விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 8, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலூர், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசு, இராஷ்டிரகூடர்கள், பல்லவர்கள், கர்நாடக இராச்சியம் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர். இது மாநிலத் தலைநகர் சென்னைக்கு மேற்கே சுமார் 145 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவிலும் திருவண்ணாமலைக்கு கிழக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத் துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில் துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன. மேலும்...


தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் ஆகும். தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது. மேலும்...