உள்ளடக்கத்துக்குச் செல்

இந்து சமய அறநிலையத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hindu Religious and Charitable Endowments Department
இந்து சமய அறநிலையத் துறை
துறை மேலோட்டம்
அமைப்பு1960
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
வலைத்தளம்https://hrce.tn.gov.in/

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என, 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1][2] அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

பணிகள்

[தொகு]
  • இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகம் முதலியன.
  • கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை.[2]
  • இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.[3]

கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள்

[தொகு]

தமிழக அரசின் நிதிநிலையறிக்கை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை 47ல் 2019-2020 கொள்கை விளக்ககுறிப்பில் குறிப்பிட்டுள்ள விபரங்களின் படி, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய மற்றும் சமண சமய நிறுவனங்கள்.[4]

எண் நிறுவனத்தின் வகை எண்ணிக்கை
1 திருக்கோயில்கள் 36,612
2 திருமடங்கள் 56
3 திருமடத்துடன் இணையாத திருக்கோயில்கள் 57
4 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் 1721
5 அறக்கட்டளைகள் 189
6 சமணத் திருக்கோயில்கள் 17
கூடுதல் 38652

இவற்றின் பெயர்களில் 2 நூற்று 4 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 நூற்று 53 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், 21 ஆயிரம் ஏக்கர் மானாவரி நிலங்களும், சேர்த்து நாநூற்று 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், 33,665 மனைகளும் உள்ளன. இந்த நிலங்கள், கட்டிடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையை செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33,665 மனைகளில் மட்டும் 5 நூறாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர்.

நிறுவனங்களின் வகைப்பாடு

[தொகு]
எண். சமய நிறுவனங்கள் வகைப்பாடு[4] நிறுவனத்தின் ஆண்டு வருமானம் நிறுவனங்கள் எண்ணிக்கை நிறுவனங்களின் சதவீதம்
1 பட்டியலைச் சாராத நிறுவனங்கள்

சட்டப்பிரிவு-49(1)

ரூ.10,000/-க்கு குறைவாக 34,099 88.2
2 பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள்

சட்டப்பிரிவு-46(i)

ரூ.10,000/-லிருந்து ரூ.2,00,000/-வரை 3,550 9.2
3 சட்டப்பிரிவு-46(ii) ரூ.2,00,000/-லிருந்து ரூ.10,00,000/-வரை 672 1.8
4 சட்டப்பிரிவு-46(iii) ரூ.10,00,000/-மும் அதற்கு மேலும் 331 0.8
கூடுதல் 38652 100

வரலாறு

[தொகு]

கிழக்கிந்தியக் கம்பெனி 1810, 1817 ஆம் ஆண்டுகளின் சட்டம் இயற்றி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தில் நுழைந்தது.[5] பின்னர் கிறித்தவ மிசினரிகளின் எதிர்ப்பால் 1841 முதல் 1862 வரை கோவில் நிர்வாகத்தில் அரசு விலகிக் கொண்டது.[6] அரசின் கண்காணிப்பிலிருந்து கோயில்கள் விடுபட்டதும், நாணயம் இல்லாத அறங்காவலர்கள் கோயில் நிதி, நகைகளை தன் வசப்படுத்தினர். கோயில் நிலங்களை குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுதல், விற்றல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.[7] மேலும் நிலையான நிதி ஆதாரமில்லாமல் பல கோயில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன. இதன்பிறகு வழிபாட்டிடங்களில் ஊழல் அதிகரித்ததாகக் கூறி, 1863 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் போடப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்து சமயக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தொடங்கியது.[8] சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு காலத்தில் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் மதராசு இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927 உருவானது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைக்குப் பின்னர், ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மதராசு இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு அரசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.[6]

இந்து அறநிலையத்துறை அரசாணையின் (எண்.25 ​2008) படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிலங்களை விற்கவோ,​​ நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை உள்ளது.ஆனால் இந்தத் தடையை விலக்கி வணிக நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நீண்டகாலக் குத்தகைக்கு விட இந்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு 2010 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இச்செயல் விமர்சிக்கப்பட்டது.[9]

நிர்வாக அமைப்பு

[தொகு]

இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர் உள்ளார். ஆணையருக்கு உதவியாகத் துறையின் தலைமை அலுவலகத்தில் 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 2 உதவி ஆணையாளர்கள் செயல்படுகின்றனர். இத்துறை நடத்தும் திருக்கோயில் திங்களிதழை நடத்த ஆசிரியர் ஒருவர் உள்ளார்.

