விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 22, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிபெரி எனப்படுவது தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோய். தயமின் வளர்சிதைமாற்றங்களில் சிறப்பான பங்கை ஆற்றுகின்றது. குளுக்கோசு போன்ற காபோவைதரேட்டு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சக்தியை உருவாக்கும் வினைத்தாக்கங்களுக்கு துணை நொதியமாகச் செயற்படுகின்றது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் உயிர்ச்சத்தின் பங்கு தேவையானது. பெரிபெரி நோயில் மிக்க களைப்படைதல், சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதயக்குழலியத் தொகுதி, நரம்புத்தொகுதி, தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி என்பவையும் பாதிப்படையும். தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், உடன் இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் என்பவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியைப் பிரதானமான உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழி ஏற்படுத்தும். மேலும்..


இரட்டைமலை சீனிவாசன் (1859-1945) தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். வழக்கறிஞர். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார். 1891 இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார். 1900 இல் வேலை தேடித் தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டது. அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். 1921 இல் நாடு திரும்பினார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்த பொதுத் தேர்தலின் போது 1923 இல் சீனிவாசன், எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10 தாழ்த்தப்பட்டோர் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார். மேலும்..