ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை ஆகும்.
ஆலை தொடக்கம்
[தொகு]இது சுரங்கத்தொழில் மற்றும் உலோகங்களில் உலகளவில் ஈடுபடும் வேதாந்தா ரிசோர்செசு நிறுவனத்தின் அமைப்பாகும். 1991–1996 வரையிலான, செல்வி ஜெயலலிதா தலைமையிலான அஇ அதிமுக ஆட்சி காலத்தில், செம்பு உருக்கும் தொழிற்சாலைக்காக 1993இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[1]
உற்பத்தி
[தொகு]இங்கு செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றது.[2]
போராட்டம்
[தொகு]ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்.[3][4][5]
உற்பத்தி தடங்கல்
[தொகு]ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.[6][7][8][9][10]
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.[11]
அதன்படி, அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் (மே – 27 செப்டம்பர் 2014) ஆட்சிக்காலத்தில், மார்ச் 30, 2013 அன்று ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.[12]
விசவாயுக் கசிவு பாதிப்பு
[தொகு]அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.[13]
3 நட்சத்திர விருது
[தொகு]அதன் பின் (22 மே 2004 – 26 மே 2014) திரு. மன்மோகன் சிங் தலைமையிலான, இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிகாலத்திலான, 2013 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.[13] பின்னர் இயங்கிவரும் இந்த ஆலை இந்திய தொழில் கூட்டமைப்பிடம் இருந்து மூன்று நட்சத்திர விருதைப் பெற்றது.[14]
ஆலைக்கு எதிரான போராட்டம் 2018
[தொகு]தூத்துக்குடியில் வாழும் மக்கள் இத்தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டால் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்று, இத்தொழிற்சாலையை மூடக்கோரி பெப்ரவரி 05, 2018 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். பின்பு 40 தினங்களாக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மார்ச்சு 25, 2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் மற்றும் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 20,000க்கு அதிகமானோர் இத்தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.[15]
தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 மார்ச்சு 31, 2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது ,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்தது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.[சான்று தேவை]
மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 17 வயது பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த துப்பாக்கி சூடு மக்கள் பாதுகாப்பிற்காக நடந்தது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது.[16][17] இதைத் தொடர்ந்து மே 23, 2018 அன்று தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்தனர்.[18]
ஆலையை நிரந்தரமாக மூடல்
[தொகு]ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.[19][20] [21] [22]
ஆலையை திறக்க உத்தரவு
[தொகு]15 டிசம்பர் 2018, ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதுமில்லை என உத்தரவு பிறப்பித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை".தினமலர் (30 மார்ச்சு 2013)
- ↑ "sterlite-industries.com", www.sterlite-industries.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-23
- ↑ "தலையங்கம்:ஏன் இன்னும் தயக்கம்?".[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி (20 செப்டம்பர் 2012)
- ↑ "ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு". தினமணி (30 மார்ச்சு 2013)
- ↑ "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி வலியுறுத்தல்".தினமணி (30 மார்ச்சு 2013)
- ↑ "ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு!".விகடன் (30 மார்ச்சு 2013)
- ↑ "ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு".தினமணி (30 மார்ச்சு 2013)
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/sterlites-copper-smelter-unit-in-tn-shut-down/article4564051.ece Sterlite’s copper smelter unit in TN shut down The Hindu
- ↑ http://www.deccanherald.com/content/322671/vedantas-copper-smelting-plant-ordered.html
- ↑ "ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவு: அறிக்கை தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு".
- ↑ "ஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கொன்ற உச்ச நீதிமன்றம்!".
- ↑ "ஸ்டெர்லைட் ஆலை மூடல்: 5000 பேர் வேலையிழக்கும் அபாயம்".[தொடர்பிழந்த இணைப்பு] மாலை மலர்
- ↑ "ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் பைசல்".தினமணி (23 சனவரி 2014)
- ↑ "மிரளவைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்". புதிய தலைமுறை (27 மார்ச்சு 2018)
- ↑ "தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கலவரம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பாரதிராஜா எச்சரிக்கை". லங்காஸ்ரீ செய்திகள் (22 மே 2018)
- ↑ "தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு". மாலை மலர் (22 மே 2018)
- ↑ "தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 132 பேர் கைது; மக்கள் அச்சப்பட வேண்டாம்: காவல்துறை". தி இந்து (24 மே 2018)
- ↑ "நிரந்தரமாக மூடப்படுகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை..!".புதிய தலைமுறை. (மே 28 2017)
- ↑ ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல் - சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர்![தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு! பரணிடப்பட்டது 2018-12-17 at the வந்தவழி இயந்திரம் இந்நேரம்.காம் ( டிசம்பர் 15 2018)
- ↑ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது - நீதிமன்றம் தடை! பரணிடப்பட்டது 2019-02-26 at the வந்தவழி இயந்திரம் இந்நேரம்.காம் ( டிசம்பர் 22 2018)