மேலும் இத்துறையில் சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகிரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. தற்போது இத்துறையில் 1336 மட்டுமே பணியாளர்கள் உள்ளனர்.

மண்டலம் மற்றும் கோட்ட ஆணையாளர்கள்

[தொகு]

தமிழக அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேற்கொள்ள தமிழ்நாட்டில் 11 மண்டல இணை ஆணையர்களும், 28 கோட்ட உதவி ஆணையாளர்களும் உள்ளனர்.

செயல் அலுவலர்கள்

[தொகு]

மேலும் கோயில்களின் அன்றாட நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ள செயல் அலுவலர் பதவியில் 11 இணை ஆணையாளர்கள், 9 துணை ஆணையாளர்கள், 27 உதவி ஆணையாளர்கள், மற்றும் செயல் அலுவலர் நிலை-1 பதவியில் 66 பேரும், செயல் அலுவலர் நிலை-2 பதவியில் 112 பேரும், செயல் அலுவலர் நிலை-3 பதவியில் 250 பேரும், செயல் அலுவலர் நிலை-4 பதவியில் 154 பேரும் உள்ளனர்.

நகை சரிபார்ப்பு அலுவலர்கள்

[தொகு]

தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை மதிப்பீடு செய்வதற்காகச் சென்னை தலைமையிடத்தில் இணை ஆணையர் நிலையில் ஒரு நகை சரிபார்ப்பு அலுவலரும், ஏழு இணை ஆணையர் மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையர் நிலையில் 6 நகை சரிபார்ப்பு அலுவலர்களும், நான்கு இணை ஆணையர் மண்டலங்களுக்கு, ஒரு உதவி ஆணையர் நிலையில் 4 நகை சரிபார்ப்பு அலுவலர்களும் உள்ளனர்.

தணிக்கை

[தொகு]

இந்து சமய அறநிலயத்துறையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை அலுவலருக்கு உதவியாக இரண்டு துணைத் தலைமைத் தணிக்கை அலுவலர்கள், 18 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், 28 உதவித் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மேலும் இணை ஆணையர்/செயல் அலுவலர்கள் உள்ள எட்டு திருக்கோயில்களில் 8 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், முதுநிலை கணக்கு அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர்.

அறங்காவலர் குழு

[தொகு]

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ், இந்து சமயத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்திட, பரம்பரை அறங்காவலர்கள் குழு, பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குழு என்று இரு வழிகளிலான அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தின் கீழான திருக்கோயில்களில், அத்திருக்கோயிலைத் தொடக்கக் காலத்திலிருந்து நிர்வாகம் செய்து வந்த பரம்பரையினர் குடும்பத்தினரிலிருந்து அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்குழுவின் வழியாகத் திருக்கோயில் நிர்வாகம் மேலாண்மை செய்யப்படுகிறது. இத்திருக்கோயில்களில் குறிப்பிட்ட திருக்கோயிலின் நிர்வாகத்திலிருந்த பரம்பரையினர் தவிர்த்து, பிறர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதில்லை.

பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படி அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும், மூன்று அறங்காவலர்களுக்குக் குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு அதிகமில்லாமலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த அறங்காவலர் குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. [10]

திருக்கோயில்களின் சொத்து விவரம்

[தொகு]

2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்களின் விவரங்கள் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.[11] இந்த இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத் திருக்கோயில்களின் அசையா சொத்து விவரத் தகவலும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் [2] பின்னரே இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் சொத்து விவரங்கள் சேர்க்கப்பட்டன. தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சொத்து விவரங்கள் இருப்பினும் அவற்றை தொழில்நுட்பக்கோளாறு காரணமாகப் பார்க்க இயலாது.[11]

யு.டி.ஆர் திட்ட செயலாக்கத்தின் போது, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழுள்ள இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாற்றப்பட்டு பின்னர் அந்த நிலங்களை மீட்க மதுரை, கோவை நகரங்களைத் தலைமையாகக் கொண்டு இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து செயல்படுகின்றது.[2]

திருக்கோயில்களுக்கு வாடகை செலுத்தாமை

[தொகு]

மிகக்குறைவான வாடகையே வசூலிக்கப்படும் திருக்கோயில் சொத்துகளை அனுபவிப்போர் திருக்கோயிலுக்கு வாடகை செலுத்தாமல் இருக்கும் தொகை பல திருக்கோயில்களில் லட்சங்களையும், கோடிகளையும் தாண்டுகின்றது. இவ்வாறு பாக்கி வைப்போரில் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.

  • 2011ஆம் வருடத் தகவல் படி அமிர்தாஜ்ஜன் நிறுவனம் மட்டும் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு வைத்துள்ள பாக்கி ஆறு கோடிக்கும் மேல் (ரூபாய் 6,45,70,697).[12]
  • 2012 ஆம் ஆண்டு விவரப்படி, சென்னை சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலுக்கு வரவேண்டிய வாடகைபாக்கி 90 லட்சம் ரூபாய்.[13]
  • 2012 ஆம் ஆண்டு விவரப்படி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குக் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாயும், நாராயணன், 3.12 லட்சம் ரூபாயும் பாக்கி வைத்துள்ளனர்.[14]
  • சென்னையின் முக்கியப்பகுதிகளில் அமைந்துள்ள திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில், திருவொற்றியூர் சிவன் கோயில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் தகவல்கள் தெரியப்படுத்தப்படுகின்றன.
  • ஊட்டியில் 14 லட்சம் ரூபாய் வரை பாக்கி.[15]

மற்றவகை

[தொகு]
  • திருப்போரூர் முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை, அபகரிக்கும் முயற்சியில் கோயில் ஆதீனமும் சிலரால் கடத்த முயற்சிக்கப்பட்டார்.[16]
  • சென்னை, கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 "கிரவுண்ட்' நிலத்தை மீட்க கோரிக்கை எழுப்பப்பட்டது.[17]

கணக்கில் சேர்க்கப்படாத 1000 கோடி ரூபாய் சொத்துகள்

[தொகு]

கொடைக்கானலைச் சார்ந்த வி.என்.ஏ.எஸ்.சந்திரன் எனும் பக்தர் 2003 மார்ச்சில் தனது ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்தைப் பழனி முருகன் கோயிலுக்குச் சேருமாறு உயில் எழுதி பதிவு செய்து அதன் பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பியும் அந்தச் சொத்துகள் இதுவரை பழனி முருகன் கோயில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், வி.என்.ஏ.எஸ் காலணி நிறுவன 90 சதவீத பங்குகள் உட்பட பல சொத்துகள் இதில் அடங்கும்.[18]

நிலம் கையகப்படுத்தல்

[தொகு]
  • திருக்கோயில் நிலங்கள் சமத்துவபுரம் அமைக்க, பேருந்து நிலையம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக என்று பலவிதங்களில் கையகப்படுத்தப்படுகின்றது.[19]

நில மீட்பு நடவடிக்கைகள்

[தொகு]
  • நாகர்கோயிலில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிலம்

நாகர்கோயில் பார்வதிபுரம் கே.பி.சாலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கத் திட்டமிடப்பட்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் தலைமையில் மீட்கப்பட்டு ’கோயில் நிலம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.[20]

கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்

[தொகு]

இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும், 22600 கட்டடங்களிலும், 33665 மனைகளும் உள்ளன. இந்த நிலங்கள், கட்டடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையைச் செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவில் இடத்தில் நீண்டகாலமான குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய முயற்சி செய்து வருகிறது. விரைவில் பட்டா வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்.

