரம்[தொகு]

நீர் சுழல் தாவரம் (Aldrovanda) திரோசிராசீயீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆல்டிரோவான்டா என்ற பேரினத்தில் அடங்கும் ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். ஆல்டிரோவான்டா பேரினத்தில் அடங்கும் தாவரவகையில் நீர்சுழல் தாவரம் மட்டுமே உள்ளது.

பனிப்பூண்டு[தொகு]

பனிப்பூண்டு அல்லது துரோசீரா (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரம். தாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம், நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும். இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன.

வில் பொறி[தொகு]

வில் பொறித் தாவரம் ஈரமான நீர்த்தேக்கப் பகுதிகளில் வளரும். ஒரு பூச்சி இதன் வண்ணத்தில் கவரப்பட்டு இலையின் மீது ஊர்ந்து செல்லும் போது இதன் உணர்ச்சியுள்ள முடியில் (Trigger) மேல் பட்டால் அந்தக் கணத்திலேயே இதன் இலையின் இரண்டு பகுதிகளும் மின்சாரம் பாய்ச்சியது போல மூடிக் கொள்ளும். இதை வில்பொறி அமைப்பு (Venus fly trap) என்று அழைப்பர்.

மேலும் காண்க[தொகு]

http://www.cascadecarnivores.com/gallery.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊனுண்ணித்_தாவரம்&oldid=3630895" இருந்து மீள்விக்கப்பட்டது