உள்ளடக்கத்துக்குச் செல்

வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:வாள்வச்சகோஷ்டம், காட்டாத்துறை, விளவங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பத்மநாபபுரம்
மக்களவைத் தொகுதி:நாகர்கோயில்
கோயில் தகவல்
மூலவர்:மகிஷாசுரமர்த்தினி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

பெயராய்வு

[தொகு]

இந்தக் கிராமத்தின் பெயராகிய வாள்வச்சகோஷ்டம் என்பது வாள்வைத்த கோட்டம் என்பதன் திரிபாகும். இவ்வூர்ப் பகவதி கோவிலில் உள்ள உருவம் கொற்றவையின் (மகிடாசுரமர்த்தினியின்) உருவம். கொற்றவை, போர்த் தெய்வம் ஆவார். எனவே, போரில் வென்ற அரசன் தனது வெற்றிவாளைக் கொண்டுவந்து, கொற்றவையின் முன்பாக இரத்தத்தைக் கழுவி வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி முற்காலத்தில் திருவாங்கூரை அரசாண்ட அரசன் ஒருவன் தன் வெற்றிவாளின் இரத்தக் கறையைக் கழுவி வைத்த கோவில் ஆகையால், இக்கோவிலுக்கு வாள்வைத்த கோட்டம் என்று பெயர் உண்டாயிற்று. பிறகு, இந்தக் கோவிலின் பெயரே இந்த ஊருக்கும் பெயராக அமைந்தது.

வரலாறு

[தொகு]

கொல்லம் ஆண்டு 795-இல் (கி.பி. 1620-இல்) இரவிவர்மன் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயிலின் முன்மண்டபத்தைத் திருவிக்கிரமன் என்பவர் கட்டியமைத்ததை கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலானது தரைமட்டத்திலிருந்து ஏறக்குறைய மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டைக் கடந்தால் இருபுறமும் திண்ணையுடன் கூடிய அனுப்பு மண்டபம் உள்ளது. அதை அடுத்து முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபமானது ஆறு தூண்கள் கொண்டதாக உள்ளது. இந்தத் தூண்களில் நடராசர், காளி, அர்சுனன், கர்ணன், இந்திரஜித், லட்சுமணன் ஆகியோரது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவாரபாலகிகள் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் சன்னதியில் அருள்பாளிக்கிறார். மேலும் இங்கு விநாயகர் உபசன்னதியும் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

விழாக்கள்

[தொகு]

கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்களுக்கு திருவிழா நடக்கின்றது. விழாவின் ஒன்பதாவது நாளன்று மாலையில் அம்மன் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு ஏழு முறை கோயிலைச்சுற்றி வலம் வருகிறாள். அதற்கு பள்ளி வேட்டை என்று பெயர். பத்தாவது நாள் காலையில் அம்மனுக்கு ஆறாட்டு நடத்தப்படும்.அத்துடன் திருவிழா முடிவடையும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved 19 பெப்ரவரி 2017.
  2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 14, பதிப்பு: 2014, பக்கம்: 127
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved 19 பெப்ரவரி 2017.
  4. முனைவர் தா.அனிதா (31 மே 2018). "வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 1 சூன் 2018.