பிறை அடைப்பு (தமிழ் நடை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று பிறை அடைப்பு = round brackets, open brackets, brackets (UK), or parentheses (U.S.) = ( ) ஆகும். இது பொதுவாக ஒரு செய்தியைக் கூடுதலாகத் தருவதற்கு உதவும் குறியாகும். வலது பிறை அடைப்பு இடது புறம் நோக்கியும், இடது புற பிறை அடைப்பு வலப்புறம் நோக்கியும் திறக்கும்.
பிறை அடைப்பு ( )
[தொகு]கூறப்படும் கருத்திற்கு மேலாகக் கூடுதல் தகவல் தரும்போது பிறை அடைப்பு இடலாம்.
- 1) விரித்துக் கூறுதல், விளக்கிக் கூறுதல், கூடுதல் தகவல் போன்றவற்றைக் குறிக்க வாக்கியத்துக்குள் பிறை அடைப்பு இடலாம்.
- எடுத்துக்காட்டு:
- கல்லூரியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக இரு மாணவர்கள் (வயது 22, 23) கைதுசெய்யப்பட்டார்கள்.
- செவ்வாய்க்கிழமை (மார்ச்சு 22) மாலை இசை விருந்து நிகழ்ந்தது.
- பத்துவயதுக்குட்பட்ட சிறுவர் அனைவரும் (25 பேர்) நலமே போய்ச் சேர்ந்தார்கள்.
- 2) ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைத் தமிழ் முறையில் எழுதும்போது அவற்றிற்கு இணையான ஆங்கிலத் தேதியை உள்ளடக்கிக் காட்ட பிறை அடைப்பு இடலாம்.
- எடுத்துக்காட்டு:
- நிகழும் பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் 28ஆம் நாள் (11.6.1999) வெள்ளிக்கிழமை
- 3) தமிழ்ச் சொல்லை அடுத்துப் பிறமொழிச் சொல் தரப்படும்போது பிறமொழிச் சொல்லைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துகாட்டுகள்:
- உயிர்வளி (oxygen)
- நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic)
- 4) தமிழில் எழுத்துப் பெயர்ப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் மூலமான பிறமொழிச் சொல்லைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- அமெரிக்க அதிபர் ரானல்ட் ரேகன் (Ronald Reagan) குடியரசுக்கட்சியைச் சார்ந்தவர்.
- 5) மேற்கோளின் ஆதார நூல் மற்றும் அதன் விவரங்களைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- இமயமலையை வருணிக்கும் பாரதியார் 'விண்ணை இடிக்கும் மலை இமயம்' (பாரதி பாடல்கள், செந்தமிழ் நாடு, 9) என்று கூறுவார்.
- 6) நாடகம், திரைப்படம் முதலியவற்றின் உரையாடல் பகுதிகளில் காட்சி அமைப்பு, பாத்திர வருணனை, நடிப்பு முறை முதலியவற்றுக்கான குறிப்புகளைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- கண்ணன்: (ஏளனச் சிரிப்போடு) யார் வீரன் என்பது விரைவில் தெரிந்துவிடும்!
- 7) தொடர் முறையில் வரும் கதையின் அல்லது கட்டுரையின் இறுதியில் அது முடிவுபெற்றது அல்லது தொடர்கிறது என்பதைக் காட்டும் சொற்களை உள்ளடக்க பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டுகள்:
- (தொடரும்)
- (முற்றும்)
- 8) வரிசையாகக் காட்டப்படுபவற்றுக்குத் தரப்படும் எண் அல்லது எழுத்தை உள்ளடக்க ஒரு புறத்தில் அல்லது இரு புறங்களிலும் பிறை அடைப்பு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டுகள்:
- 1); 2); 3)
- அ); ஆ; இ)
சான்றுகள்
[தொகு]1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.