உள் எரி பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நான்கு வீச்சு உள் எரி பொறி. உந்தறையும், உந்தியும், மேலே உந்தறையின் இடப்புறம் எரிவளிமம் உள்ளே இழுக்க இணைக்கப்பட்ட குழாயும், எரிந்த வளிமம் வெளியே தள்ளிவிட மேலே வலப்புறம் கழிவுக் குழாயும் படத்தில் பார்க்கலாம்

உள் எரி பொறி (Internal combustion engine) என்பது ஒரு கொள்கலத்தினுள்ளே எரியக்கூடிய வளிமத்தால் இயக்கப்படும் ஓர் இயந்திரம் (எந்திரம்). இந்த வளிமம் எரியும் பொழுது விரிவடைவதால் இவ்வியந்திரம் இயங்குகிறது,

உறுப்புகள்[தொகு]

இந்த இயந்திரத்தில் ஓர் உருளி போன்ற ஒரு கொள்கலம் உண்டு. இதற்கு உந்தறை என்றும் உந்துருளி என்றும் பெயர். இந்த உந்தறையின் உள்ளே அதன் உள் விட்டத்தில் மிகவும் நெருக்கமாகப் பொருந்தி மேலும் கீழுமாக நகரக் கூடிய வட்டத் தட்டு ஒன்று உண்டு இதற்கு உந்துத் தட்டு என்று பெயர். இந்த உந்துத் தட்டோடு இணைக்கப்பட்ட தண்டு ஒன்று நடுவேஉண்டு. இந்த தண்டை, உந்துத் தண்டு, உந்துலக்கை, அல்லது மேலும் கீழுமாக உலவி வருவதால் உலக்கை என்னும் பெயர்களால் வழங்குவதுண்டு. இத்தண்டு பொருத்திய வட்டத் தட்டும் நடுத்தண்டும் சேர்ந்து உந்தி என்று பெயர் பெறுகின்றது.

நான்கு இயங்கு நிலைகள்[தொகு]

இயங்கு நிலை 1: உள்வாங்கு வீச்சு (Intake)[தொகு]

உள்ளே எரிவளிமமும் சிறிது காற்றும் கலந்து பாய்வதற்கு வழி ஒன்று வைத்து இருக்கிறார்கள். உந்தி நகர்ந்து உந்தறையில் இடம் பெரியதாகும் பொழுது, எரிவளிமமும், காற்றும் உந்தறைக்குள்ளே இழுக்கப்பட்டு உள்நுழையும். இதற்கு உள்வாங்கு வீச்சு என்று பெயர்.

இயங்கு நிலை 2: அமுக்கழுத்த வீச்சு (Compression)[தொகு]

அடுத்ததாக, உந்தி உந்தறைக்குள் நகர்ந்து எரிவளிமம் உள்ள இடத்தைச் சுருக்குவதால், உள்ளிருக்கும் எரிவளைமம் வெகுவாக அமுக்கப்பட்டு அழுத்தம் கூடுகின்றது. எனவே இதற்கு அமுக்கழுத்த வீச்சு என்று பெயர்.

Intake.JPG
Compression.JPG

இயங்கு நிலை 3: திறன் தரும் வீச்சு (Power (Combustion))[தொகு]

இவ்வாறு எரிவளிமம் அழுத்தப்படும் பொழுது, ஓரளவுக்கு மேல் அழுத்தம் மீறினால், இவ்வளிமம் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கும். அப்படி எரியத்தொடங்கும் வளிமம் விரிவடையத் தொடங்குகிறது. அப்பொழுது உந்தியை வலுவாய் தள்ளி தன் இடத்தை விரிவடையச் செய்யும். இதுதான் திறன் தரும் வீச்சு.

இயங்கு நிலை 4: கழிவகற்று வீச்சு (Exhaust)[தொகு]

எரிவளிமம் எரிந்தவுடன், அதிலுள்ள ஆற்றல் ஒடுங்கிவிடும், எனவே, எரிந்து மீதமுள்ள கழிவு வளிமங்களை (இவை இன்னமும் சூடாக இருக்கும்) உந்தி நகர்ந்து அமுக்கி உந்தறையோடு இணைக்கப்பட்ட ஒரு கழிவாய் குழாயின் வழியாக தள்ளிவிடும். இதுதான் கழிவகற்று வீச்சு.