அரசாணை 318

[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குடிமனையும் பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறப்பு அரசாணை வெளியிடும். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு 30.8.2019 அன்று அரசாணை 318 வெளியிடப்பட்டது. அதன் சாராம்சங்கள்:[21]

  • ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்குச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்குவது.
  • நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பட்டா வழங்குவது.
  • கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமானங்கள் அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதிமுறைகளுக்குட்பட்டு, தகுதியான நபர்களுக்குவீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுடன் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாகத் தொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்ப்புகள்

[தொகு]

அரசாணை வெளிவந்து சில நாட்களிலேயே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் இடத்திற்குப் பட்டா வழங்கும்வகையில் அரசாணை வெளியிட்டது தவறு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; எனவே அரசாணை 318-ஐ ரத்து செய்யவேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அரசாணைக்கு 22.11.2019 அன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது .கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புச் செய்து குடியிருப்போரிடமிருந்து உரிய தொகை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் திட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.[22][23] மேலும் தமிழகக் கோவில்களுக்குச் சொந்தமான 5 இலட்சம் ஏக்கர் விளைநிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குத்தகை பாக்கி 25 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றததில் தெரிவித்துள்ளார்.[24]

ஆதரவுகள்

[தொகு]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு புறம்போக்கு, கோயில் மடம், வக்ப் போர்ட், கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போருக்குக் குடிமனைப் பட்டாவும், குடிமனை இல்லா தோருக்கு இலவச மனைப் பட்டாவும், சாலையோரம், நீர், நிலை புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கக்கோரி 26 நவம்பர், 2019 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.[25]

2004ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் தமிழக அரசின் திட்டமும்

[தொகு]
  • 2004ம் ஆண்டு கோவில் இடம் விற்பனை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கோவில் இடங்களை எக்காரணம் கொண்டும் இலவசமாக விற்கக்கூடாது எனவும், கோவில் இடங்களுக்கு ஏதாவது ஒரு தொகையைத் தீர்மானித்து அந்த விலைக்குத்தான் விற்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
  • தமிழக அரசின் அரசாணை 318லும் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்குவதாக எங்கும் jகுறிப்பிடவில்லை
  • மாறாக எந்தக் கோவில் பெயரில் இடம் உள்ளதோ அதை ஆய்வு செய்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம், வருவாய்த்துறை நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அறநிலையத்துறை அரசாணை 200ஐ பின்பற்றி உரிய தொகையை அரசே செலுத்தியபிறகுதான் அந்த இடங்களைக் கையகப்படுத்திப் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளது. (கிராமப்புறங்களில் 3 சென்ட், நகரங்களில் 1.5 சென்ட்)

நவம்பர் 2020-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு

[தொகு]

