கார்ல் பென்ஸ்
கார்ல் பென்ஸ் Karl Benz | |
---|---|
பிறப்பு | 25 நவம்பர் 1844 Mühlburg |
இறப்பு | 4 ஏப்பிரல் 1929 (அகவை 84) Ladenburg |
கல்லறை | Ladenburg |
பணி | பொறியாளர், புத்தாக்குனர் |
வாழ்க்கைத் துணை/கள் | பெர்த்தா பென்சு |
கையெழுத்து | |
கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் (நவம்பர் 25, 1844 - ஏப்ரல் 4, 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு மோட்டார் இயந்திரவியலாளரும் எந்திர வடிவமைப்பாளரும் ஆவார். இவரே "கசொலின்(gasolin)" எனப்படும் பெட்ரோல் எந்திரத்தைக் கண்டு பிடித்தவர் என கருதப்படுபவர். பேர்தா பென்ஸ் உடன் சேர்ந்து மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான 'மெர்சடிஸ் பென்ஸ்' ஐ நிறுவ காரணமானவர். 1879 ல் தனது முதல் இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றார். 1886 ல் தனது முதல் வாகனத்திற்கான காப்புரிமையைப் பெற்றார்.
ஆரம்ப வாழ்வு
[தொகு]கார்ல் பிரீட்ரிச் மைக்கேல் வைல்லன்ட், பாடன் எனும் நவீன ஜெர்மனி பகுதியில் ஜோசெபின் வைல்லன்ட், ஜோஹன் ஜார்ஜ் பென்ஸ் தம்பதிக்கு 25 ,நவம்பர் 1844 ல் பிறந்தார். இவரது இரண்டாம் வயதில் தந்தையை ரயில் விபத்தில் இழந்தார். தந்தையின் இழப்பிற்குப் பின்னர் வறுமையில் வாடினாலும் தாயார் நல்ல கல்வியே இவருக்குப் புகட்டினார். இவரது 15 ம் வயதில் இயந்திர பொறியியல் நுழைவுத் தேர்வில் தேறி 19 ம் வயதில் பட்டதாரி ஆனார்.
பட்டம் பெற்றதும் பல நிறுவனங்களில் இவர் வேலை செய்தார். அப்போது எல்லாம் பென்சின் கவனம் மிதிவண்டியையும் குதிரை வண்டியையும் எப்படி ஆள் பலம் இல்லாமல் இயக்குவது என்ற பார்வையிலேயே அமைந்தது. இவர் பல்வேறு பயிற்சி நிறுவனக்களுக்கு மாற வேண்டியிருந்தது. மேலும் பாலக் கட்டுமானம், இரும்பு சார்ந்த தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் சிறிது காலம் வேலை பார்த்தார்.
குடும்ப வாழ்வு
[தொகு]1872, ஜூலை 20, பெர்தா ரிங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு 5 பிள்ளைகளுக்குத் தந்தையானார்.
கண்டுபிடிப்புகளும், தொழில் முயற்சிகளும்
[தொகு]1871ஆம் ஆண்டில் தனக்கு 27 வயதாகும் போது ஆகத்து இரிட்டர் என்பவரோடு இணைந்து இரும்பாலை மற்றும் இயந்திரவியல் பட்டறையை மென்கெய்மில் உருவாக்க்கினார். இவருடைய மனைவி பெர்த்தா பென்ஸ் மற்றும் தனக்கும் சொந்தமான தொழிற்சாலையில் பல ஆய்வுகளில் ஈடுபட் டார். முதலில் இரு அடிப்பு இயந்திரத்தை(two stroke engine) வடிவமைத்து 1879 ல் காப்புரிமம் பெற்றார்.
பின்னர் வேக நிர்ணயத் தொகுதி, மின்கலம் மூலம் தீப்பொறியை உண்டாக்கும் கருவி(spark plug), எரிபொருள் வளிக்கலப்பி(carburetor), விடுபற்றி(clutch) , மோட்டார் வண்டி கியர்(gear shift), மோட்டார் வண்டியில் நீர் மூலம் குளிர்ச்சி உண்டாக்கும் சாதனம்(water radiator) போன்றவற்றிற்கு காப்புரிமம் பெற்றார்.
1883 ல் மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரீட்ரிச் வில்ஹெல்ம் எஸ்லிங்கேர் உடன் பென்ஸ் பென்சு அன்டு கம்பனி ரெய்னிசி காஸ்மோட்டாரென் ஃபேப்ரிக்கு (Benz & Company Rheinische Gasmotoren-Fabrik) எனும் பென்சு அன்டு சி (Benz & Cie) என அறியப்பட்ட நிறுவனத்தைத் தொடக்கினார்.
இதன் வெற்றி நான்கடிப்பு இயந்திரத்தைக் கொண்ட நவீன உத்திகளுடன் கூடிய வாகனம் 1885ல் பென்சின் உரிமம் பெற்ற மோட்டார் வேகன் எனப் பெயரிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே முதன் முதலாக அறிமுகப்படுத்தப் பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சொந்த சக்தியில் இயங்கும் வாகனமாகும்.
1886-1893 இடைப்பட்ட காலத்தில் 25 ‘மோட்டார் வேகன்’ வாகனம் உற்பத்தி செய்யப்பட்டது.
பென்சூம் சையும் குழுமம்
[தொகு]1889ல் 50 தொழிலாளர்களாக இருந்த பென்சூம் சையும் குழுமம் கம்பனி 1899ல் 430 தொழிலாளர்களைக் கொண்ட பாரிய நிறுவனமானது.
