சரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேட்டி, புடவை முதலிய ஆடைநூலுடன் நெய்யப்படும் பொன், வெள்ளி இழைகள், சரிகை என்றழைக்கப்படுகிறது. பொன், வெள்ளி முதலிய மாழைகளை மெல்லிய கம்பிபோல இழைத்துச் சரிகை தயாரிக்கிறார்கள். சரிகை இழைகள் மிகவும் மெல்லியனவாக இருக்கும்.

பட்டுச் சேலை முந்தானையில் கட்டப்படும் சரிகையினாலான குஞ்சலம்.

சரிகை நெசவு[தொகு]

வெகுகாலத்திற்கு முன்பே சரிகை நெசவுத்தொழில் முதன்மைப் பெற்று வந்திருக்கிறது. கலைநுட்பம் வாய்ந்த பழமையான தொழில்களில் இதுவும் ஒன்றாகும். உயர்ந்த இரகப்பட்டுத்துணிகளின் தலைப்பில் பொன் சரிகை இழைகளை இணைத்து நெய்யும் வழக்கம் இந்தியாவில் வழங்கி வந்துள்ளது. சரிகை இழைகளைக் கொண்டு தனிப்பட்டப் பொன்னாடையோ, வெள்ளி ஆடையோ நெய்து விடலாம். ஆனால் சரிகையை நூல், பட்டுப்போன்ற வேற்றிழைகளுடன் சேர்த்து நெய்யும் முறையே சிறந்ததாகத் தெரிகிறது. பொன், வெள்ளிச் சரிகைகளைப் பட்டோடு கலந்து நெய்யும் கலை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே சிறப்புற்று இருந்து வந்திருக்கிறது.

சரிகை நெசவு முறைகள்[தொகு]

  1. முழுவதும் பொன் அல்லது வெள்ளி இழைகளால் நெய்தல்
  2. முந்தானையை பொன் அல்லது வெள்ளி இழைகளாலும், பிற பகுதிகளை பட்டு நூலாலும் நெய்தல்
  3. ஒரு முழுமையாத் துணியை முழுமையாகப் பட்டு நூலாலும், ஆங்காங்கே பொன், வெள்ளியாலும் கலைநயத்துடன் நெய்தல்
  4. வெள்ளி இழைகளுக்கு பொன் முலாம் பூசி நெய்தல்

சரிகையின் தரம்[தொகு]

பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான ஜரிகையின் தரமானது, 245 கிராம் ஜரிகை ஒரு மார்க் என அழைக்கப்படுகிறது. இதில் 191 கிராம் வெள்ளி (78 சதவீதம்), 51.55 கிராம் பட்டு(21 சதவீதம்), 2.45 கிராம் தங்கம் (1 சதவீதம்) இருக்கும்.[1]

சரிகையின் அளவு[தொகு]

உடல் முழுவதும் சரிகை வேலைபாடுகள் உள்ள ஒரு பட்டுப்புடவையை நெசவு செய்ய சுமார் 390 லிருந்து 450 கிராம் வரை சரிகைகள் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. தினமலர் செய்தித்தாள்.பதிவு செய்த நாள்: பிப் 20,2011 02:25 பார்த்த நாள் 18.03.2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிகை&oldid=3638121" இலிருந்து மீள்விக்கப்பட்டது