உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை பெரிய பச்சைக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் ஒரு இலங்கை பெரிய பச்சைக்கிளி (ஆண்)

இலங்கை பெரிய பச்சைக்கிளி (large ceylonese parakeet) உயிரியல் பெயர்: Psittacula eupatria eupatria) என்பது பெரிய பச்சைக்கிளியின் ஐந்து கிளையினங்களில் ஒன்றாகும்.[1][2] இது மேற்கு இந்தியா, தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

புறா அளவுடைய இப்பறவை சுமார் 52 செ.மீ. நாளம் இருக்கும். பெண் பறவை ஆண் பறவையை விட அளவில் சற்று சிறியது. இதன் அலகு வளைந்து சிவப்பாக இருக்கும். விழிப்படலம் வெளிர் மஞ்சளாக நீலச் சாம்பல் வண்ண உள்வட்டத்தோடு காட்சியளிக்கும். இதன் கால்கள் ஈய நிறத்தில் இருக்கும். உடல் முழுக்க பச்சை நிறத்தில் இருந்தாலும் இதன் தோள்பட்டையில் சிவப்பு திட்டுகள் தெளிவாக காணப்படும். மேலும் கழுத்தில் இளஞ்சிவப்பு உரோசா நிறத்தில் ஒரு வளையம் காணப்படும். கீழ் அலகிலிருந்து கழுத்துக் கோடுவரை ஒரு கரும்பட்டைக்கோடு வரும். பெண் பறவைக்கும் முதிர்ச்சியடையாத ஆண் பறவைக்கும் கழுத்தில் வளையமும், கரும்பட்டைக் கோடும் இருக்காது.[3]

பரவலும் வாழிடமும்

[தொகு]

இப்பறவை மேற்கு இந்தியா, தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக மரங்களடர்ந்த தோப்புகள், இலையுதிர் காடுகள், ஈரமான காடுகள் போன்ற பகுதிகளை சார்ந்து வாழும். மலைகளில் 900 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.[3]

நடத்தை

[தொகு]

இந்தக் கிளிகள் மூன்று முதல் நான்கு வரையிலாக ஒன்றாக திரியக்கூடியன. இரவில் இலைகள் மிக்க மரங்களில் ஐந்து முதல் 50 வரையான பறவைகள் கூட்டமாக பிற பறைவைகளோடு சேர்ந்து தங்கும். எப்போதும் ஆரவாரம் செய்தபடி இருக்கும். மெல்ல இறக்கையடித்து விரைவாக சீராக செல்லும்.

இதன் முதன்மை உணவாக பழங்களும், தானியங்களும் உள்ளன. பலாசு, முள் முருங்கை ஆகிய மரங்களில் பூக்கள் மலரும் பருவத்தில் அம்மரங்களின் பூக்களில் உள்ள தேனை விரும்பி பிற பறவைகளோடு சேர்ந்து உண்ணும். அலகால் அம்மலர்களின் இதழ்களை வெட்டி எறிந்து அதன் பின்னர் அதில் உள்ள தேனைக் குடிக்கும்.

உரத்த குரலில் கியாக், கியாக், கியாக், கியாக் என்றோ கியார் என்றோ கத்தும். வளர்ப்பவர்களிடம் இருந்து சில சொற்களை பேச கற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. சில வேடிக்கை செயல்களை செய்து காட்டவும் பழகி கொள்ளும்.

இனப்பெருக்கம்

[தொகு]

இவை திசம்பர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை தென்னை போன்ற மரங்களில் குடைந்து பொந்து செய்து முட்டை இடும். மரங்கொத்தி, குக்குறுவான் போன்றவற்றின் பழைய கூட்டையும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. மனித நடமாட்டமுள்ள பழைய கோபுரங்கள், கோட்டைகள், வீடுகள் போன்றவற்றில் உள்ள பொந்துகளில் முட்டை இடுவது உண்டு. இவை மூன்று முதல் நான்கு வரையிலான வெண்மையான முட்டை இடுகின்றன. 19 முதல் 21 நாட்கள் வரை அடைகாக்கும். ஆண், பெண் என இரு பறவைகளும் கூட்டாக கூடமைத்து, அடைகாத்து, குஞ்சுகளைப் பேணும் இயல்புடையன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. del Hoyo, Josep; Nigel J., Collar; David A., Christie; Andrew, Elliot; Lincoln D.C., Fishpool (2014). HBW and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Vol. 1: Non-passerines. Barcelona: Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553941.
  2. Forshaw, Joseph M.; Knight, Frank (2010). Parrots of the World. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0643100572.
  3. 3.0 3.1 3.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 227–229.