இப்படியாக இந்த நான்கு வீச்சுகளில், உந்தி ஒன்று உந்தறையில் மேலும் கீழுமாக நகருமாறு செய்து, இந்த உந்தியின் மேலும்-கீழுமான நகர்ச்சியை சுழல் நகர்ச்சியாக மாற்றி இப்பொறியை வண்டிகளில் பொருத்தி பயன் படுமாறு அமைத்திருக்கிறார்கள்.

Combustion.JPG
Exhaust.JPG

மேற்கண்ட நான்கு இயங்கு நிலைகளில் திறன் தரும் வீச்சில் எரிபொருளைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் ஆற்றலை வைத்தே மற்றைய மூன்று இயங்கு நிலைகளும் நடைபெறுகின்றன.

இதன் இயக்கத்தைப் வலப்பக்க படத்தில் காணலாம்.

வீச்சு உள் எரி பொறி இயக்கம். வளிமம் அமுக்கி அழுத்தபடுவதும், எரிவதும், விரிவடைவதும் காணலாம். எரிவளிமம் உள்ளே இழுக்கப்படுவதும், எரிந்தபின் வெளியே உந்தித் தள்ளப்படுவதும் காணலாம்

உள்ளெரி பொறியின் வரலாறு[தொகு]

2-வீச்சு எந்திரம்

முதல் முதலாக ஆக்கப்பட்ட உள்ளெரி பொறிகளில், எரிவளிமம் அமுக்கி அழுத்தப்பட்டு எரியச் செய்யவில்லை. இதுதான் தற்கால உள்ளெரி பொறிக்கும், முன்னர் இருந்த பொறிகளுக்கும் உள்ள தலையாய வேறுபாடு. இப்பொறியின் வளர்ச்சிக்குத் துணையான, தொடர்பான நிகழ்ச்சிகள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

