உள்ளடக்கத்துக்குச் செல்

வி. முத்தழகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. முத்தழகு (பிறப்பு:1943) இலங்கையின் பிரபல மெல்லிசை, திரையிசைப் பாடகர். கண்டியில் பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது. 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

முத்தழகு கண்டி மாவட்டம், பேராதனையில் வெள்ளச்சாமி, சரசுவதி ஆகியோருக்கு 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பிறந்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்துடன் கொழும்பு, திம்பிரிகசாய என்ற இடத்தில் குடிபுகுந்தார். பம்பலப்பிட்டி புனித மேரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடக்கூடியவர். காரைக்குடியைச் சார்ந்த இவரைப் பாட்டு வாத்தியார் குடும்பம் என்று அழைப்பார்கள்.[1]

கலைத்துறை பிரவேசம்

[தொகு]

1963-இல் பாடசாலையின் சிங்களப் பிரிவில் நடைபெற்ற மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில், இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதே ஆண்டில் பாக்கித்தான், லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் உருது, சிங்கள, தமிழ் மொழிகளில் பாடினார்.

மெல்லிசைப் பாடல்கள்

[தொகு]

இலங்கை வானொலியில் மெல்லிசை பாடுவதற்கு வி.முத்தழகு தேர்வுபெற்றபின் 1971ல் தனது முதலாவது மெல்லிசைப்பாடலை இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றார். க. கணபதிப்பிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடலை பாடினார். தொடர்ந்து ஏராளமான மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலியில் பாடியிருக்கிறார். 1970 - 1980 காலப் பகுதியில், இலங்கை வானொலியின் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார்.

திரைப்படப் பாடல்கள்

[தொகு]

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். முதன் முதலில் புதிய காற்று படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார். இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறலாம். தொடர்ந்து கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, அநுராகம், எங்களில் ஒருவன், நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதயராகம் போன்ற படங்களில் பாடினார். புதிய காற்று 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 ஆண்டு இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணி பாடியிருக்கிறார். 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார். 'அஞ்சானா' என்ற படத்தில் விஜய குமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது. தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.

தனி நபர் இசை நிகழ்ச்சிகள்

[தொகு]

'சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றியவர். 1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் 'சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றியிருக்கிறார். 'சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் 'காதல் மொட்டுகள் மலர்கின்றன' என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறார்.

விருதுகள்

[தொகு]

1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான 'கலாபூஷணம்' விருதும் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு 'மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது. 'இன்னிசை மணி', 'கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும்.

புகழ்தந்த திரையிசைப் பாடல்கள்

[தொகு]
  • 'ஒஹோ என் ஆசை ராதா' -திரைப்படம்: புதியகாற்று இசை.ரி.எப்.லத்தீப். பாடல் வரிகள்- ஈழத்து இரத்தினம்
  • 'எண்ணங்களாலே. இறைவன் தானே' திரைப்படம்: அநுராகம். இசை- சரத் தசநாயக்கா

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._முத்தழகு&oldid=3149513" இலிருந்து மீள்விக்கப்பட்டது