வளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளரி
Pl0-028.jpg
வகைஎறியும் தடி
அமைக்கப்பட்ட நாடுஇந்தியா

வளரி (Valari) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால்[சான்று தேவை] பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி,[1] திகிரி,[1] பாறாவளை,[2] சுழல்படை,[3] கள்ளர்தடி,[4] படைவட்டம்[சான்று தேவை] என்றும் அழைத்தனர்.

அமைப்பு

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது.[5] பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.[5]

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.[5]

எறியப்படும் முறைகள்

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.[5]

பயன்

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.[5] தமிழ்நாட்டில் சிவகங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.[5] சிவகங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.[5]

கள்ளர்கள், மறவர்கள் மற்றும் வலையர்கள் வேட்டையின் போது வளரியை பயன்படுத்தினார்கள். நாட்டார் கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.[6] புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். [7]

சங்க இலக்கியத்தில் வளரி

சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."[1]

ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகள்

பெரிய மருது ஓடுகின்ற முயலை கூட வளரி கம்பால் அடித்து விடுவார் என்று மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் மருதுவின் வளரி வீசும் திறமையைப் பாராட்டி வியந்து கூறியுள்ளார். அதே போல ஜேம்ஸ் வெல்ஷ் சின்ன மருது , தனக்கு வளரி எறிவதைக் கற்றுக்கொடுத்ததாக ராணுவ நினைவுகள் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.[8]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 இராமச்சந்திரன், எஸ். (11-05-2006). "அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி". திண்ணை. Archived from the original on 2016-03-05. 13-03-2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)CS1 maint: unfit url (link)
  2. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 39, 19, பி-ம்.
  3. வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் (1957). தமிழ் இலக்கிய அகராதி. சென்னை. பக். 186. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl3kZMy.TVA_BOK_0003568. 
  4. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. http://www.tamilvu.org/node/127412. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 ஜெயபாரதி, எஸ். "Valari - An Unique Weapon of the Tamils". Archived from the original on 2013-08-24. 2021-02-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  6. Ethnographic Notes in Southern India. 1906. பக். 559. https://archive.org/details/in.ernet.dli.2015.39576/mode/2up. 
  7. The Book Of The Sword. 1884. பக். 38. https://archive.org/details/TheBookOfTheSword/page/n85/mode/2up. 
  8. மு . பாலகிருஷ்ணன். விடுதலைப் போரின் விடிவெள்ளிகள். சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட். பக். 66. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளரி&oldid=3690200" இருந்து மீள்விக்கப்பட்டது