மார்க்கோ போலோ
| மார்க்கோ போலோ Marco Polo |
|
மார்க்கோ போலோவின் உருவப்படம் (16ம் நூற்றாண்டு ஓவியம்) |
|
| பிறப்பு | ஏறத்தாழ 1254 வெனிசு |
|---|---|
| இறப்பு | சனவரி 8 1324 (அகவை 69) வெனிசு, வெனிசியக் குடியரசு |
| நினைவிடம் | சான் லொரென்சோ தேவாலயம், வெனிசு |
| பணி | வணிகர், நாடுகாண் பயணி |
| அறியப்படுவது | மார்க்கோ போலோவின் பயணங்கள் |
| பெற்றோர் | தந்தை: நிக்கொலோ போலோ |
| வாழ்க்கைத் துணை | டாண்டா படோவர் |
மார்க்கோ போலோ (Marco Polo, கிபி 1254 - சனவரி 8, 1324) ஒரு இத்தாலிய வணிகராவார். இவர் மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.
பொருளடக்கம் |
[தொகு] கிழக்கு நோக்கிய பயணம்
1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார்[1]. குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோப்போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்கு செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்கு குப்ளாய்கான் தங்கத்திலான அரசமுத்திரையை வழங்கினான். இந்த முத்த்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது.
[தொகு] மீண்டும் வெனிஸ் நோக்கிய பயணம்
பெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணைப்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.
இவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயனித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையறிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலிய பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார். இதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர்வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார். இறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்.
மொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும்.
[தொகு] சிறையில் புத்தகம் உருவாக்கம்
1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார்.
பலரும் இவரின் பயனக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.
[தொகு] விடுதலையின் பின்னர்
1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
சிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது.
1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்கபோலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார்.
மார்க்கப்போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது.
[தொகு] உசாத்துணைகள்
[தொகு] மேலும் வாசிக்க
- Daftary, Farhad (1994), The Assassin legends: myths of the Ismaʻilis (2 ed.), I.B. Tauris, pp. 213, ISBN 9781850437055
- Hart, H. Henry (1948), Marco Polo, Venetian Adventurer, Kessinger Publishing
- Otfinoski, Steven (2003), Marco Polo: to China and back, New York: Benchmark Books, ISBN 0761414800
[தொகு] வெளி இணைப்புகள்
- குற்றன்பேக் திட்டத்தில் மார்க்கோ போலோவின் பயனங்கள் (ஆங்கிலத்தில்)
- National Geographic Marco Polo: Journey from Venice to China
- In the Footsteps of Marco Polo: A Journey through the Met to the Land of the Great Khan