1893ல் கார்ல் பென்ஸ் தனது 2.2கிலோ வாட்டு உடன் இயங்கும் இருபயணிகள் வாகனமான 'விக்டோரியா' வை உருவாக்கினர். இதன் உச்சக்கட்ட வேகம் சுமார் 18 km/h ஆகும்.
பென்சின் வேலோ எனும் மோட்டார் வாகனம் 1894ல் பாரிஸில் இடம் பெற்ற உலகின் முதலாவது வாகனப் பந்தயத்தில் கலந்து கொண்டு 127 கிலோ மீட்டர்களை 10 மணி 01 நிமிடத்தில் ஓடிமுடித்து 14 வது இடத்தைப் பெற்றது.
உலகின் முதலாவது சரக்கூர்ந்து வகை வாகனத்தை 1895 ல் பென்ஸ் வடிவமைத்தார்.ஓர் வருடம் கழித்து தனது தட்டை எஞ்சின்னுக்கான காப்புரிமம் பெற்றார்.
1903 ம் ஆண்டு தனது மகன்மாரான யூகன் மற்றும் ரிச்சட் பென்சு அன்டு சி கம்பனியை விட்டு விலகினர். எனினும் ரிச்சட் அடுத்த வருடம் மீண்டும் இணைந்தார்.
அதே வருடம் கிட்டத்தட்ட 3840 வாகனங்கள் விற்பனையாகி உலகின் முதற்தர வாகன உற்பத்தியாளர் ஆனது.
பிளிட்சன் பென்சு
[தொகு]150கிலோ வாட்கள்(200 குதிரை சக்தி) சக்தி கொண்ட பிளிட்சன் பென்சு ஆனது 1909 ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 9, 1909ல் பிரான்சில் நடைபெற்ற பந்தயத்தில் 226.91 km/h எனும் உயர் வேகத்துடன் சாதனையை ஏற்படுத்தியது. இதன் பின்னரான தசாப்தத்தில் இதனை விஞ்ச வாகனம் இல்லை.
சி. பென்சு சோனே (1906-1923)
[தொகு]Benz & Cie. இன் இயக்குனராக இருந்த கார்ல் பென்ஸ் புதிய நிறுவனத்தைத் தொடங்க எண்ணினார். இதனால் தனது மனைவி மற்றும் மகன்மாருடன் மன்ஹெய்ம் நகரில் இருந்து 10 km தொலைவில் சி. பென்சு சோனே எனும் நிறுவனத்தை 1906 ல் ஆரம்பித்தார். இது பென்சு அன்டு சி. இன் நிர்வாகத்திற்கு உட்படாத ஓர் நிறுவனமாகும்.
1912 ல் சி. பென்சு சோனே நிறுவனத்தின் தனக்கு சொந்தமான அனைத்துப் பங்குகளையும் மகன் மார்களான யூகன் மற்றும் இரிச்சர்டுக்கு வழங்கினர். எனினும் Benz & Cie கம்பனியின் நிர்வாகப் பொறுப்பில் நீடித்தார்.
1914 ல் பென்ஸின் 70வது பிறந்த தினத்தன்று கார்ல்சியோ பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.
தையம்ளர்-பென்சு
[தொகு]முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெர்மனியின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக பென்சு அன்டு சி. நிறுவனம் நட்டத்தைச் சந்தித்தது. எனவே டி. எம். ஜி எனும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து தையம்ளர்-பென்சு ஆகியது. இதன் நிர்வாகக்குழுவில் இறக்கும் வரையில் கார்ல் பென்ஸ் உறுப்பினராக இருந்தார்.
நிறுவன இணைவின் காரணமாக DMG இன் புகழ்பெற்ற 1902 வெளியிடான மெர்சிடிசு-35 எச்.பி. ஆனது மெர்சிடிசு பென்சு(மெர்சிடிஸ்-பென்ஸ்) எனும் பெயர் பெற்றது. பின்னாளில் இதுவே இதன் வர்த்தகப் பெயர் ஆனது.
1927ல் டீசலில் இயங்கும் சரக்கூர்ந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது வாகன உற்பத்தியில் ஓர் மைல் கல்லாகும்.
இறுதிக் காலம்
[தொகு]ஏப்ரல் 4, 1929 இல், கார்ல் பென்ஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக லேடன்பேர்க்கில் உள்ள தனது வீட்டில் எண்பத்து நான்கு வயதில் காலமானார்.
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]-
கார்ல் பென்சின் பட்டறை, ஜெர்மனி
-
பென்சின் உரிமையுடைய மோட்டார்வாகனின் வண்டி, கி. பி. 1885ல் கட்டப்பட்டது
-
பென்சின் உரிமையுடைய மோட்டார்வாகனின் கணற்சிப்பொறி
-
உலகின் முதல் ஓட்டுநர் உரிமம், கார்ல் பென்சுக்கு ஆகத்து 1, 1888ல் கொடுக்கபொபட்டது
-
முனைவர் கார்ல் பென்சின் தானுந்து அருங்காட்சியகம்
-
கார்ல் என்டு பெர்தா பென்சு
-
பெர்தா பென்சு சென்ற வழியின் அலுவல் முத்திரை, உலகில் முதல் தானுந்து சென்ற பாதை. இவ்வழியில் பென்சின் உரிமையுடைய மோட்டார்வாகனின் தானுந்து சென்றது
-
உலகின் முதல் எரிபொருள் நிலையம், சிட்டி பார்மசி, ஜெர்மனி