 • 1509: லியொர்னாடோ டா வின்ச்சி வளிம அழுத்தம் இல்லாத ஒரு எந்திரத்தைப்பற்றி விளக்கி இருக்கிறார்.
 • 1673: கிறிஸ்ட்டியான் ஹைஜீன்சு இவரும் வளிம அமுக்க அழுத்தம் இல்லாத ஒரு எந்திரத்தைப்பற்றி விளக்கி இருக்கிறார்.
 • 1780களில் அலெசான்றொ வோல்ட்டா என்னும் இத்தாலியர் மின்பொறியினால் ஐதிரசனும் (நீரதை) காற்றும் கலந்த வளிமக்கலவையை வெடிக்கச் செய்து, ஓருந்தியைத் தள்ளுமாறு ஒரு விளையாட்டுத் துப்பாக்கி செய்தார். இத்துப்பாக்கியில் இருந்து அம்புபோல் பாய்ந்தது ஒரு தக்கை (cork).
 • 17வது நூற்றாண்டு: ஆங்கிலேயராகிய சர். சாமுவேல் மோர்லாண்டு என்பார் துப்பாக்கி வெடிமருந்தை பயன்படுத்தி நீரிரைக்கும் இரைப்பி செய்தார்.
 • 1794: ராபர்ட்டு ஸ்ட்ரீட்டு (Robert Street) என்பாரும் வளிம அமுக்க அழுத்தம் இல்லாத ஒரு எந்திரத்தை செய்தார். இது ஏறத்தாழ ஒரு நூற்றண்டு ஓங்கி நிலைத்து இருந்தது.
 • 1823: சாமுவேல் பிரவுன் என்பார் வளிம அமுக்க அழுத்தம் இல்லாத ஒரு எந்திரத்தை படித்து ஒரு காப்புரிமமும் (patent) பெற்றுள்ளார்.
 • 1824: சாடி கார்னோ என்னும் பிரெஞ்சு அறிஞர் வெப்ப இயக்கவியலின் அடிப்படையை நிறுவினார். பொறி திறம்பட இயங்க எரி வளிமம் அமுக்கழுத்தம் பெறவேண்டியத் தேவையை இவருடைய அறிவியல் கோட்பாடுகள் தெளிவாகவும் வலுவாகவும் உணர்த்தியது.
 • 1826 ஏப்ரல் 1: அமெரிக்கராகிய சாமுவேல் மோரி (Samuel Morey) வளிம அமுக்க அழுத்தம் இல்லாத ஒரு எந்திரத்திற்கு காப்புரிமம் பெற்றார்.
 • 1838: ஆங்கிலேய புத்தியற்றுநர் (inventor) வில்லியம் பார்னெட் அவர்கள் பெற்ற காப்புரிமத்தில்தான் முதல் முதலாக வளிம அழுத்தத்தைப் பயன்படுத்தியதற்கான சாயல் தெரிகின்றது என்பார்கள். போதிய பயன்பாடு இருந்ததா என தெரியவில்லை.
 • 1854: இத்தாலியர்கள் யூஜெனியோ பார்சாந்தி (Eugenio Barsanti) என்பவரும் ஃவெலிசே மட்டேயுச்சி (Felice Matteucci ) என்பாரும் முதன்முதலாக நல்ல திறனோடு இயங்கும் செயல்வழி உள்ளெரி பொறியைச் செய்து இலண்டலில் காப்புரிமம் (எண்: 1072) பெற்றார்கள். ஆனால் இது பெருவாரியாக உற்பத்தி செய்யபடவில்லை.
 • 1860: சான் யோசப்பு எட்டியொன் லென்வா (1822 - 1900) (Jean Joseph Etienne Lenoir) நீராவி எந்திரத்தை மிகவும் ஒத்திருந்த ஒர் உள்ளெரி பொறியைச் செய்தார். இதுவே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செயப்பட்ட உள்ளெரி பொறி என்று கூறப்படுகிறது.
 • 1862: நிக்கலோசு ஓட்டோ (Nikolaus Otto) வளிம அமுக்க அழுத்தம் இல்லாத ஓர் உள்ளெரி பொறி செய்தார், ஆனால் இது திறன் மிக்கதாக இருக்கவே, அதிக வரவேற்பு பெற்றிருந்தது.
 • 1870: வியன்னா நகரில் சீக்பிரீடு மார்க்கசு (Siegfried Marcus) அவர்கள் முத முதலாக நகர வல்ல உள்ளெரி பொறியை ஒரு கட்டை வண்டியில் பொருத்தி செய்தார்.
 • 1876: நிக்கலோசு ஓட்டோ (Nikolaus Otto) கோட்லீபு டைம்லர் (Gottlieb Daimler) மற்றும் வில்லெம் மேபாக் (Wilhelm Maybach) என்பவர்களோடு கோட்டாக உழைத்து பயன்படக்கூடிய 4-வீச்சு (இதற்கு ஓட்டோ சுழற்சி என்று பெயர்) கொண்ட எந்திரத்தைப் படைத்தார். செரும்மனிய அறமன்றங்கள் பல தன்மைகளை ஒப்புக்கொள்ளாததால், உள்ளறையில் எரி வளிமம் அழுத்தம் உறுவது பொத்டுமையாகிவிட்டது.
 • 1879: கார்ல் பென்சு (Karl Benz) தானே தனியே உழைத்து ஓட்டோ அவர்களுடைய 4-வீச்சு எந்திரத்தின் அடிப்படியில் ஒரு புதிய 2-வீச்சு எந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமம் பெற்றார். பின்னர் பென்சு 4-வீச்சு எந்திரம் செய்து அவருடைய தானுந்து வண்டிகளில் பொருத்தினார். இதுவே முதன் முதலாக உற்பத்தி செய்யப்பட்ட தானுந்து.
 • 1892: ரூடோல்ஃவ் டீசல் (Rudolf Diesel) அவர்கள் டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
 • 1893 பெப்ரவரி 23: ரூடோல்ஃவ் டீசல் தன் ஆக்கத்திற்கு காப்புரிமம் பெறுகிறார்.
 • 1900: ரூடோல்ஃவ் டீசல் உலக கண்காட்சியில் தான் ஆக்கிய டீசல் எந்திரத்தை கடலை எண்ணையைக் கொண்டு ஓட்டிக் காட்டுகிறார்.

வான்கேல் என்ஜின்(Wankel engine)[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_எரி_பொறி&oldid=2130220" இருந்து மீள்விக்கப்பட்டது