சதம் (நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது.

பின்னணி[தொகு]

1897 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 10 சதம் பெறுமதியான வெள்ளி நாணயக் குற்றி. பெறுமதி தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதற்காக அக்காலத்திய ஒரு இந்திய ரூபாய் 100 சதமாக வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான முதல் நாணயங்கள் பிரித்தானிய இந்திய அரசின் கல்கத்தாவிலிருந்த (இன்றைய கொல்கத்தா) நாணயச் சாலையில் வார்க்கப்பட்டு 1872 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தக் காசுகளில் இவற்றின் பெறுமானங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும், சிங்களத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1890 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 1/4 சதம் பெறுமதியான செப்பு நாணயக் குற்றி. பெறுமதி தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

1890 ஆம் ஆண்டில், இந்திய வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக, உள்ளூர் வெள்ளி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசு முன்மொழிந்தது. ஆனால் இந்தியாவின் ரூபாய் தொடர்ந்தும் சீர்தரமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பகுதிகள் மட்டும் 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட வெள்ளி நாணயங்களால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்றும் கருத்து நிலவியது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் நாளில் இந்த முன்மொழிவை இலங்கையின் சட்டசபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையின் நாணய முறைமை பின்வருமாறு அமைந்திருந்தது:

  • இந்திய ரூபாய் இது 100 சதங்களுக்குச் சமமாகக் கணிக்கப்பட்டது.
  • 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட இலங்கைத் துணைநிலை (subsidiary) வெள்ளிக் குற்றிகள்.
  • 5, 1, 1/2, 1/4 சதங்கள் பெறுமதி கொண்ட செப்பு நாணயக் குற்றிகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதம்_(நாணயம்)&oldid=1635394" இருந்து மீள்விக்கப்பட்டது