விசுவநாத சுவாமி கோயில், பாலக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவநாத சுவாமி கோயில் நுழைவு வாயில்

விசுவநாத சுவாமி கோயில் இந்தியாவில், கேரளாவில்,பாலக்காட்டில் கலபாத்தி கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும். இக்கோயில் காசி விசுவநாதசுவாமி கோயில் என்றும் உள்ளூரில் குண்டுகோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில்தான் கேரளாவின் மிகப் புகழ் பெற்ற விழாவான கல்பாத்தி ரதோற்சவம் எனப்படுகின்ற தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த பழமையான கோயில் அமைதியான கல்பாத்தி ஆற்றின் ( நிலா நதி ) கரையில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கர்கவும், விசாலாட்சிக்காகவும் ( பார்வதியின் மற்றொரு பெயர்) அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கி.பி.15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியியைச் சேர்ந்தது. இக்கோயில் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது. [1]

பழமை மற்றும் வரலாறு[தொகு]

இக்கோயிலில் கொடிமரத்திற்கும் நந்தி மண்டபத்திற்கும் நடுவில், கோவிலுக்கு வெளியே, ஆனால் கோயில் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு துண்டுக்கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு மலையாள சகாப்தம் 600 [1424-25 AD] இல் பாலக்காட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இட்டிக்கொம்பி அச்சன் என்பவரால் அளிக்கப்பட்ட கொடைகளைப் பதிவு இதில் உள்ளது. இதன் அடிப்படையில் நோக்கும்போது இக்கோயில் அதற்கு முன்னதாகவே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

கோயில் அமைப்பு[தொகு]

கிழக்கு கோபுரத்திற்குச் செல்லும் பதினெட்டு படிகளுக்கு கீழே இந்தக் கோயில் உள்ளது. இக்கோயிலின் தென் மேற்கில் பழைய கல்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், சாத்தாபுரம் கிராமதைச் சேர்ந்த பிரசன்ன மகா கணபதி கோயில், கிழக்கில் பாண்டிராண்டம் தெருவின் க்ஷிப்ரபிரசாத மகா கணபதி கோயிலும், புதிய கல்பாத்தி கிராமத்தின் மந்தகர மகா கணபதி கோயில், கிழக்கு மேற்கு திசையில் கோவிந்தராஜபுரம் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்கள் உள்ளன.கிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் சொக்கநாதபுரம் சொக்காதர் கோயில் உள்ளது. கோயிலுக்குள் நுழையும் போது வலது பக்கம் இரண்டு ஆலமரங்கள் உள்ளன. முதல் ஆல மரத்தின்கீழ் நாகர்கள் உள்ளன. இதுவே இக்கோயிலின் தல மரம் ஆகும். "விஷ்ணு அம்சம்" என்று கருதி இந்த மரத்திற்கும் நாகத்திற்கும் பூசை செய்யப்படுகிறது.

கோயிலின் முன்புறம் கொடி மரம் உள்ளது. கோயிலுக்குத் தரப்பட்ட நிலம் பற்றிய செய்தி அடங்கிய கோயில் கல்வெட்டு கொடி மரத்தின் முன்பாக உள்ளது. அதன் அருகில் பத்ரலிங்கம், அதன் முன்பாக ஞான நந்திகேசுவரர் மூலவரை நோக்கிய நிலையில் உள்ளார். கோயிலின் எட்டு திருச்சுற்றுகளும் இந்திரன், அக்னி, யமன், நிருத்தி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகியோருக்கு உரியவையாகும். விசுவநாதசுவாமி குபேரரை நோக்கி கிழக்கு திசையில் உளளார். அதற்கு அருகே தெற்கில் விசாலாட்சி உள்ளார். விசுவநாதருக்கு முன்பாக நந்திகேசுவரர் உள்ளார். நந்திகேஸ்வரர் ஆத்மதத்வம், வித்யாதத்வம் மற்றும் சிவதத்வம் vன்ற மூன்று வடிவங்களைக் குறிக்கும் வகையில் உள்ளார்.

பூசைகள்[தொகு]

கோயில்களில் பொதுவாக இரு வகை பூசைகள் உண்டு. அவை ஆத்மார்த்தம் மற்றும் பரார்த்தம் எனப்படும். சங்கல்பத்தில் இவை வேறுபடுகின்றன. இங்கு நடக்கும் பூசை ஆத்மர்த்தம் ஆகும். மாயவரத்தில் உள்ள மயூரநாதர் கோயிலில் நடக்கும் பூசை முறையே இங்கு நடைபெறுகிறது. மாயவரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் இக்கோயிலின் முதல் பூசாரி ஆவார். தமிழ் ஆகம விதிப்படி பூசை நடக்கிறது. ஆகமங்களில் 28 வகைகள் உள்ளன. இந்த கோயிலில் காமிகாகமம் முறைப்படி பூசை நடந்து வருகிறது. காலை 5:45 மணி உஷா பூஜை, காலை 9:45 மணி உச்சிகால பூஜை, மாலை 5:45 மணி தீபாராதனை, இரவு 7:45 மணி அர்த்தஜாம பூஜை என்ற வகையில் ஒரு நாளைக்கு நான்கு முறை பூஜை நடத்தப்படுகிறது: . அர்த்தஜாம பூஜை மிக முக்கியமானதாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]