விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 5, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்துக்கும் பெயர் பெற்றிருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். இடையே களப்பிரர் ஆட்சியில் வீழ்ச்சியைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு அவர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சான்று. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்தன. குலசேகர பாண்டியனின் ஆட்சியில் பாண்டி நாடு உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்துள்ளார். மேலும்...


நீள்வட்டம் என்பது ஒருவகையான கூம்பு வெட்டு ஆகும். கூம்பு வடிவொன்றை, தளம் ஒன்று அதன் அடியை வெட்டாமல் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான ellipse என்பது ἔλλειψις -elleipsis என்ற கிரேக்கச் சொல்லிருந்து உருவானது. கூம்பை வெட்டும் தளம், கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக அமையுமானால் கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டத்துக்குப் பதில் வட்டமாக இருக்கும். ஒரு உருளையை அதன் முக்கிய சமச்சீர் அச்சுக்கு இணையாக இல்லாத ஒரு தளத்தால் வெட்டும்போதும் ஒரு நீள்வட்டம் கிடைக்கும். இரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தொலைவுகளின் கூட்டுத்தொகை எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாகவும் நீள்வட்டம் அமையும். இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்கள் எனப்படுகின்றன. மேலும்...