ரச மட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குழல் வடிவ ரச மட்டம்
ஒரு கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்
பெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம்

ஒரு ரச மட்டம்குமிழி மட்டம் அல்லது மட்டம் என்பது அளவிடும் கருவி ஆகும். இது ஒரு பரப்பு கிடைமட்டமாக (மட்டம்) அல்லது செங்குத்தாக (தூக்கு குண்டு) இருப்பதை அறியப் பயன்படுகிறது. இக் கருவியின் பல்வேறு வகைகள் தச்சர்கள், கல் கொத்து வேலை செய்பவர், கொத்தனார், கட்டடங்களை விற்பனை செய்பவர், நில அளவியல் செய்பவர், ஆலை அமைப்பாளர்கள், உலோக வேலை செய்பவர் மற்றும் ஒளிப்படவியல் துறையில் உள்ளவர்கள் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் கண்ணாடியால் ஆன சிறு குழலே (vials) பயன்படுத்தப்பட்டது. இக் குழல்களில் பாதரசம் அல்லது  நிறமேற்றப்பட்ட மதுசாரம் நிரப்பப்பட்டு ஒரு காற்றுக் குமிழி மட்டும் இருக்குமாறு விடப்படுகிறது. குழல் மேல் நோக்கி வளைந்துள்ளவாறு அமைக்கப்படுகிறது. இதனால் காற்றுக் குமிழி,  குழலின் நடுவில், அதாவது,  உயரமான புள்ளியில் நிற்குமாறு செய்யப்படுகிறது. பரப்புகள் கிடைமட்டமாக இல்லாத போது  காற்றுக் குமிழி, தனது மையப் பகுதியை விட்டு விலகிச் சென்று விடும்.

தண்ணீருக்குப் பதில் எத்தனால் என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது.  மதுசாரத்தின் பிசுக்குமை மற்றும் மேற்பரப்பு இழுவிசை  ols குறைவாக இருப்பதால்,  காற்றுக்குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடிக்குழலுடன் ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகாமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.  காற்றுக் குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும்  தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள் நிற  நிறமிகள்  பயன்படுத்தப்படுகின்றன.

கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் (bull's eye level)  என்பது சாதாரணமான ரசமட்டத்தின் சிறப்புத் தயாரிப்பாகும். இது வட்ட வடிவிலும், தட்டையான அடிப்பாகத்தையும்  கொண்டுள்ளது.  இதனுள் திரவம் நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு வட்டத்தைக் கொண்ட குவி வடிவமுள்ள, கண்ணாடியிலான முகப்பு வைக்கப்பட்டுள்ளது. குழாய் வடிவ ரச மட்டம் அதன் திசையில் மட்டுமே கிடைமட்டம் பார்க்க உதவுகிறது. ஆனால் குமிழ் புடைப்பு ரச மட்டம், ஒரு பரப்பின் கிடைமட்டத் தன்மைையக் காணப் பயன்படுகிறது.

அளவிடுதல்[தொகு]

தச்சர் பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானது கச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது. ரசமட்டத்தை 180 டிகிரி கோணத்திற்குச் சுழற்றும்  போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.

தியோடலைட்டுஅல்லது நில அளவையாளர் மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும்  மேற்கண்ட முறையிலேயே  சரிசெய்யப்படுகிறது. ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.

கருவி நுட்பம்[தொகு]

நுட்பமாக மட்டம் காட்டுவது ரச மட்டத்தின் முக்கிய பண்பாகும்.  ஒரலகு தூரத்திற்கு ரச மட்டத்தை நகர்த்தும் போது அதிலுள்ள காற்றுக்குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது.  நில அளவையாளர்  ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ  தூரம் நகரும்.

வகைகள்[தொகு]

ரச மட்டத்தின் பல்வேறு வகைகள்

  • நில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி
  • தச்சரின் ரச மட்டம்
  • கொத்தனாரின் ரச மட்டம்
  • நீர்மூழ்கி ரச மட்டம் (Torpedo level)
  • பொறியாளரின் துல்லிய ரச மட்டம்
  • மின்னணு ரச மட்டம்
  • விட்டமானி ரச மட்டம்
  • கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்

நில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி[தொகு]

தச்சரின் ரச மட்டம்
தச்சரின் கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்

சாய்க்கும் மட்டம், டம்பி மட்டம்(dumpy level) அல்லது தானியங்கு மட்டம்[1] இந்தப் பெயர்கள் நில அளவியல் துறையில் பயன்படும் பல வகை ரச மட்டக்  கருவிகளாகும். ஒரு தொலை நோக்கியுடன், முக்காலித் தாங்கியில் (tripod) ரச மட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது தூரத்திலுள்ள செங்குத்து அளவுகோலைப் பார்த்து உயர அளவீடு செய்ய உதவுகிறது.

தச்சரின் ரச மட்டம்[தொகு]

மரபார்ந்த தச்சரின் ரச மட்டம் என்பது சிறிய  மரப் பலகையில் அமைக்கப்பட்ட ரசமட்டக் கருவியாகும். இதன் அகல அமைப்பு எந்தவொரு பரப்பின் மட்டத்தன்மையையும் அளக்க உதவுகிறது. காற்றுக் குமிழைப் பார்க்க பலகையில் சிறிய துளையும், காற்றுக் குமிழின் துல்லிய இடத்தைக் காட்ட இரு சிறுவெட்டுகள் கண்ணாடிக் குழாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ரச மட்டத்தை 45 டிகிரி கோணத்திற்கு உயர்த்தும் போது காற்றுக்குமிழி செல்லுமிடமும் குறிப்பிடப்பட்டிருக்கும். 

பொறியாளரின் துல்லிய ரச மட்டம்[தொகு]

சாதாரண ரசமட்டத்தை விடப் பொறியாளரின் துல்லிய ரச மட்டம் மிகவும் துல்லியமானது. கட்டுமானங்களின் அடித்தளத்திலும், கருவிகளின் அடிப்பாகத்திலும் இவ்வகை ரச மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

வரலாறு[தொகு]

மெல்சிடெக் தவெனட் (Melchisédech Thévenot) என்ற பிரெஞ்சு அறிவியலாளர் 2 பிப்ரவரி 1661 ஆம் ஆண்டுக்கு முன் இக் கருவியை  உண்டாக்கினார்.  இந்தத் தகவல் கிறித்தியான் ஐகன்சுடன் அவர் அனுப்பிய கடிதங்கள் மூலம் அறியப்படுகிறது.   

பெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம் தான் அமெரிக்காவில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் வகையாகும். இது 1939 ஆம் ஆண்டு வில்லியம்.பி.பெல்  (William B. Fell) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[2]

நவீனக் கருவிகள்[தொகு]

இன்றைய கால கட்டத்தில் ரச மட்டங்கள் சுட்டிப்பேசியிலேயே (smart phones) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல மொபைல் செயலிகள்  (mobile apps) வடிவமைக்கப்பட்டுள்ளது. OnlineBubbleLevel.com என்ற வலைத்தளம், இவ்வகைக் கருவிகளை இணையதளத்தின் மூலம் செயல்படுத்திட உதவுகிறது.[3]

மாற்று கருவிகள்[தொகு]

எண்ணிம மட்டக் கருவிகள் (Digital levels) மரபார்ந்த ரச மட்டங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைக் கருவிகள் மிகவும் துல்லியமாக அளவிடக் கூடியவை.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச_மட்டம்&oldid=3569409" இருந்து மீள்விக்கப்பட்டது