அல் கசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசாலி (அல்கசெல்)
أبو حامد الغزالي
பட்டம் ஹுஜத் உல்-இசுலாம்[1]
பிறப்பு 1058
துசு பாரசீகம், செல்யூக் பேரரசு
இறப்பு டிசம்பர் 19, 1111 (அகவை 52–53)
துசு பாரசீகம், செல்யூக் பேரரசு
காலம் நடுக்காலம் (இசுலாமியப் பொற்காலம்)
பிராந்தியம் செல்யூக் பேரரசு (நிசாப்பூர்)[2]:292
அப்பாசியக் கலீபகம்(பக்தாத்)/(எருசலேம்)/(திமிஷ்கு)[2]:292
மதப்பிரிவு சுன்னி இசுலாம்
சட்டநெறி ஷாஃபி
சமய நம்பிக்கை அசாரியர்
முதன்மை ஆர்வம் சூபித்துவம், இறையியல் (கலாம்), மெய்யியல், ஏரணம்

அபு அமிட் முகம்மத் இபின் முகம்மத் அல் கசாலி (Abū Ḥāmid Muḥammad ibn Muḥammad al-Ghazālī, 1058-1111) என்னும் முழுப்பெயர் கொண்ட அல் கசாலி ஒரு முஸ்லிம் இறையியலாளரும், நீதிச் சபையினரும், மெய்யியலாளரும், அண்டவியலாளரும், உளவியலாளரும் ஆவார். பாரசீகத்தின் கோராசான் மாகாணத்தைச் சேர்ந்த துசு என்னும் இடத்தில் ஹிஜ்ரி ஆண்டு 450 இல் பிறந்தார்.[9] இவர் சுன்னி இசுலாமியச் சிந்தனை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்.

இவர் பிறந்த காலகட்டத்தில் பாரசீகத்தில் அரசியல் சர்ச்சைகளும், அறிவியல் சர்ச்சைகளும் நிறைந்திருந்தன. அப்பாசிய ஆட்சிக்காலத்தில் பல சிற்றரசுகள் தோன்றி, மத்திய ஆசியாவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி சுயமாக இயங்கத் தொடங்கியிருந்தன. அதேபோல் சமய, ஆன்மீக துறைகளிலும் கருத்து மோதல்கள் தோன்றி இயக்கப்பிரிவுகளும் அதிகரித்திருந்தன.

ஈரான் துசு என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச் சின்னம், அல்-கசாலியின் சமாதி இங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

அப்பாசிய கலீபா மாமூனின் ஆட்சிக் காலத்தில் கிரேக்க தத்துவ நூல்கள் பல அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கிரேக்க தத்துவத்தின் நேரடி ஆதிக்கத்திற்கு உட்பட்டனர். கிரேக்க தத்துவக் கண்ணோட்டத்தில் இறைவனை விளங்கி விமர்சிக்க முற்பட்ட "முஹ்தசிலா" இயக்கம் இக்காலத்திலேதான் பிரபல்யம் பெற்று வளர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில் "முஹ்தசிலா" இயக்கத்திற்கு எதிராக பல சிந்தனை ரீதியான இயக்கங்கள் தோன்றி, அதைத் தோற்கடித்தாலும், முஸ்லிம் மக்களிடையே பகுத்தறிவுக்கு எதிரான சிந்தனைகள் வலுவடைந்திருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகம் சிந்தனை ரீதியாகக் குழம்பியிருந்த இக்காலத்திலே இமாம் கசாலி (ரஹ்) இசுலாமிய தத்துவத்தின் தூயதன்மையை வெளிக்கொணரும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்.

இவர் ஐயுறவுக் கோட்பாட்டின் முன்னோடிகளுள் ஒருவர். இவர் எழுதிய மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்னும் நூலில், தொடக்ககால இசுலாமிய மெய்யியலின் பாதையையே மாற்றினார். பண்டைய கிரேக்க மற்றும் எலெனியச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த இசுலாமிய மீவியற்பியல் சார்ந்த மெய்யியலின் பாதையை, இறைவன் அல்லது தேவதைகளினால் தீர்மானிக்கப்படுகின்ற காரணத்தையும் விளைவையும் அடிப்படையாகக் கொண்ட இசுலாமிய மெய்யியல் நோக்கித் திருப்பினார்.

சடப்பொருட்களின் யதார்த்த நிலையை அறிய முனையும் ஆர்வம் இளமையிலிருந்தே இமாம் கசாலியிடம் காணப்பட்டது. தனது அறிவு, அனுபவம் ஆகியவற்றின் துணையுடன் ஒரு மாபெரும் தத்துவக் கோட்பாட்டை முன்வைத்தார். பிரபஞ்சம், மனிதன், மனித வாழ்வு ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பை விளக்குவதற்கு அவர் முயற்சித்தார்.

கசாலி தனது "இஹ்யாவு உலூமுத்தீன்" என்னும் பிரசித்தி பெற்ற நூலில் 'மனிதன் மிருகங்களைப் போன்று புலனுறுப்புக்களைப் பெற்றிருந்தாலும், அவனுக்கே உரிய அறிவு, தெரிவு, சுதந்திரம் போன்றவை அவனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. அறிவு பொருட்களைப் பகுத்தறிந்து நோக்கி அவற்றின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றது' என்கிறார்.

பயன்பாடு சாரா அறிவியல் பிரிவுகளை அல் கசாலி விமர்சித்தார். இது இசுலாமிய சூழலில் அறிவியல் வளர்ச்சியை நல்வுபடுத்தியதற்கு பங்களித்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Hunt Janin, The Pursuit of Learning in the Islamic World, p 83. ISBN 0786419547
  2. 2.0 2.1 Griffel, Frank (2006). Meri, Josef W.. ed. Medieval Islamic civilization : an encyclopedia. New York: Routledge. ISBN 0415966906. 
  3. Frank Griffel, Al-Ghazali's Philosophical Theology, p 77. ISBN 0199724725
  4. Frank Griffel, Al-Ghazali's Philosophical Theology, p 75. ISBN 0199724725
  5. Andrew Rippin, The Blackwell Companion to the Qur'an, p 410. ISBN 1405178442
  6. Frank Griffel, Al-Ghazali's Philosophical Theology, p 76. ISBN 0199724725
  7. The Influence of Islamic Thought on Maimonides Stanford Encyclopedia of Philosophy, June 30, 2005
  8. Karin Heinrichs, Fritz Oser, Terence Lovat, Handbook of Moral Motivation: Theories, Models, Applications, p 257. ISBN 9462092753
  9. "Ghazali, al-". The Columbia Encyclopedia. பார்த்த நாள் 17 டிசம்பர் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_கசாலி&oldid=1732928" இருந்து மீள்விக்கப்பட்டது