உள்ளடக்கத்துக்குச் செல்

யானைகள் புத்துணர்வு முகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுமலை புத்துணர்வு முகாமில் பங்கேற்கும் யானை

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு ஆகும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம் 2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

முதுமலை தேசிய பூங்கா

[தொகு]

நீலகிரி மலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெப்பக்காடு புத்துணர்வு முகாம்

[தொகு]

முதுமலை பூங்காவைச் சார்ந்த புலிகள் காப்பகம் அமைந்துள்ள தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு 2011 திசம்பர் 14ஆம் நாள் தொடங்கி, 2012 சனவரி 30ஆம் நாள் முடிய 48 நாள்கள் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.[1].

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்

[தொகு]

தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடைபெற்ற முகாம், பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேக்கம்பட்டி ஊராட்சியின் பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யானைகள் முகாம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு முறையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் காட்டு யானைகள் வருகையைக் கண்டறிய 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க 1.50 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் பாகன்கள், முகாமில் பணிபுரியும் ஊழியா்கள் ஆகியோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

11-ஆவது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றுப் படுகையில் 14 டிசம்பர் 2018 (வெள்ளிக் கிழமை) அன்று துவங்கியது. [2]12-வது யானைகள் சிறப்பு முகாம் 15 டிசம்பர் 2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவங்கியது.[3]

மருத்துவ உதவி

[தொகு]

முகாம் நுழைவு வாயில் பகுதியில் யானைகளுக்கு சோடியம் கார்பனேட் கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. கால்களில் காயம் உள்ள யானைகளுக்கு நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

யானைகளுக்கு உணவு, உடற்பிடிப்பு, நடைபயிற்சி

[தொகு]

யானைகளுக்குப் புத்துணர்வு வழங்கும் முகாமின் செயல்பாடுகளுள் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல், நடைபயிற்சி கொடுத்தல் உட்பட பல கூறுகள் இருந்தன. யானைகளின் எடைக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டது. சோறு, கம்பு, பாசிப்பயிறு, உப்பு, புல், வெல்லம் கலந்து உணவு யானைகளுக்கு ஊட்டப்பட்டது. உணவு உருண்டையில் சூரணம் எனப்படும் சீரணத்திற்கான இயற்கை உணவு கலந்து வழங்கினர். தினமும் காலை, மாலை நேரத்தில் யானைகளுக்கு எளிய நடை பயிற்சி வழங்கப்பட்டது. யானைகளை மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபின் அவற்றிற்குக் குளியல் நடத்தினர். யானைகளை முதலில் ஆற்றில் படுக்கவைப்பர். பின்னர் அவற்றின் தசைகளைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் வகையில் அவற்றிற்கு உடற்பிடிப்பு (massage) அளிக்கப்பட்டது. யானைகளின் உடல் நலன் தொடர்பாகத் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். கோவில் யானைகள் மக்கள் கூட்டத்தில் வாழ்ந்து பழகியவை. அவற்றிற்கு புத்துணர்வு முகாம் அனுபவம் புதுமையான ஒன்று. தெப்பக்காட்டில் அவை இயற்கையான வன சூழ்நிலையில் வசிப்பதால் அவற்றின் மனநிலை நிறைவாக இருக்கும்.

ஆதாரம்

[தொகு]
  1. யானைகள் புத்துணர்வு முகாம் - தினகரன், திசம்பர் 14, 2011, பக். 6 (நாகர்கோவில் பதிப்பு).
  2. 11-வது யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்
  3. 12-வது கோயில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம்