முக்கால்புள்ளி (தமிழ் நடை)
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும்பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும் செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும் கருத்துத் தெளிவு துலங்கவும் படிப்பவரின் அக்கறையைத் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.[1][2][3]
நிறுத்தக்குறிகளுள் புள்ளி என்பது அடிப்படையானது. அது கால்புள்ளி (comma), அரைப்புள்ளி (semicolon), முக்கால்புள்ளி (colon), முற்றுப்புள்ளி (full stop), புள்ளி (point), முப்புள்ளி (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.
முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்
[தொகு]எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது அரைப்புள்ளி குறிக்கின்ற இடைவெளியைவிட மேலும் சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க முக்கால்புள்ளி பயன்படுகிறது. ஒரு வாக்கியத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேறுபடுத்திக் காட்ட அரைப்புள்ளி பயன்படுகிறது என்றால், முக்கால்புள்ளி ஒரு சொற்றொடரைத் தொடர்ந்து வரும் பகுதி அச்சொற்றொடரின் கருத்தை மேலும் விரிவாக்கி, தெளிவுபடுத்தி, விளக்கியுரைப்பதைக் குறிக்கிறது.
முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) செய்தியை அறிமுகப்படுத்தும் என்னவென்றால் போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- தலைவரைச் சந்தித்ததும் எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த கூட்டம் எப்போது?
- 2) தலைப்புபோல் பொதுவாகக் கூறப்பட்டதற்கும் அதன் விரிவாகக் கூறப்பட்ட விவரங்களுக்கும் இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."
- 3) வரையறையை அல்லது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் என்பது, என்றால் போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- சான்றோர்: அறிவில் சிறந்தோர்.
- 4)கூற்றை அறிமுகப்படுத்தும் கூறியதாவது போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுதல் முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- ஆசிரியர்: மூவேந்தர் யார்?
- மாணவர்: சேர சோழ பாண்டியர்.
- 5) விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- பெயர்: வைரமுத்து
- ஊர்: திருவண்ணாமலை
- 6) ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- இயக்கம்: மணியன்
- இசை: பாணன்
- 7) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் தலைப்பை முதன்மைப்படுத்திக் கூறும்போது அந்தத் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றுக்கும் இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- வரலாறு காணா நிலநடுக்கம்: ஈரானில் பத்தாயிரம் பேர் பலி
- 8) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் இடத்தையும் நிகழ்ச்சியையும் தொடர்புபடுத்தும்போது அவற்றுக்கு இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- சென்னை: தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
- 9) விவிலிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது அல்லது அவற்றை அடிக்குறிப்பில் இடும்போது அதிகாரம் வசனம் எனப் பிரிப்பதற்கு முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- "இயேசு, 'விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த வாழ்வு தரும் உணவு நானே' என்றார்" (யோவான் 6:51)
- "இயேசு, 'உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனை வேண்டுங்கள்' என்றார்" (மத்தேயு 5:44)
- 10) நேரம் குறிப்பிடும்போது இத்தனை மணிக்கு என்று கூற மணிக்கும் மணித்துளிக்கும் இடையே முக்கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- காலை 10:30க்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.
- பேருந்து மாலை 6:45க்குப் புறப்படவிருக்கின்றது.
சான்றுகள்
[தொகு]1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Colon". The Punctuation Guide. Archived from the original on 11 November 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "punctuation". The Economist Style Guide. Archived from the original on 2021-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "How to Cite the Bible*. Guide for Four Citation Styles: MLA, APA, SBL, CHICAGO" (PDF). jbu.edu. John Brown University. Archived from the original (PDF) on 2021-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.