தனியார் நிறுவனம் அல்லது தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை தவறிவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் நவம்பர் 2020 அன்று வழங்கிய தீர்ப்பில் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னைக்கு அருகிலுள்ள நீலங்கரை அருகே உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் நவீன மீன் சந்தை மற்றும் மீன் உணவகத்தை நிறுவுவதற்கு மீன்வளத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தார். கோவில் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிக்கப்படக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பண்டைய இந்துக்களின் பண்பாட்டை அடையாளம் காண்பதற்கான ஆதாரமாக மட்டுமல்லாமல் கலை, அறிவியல் மற்றும் சிற்பத் துறையில் உள்ள திறமைகளைப் பற்றிய பெருமை மற்றும் அறிவின் சான்றாகவும், ஆன்மீக நடவடிக்கைகளுக்கான ஒரு வழியாகவும் இருப்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும், இந்து சமய நிறுவனங்களின் சொத்துக்கள், குறிப்பாகக் கோயில்கள், அவற்றின் மேம்பாட்டிற்காக அதிக வருமானத்தை ஈட்டுவதற்காக முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி கூறினார்.[26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tn.gov.in/tamiltngov/department/tamil.htm
  2. 2.0 2.1 2.2 2.3 தினமணி; ஏப்ரல் 30; 2014; கோயில் அசையா சொத்து விவரப் பட்டியல்: தூத்துக்குடி மாவட்ட தகவலும் இடம்பெற வேண்டும்
  3. "மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது". மாலைமலர். https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/14113257/1217979/Elephants-Rejuvenation-Camp-start-in-Mettupalayam.vpf. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2018. 
  4. 4.0 4.1 https://www.tn.gov.in/ta/documents/dept/32/2019-2020 கொள்கை விளக்கக் குறிப்பு - இந்து சமய அறநிலையத்துறை - 2019-2020
  5. The Regulation Act VII of 1817. கிழக்கிந்தியக் கம்பெனி. 1817.
  6. 6.0 6.1 பழனியப்பன், அழ. முத்து. "கோயில்களை அரசு நிர்வகிப்பது நல்லதா, இல்லையா? - ஒரு முன்னாள் அதிகாரியின் அலசல்". bbc.com. https://www.bbc.com/tamil/india-43014930. பார்த்த நாள்: 14 December 2018. 
  7. "கோயில்களைக் கண்காணிப்பதிலிருந்து அரசு விலக வேண்டுமா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  8. Religious Endowment Act XX of 1863. பிரிடிஷ் அரசு. 1863.
  9. Staff (4 February 2010). "கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: பாஜக". https://tamil.oneindia.com. {{cite web}}: External link in |work= (help)
  10. இந்து சமய அறநிலையத்துறை வலைத்தளம் - நிருவாகம் - அறங்காவலர்களை நியமனம் செய்ய அதிகாரவரம்பு
  11. 11.0 11.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  12. "MYLAPORE TIMES » Kapali Temple officers keen to recover leased, rented properties".
  13. "district news - சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்- Dinamalar". www.dinamalar.com.
  14. "Names realesed non payers of temple - சபாஷ்: கோவில்களுக்கு பாக்கி வைத்திருப்பவர் பெயர்கள் அம்பலம்- Dinamalar". www.dinamalar.com.
  15. "DISTRICT NEWS - கோவில் சொத்துக்களை அனுபவிப்பவர்கள் வாடகை பாக்கி- Dinamalar". www.dinamalar.com.
  16. Chakra (7 October 2010). "ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்". https://tamil.oneindia.com. {{cite web}}: External link in |work= (help)
  17. "Devottee's request to rescue Kapaleeswarar temple land worth Rs. 180 - ரூ.180 கோடி கபாலீஸ்வரர் கோவில் இடம்: மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை- Dinamalar". www.dinamalar.com.
  18. "பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?". Dinamalar. 9 December 2014.
  19. Staff (31 October 2008). "சமத்துவபுரத்துக்காக கோவில் நிலம்?-இ.முன்னணி எதிர்ப்பு". https://tamil.oneindia.com. {{cite web}}: External link in |work= (help)
  20. http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/09/25/நாகர்கோவில்-அருகே-திருச்செ/article2447955.ece
  21. "வீட்டுமனை: புதிய அரசாணையும் - தீர்வும் - வீ.அமிர்தலிங்கம்". theekkathir.in.
  22. Sep 21, TNN; 2019; Ist, 10:28. "Madras HC slams government on patta for encroachers of temple land - Chennai News - Times of India". The Times of India. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  23. Oct 30, TNN; 2019; Ist, 4:32. "Government determined to give away temple land to squatters - Chennai News - Times of India". The Times of India. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  24. "கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு அங்குலம் ஆக்கிரமிப்பை கூட அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்". Polimer News.
  25. அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்குக! சிபிஎம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் தீக்கதிர், 27 நவம்பர், 2019, பக்கம் 2
  26. Madras High Court raps HR&CE Department for failing to protect temple land

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_சமய_அறநிலையத்_துறை&oldid=4090905" இலிருந்து மீள்விக்கப்பட்டது