உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்கவாசகர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாணிக்க வாசகர் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாணிக்கவாசகர்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புவி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயர்
கதைமாயவரம் கே. தியாகராஜ தேசிகர்
நடிப்புதண்டபாணி தேசிகர்
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. ரெங்காச்சாரி
எம். எஸ். தேவசேனா
டி. ஏ. மதுரம்
சாந்தாதேவி
பி. எஸ். ஞானம்
ஒளிப்பதிவுபி. வி. கிருஷ்ண ஐயர்
படத்தொகுப்புசர்தார் ஈசுவர சிங்
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்
விநியோகம்சிறீ மீனாட்சி பிலிம் கம்பனி, சேலம்
வெளியீடு1939
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாணிக்க வாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்திலும்[1] வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயரின் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், எம். எஸ். தேவசேனா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.[2][3]

திரைக்கதை

[தொகு]

இத்திரைப்படத்தின் கதை சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுவாமி மாணிக்கவாசகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

மதுரையில் அரிமர்த்தன பாண்டிய மன்னன் அமாத்திய குலத்திலுதித்த வாதவூரரை தலைமை அமைச்சராக நியமித்து அரச நிர்வாகம் செய்து வரும் காலத்தில், லாயத்தில் குதிரைகள் குறைந்துவருவது கண்டு வாதவூரரைக் குதிரைகள் வாங்கிவர உத்தரவிட்டான். மந்திரியும் வேண்டிய பொருள்கள் எடுத்துக்கொண்டு குதிரை வாங்க கீழ்க் கடற்கரைக்குப் போகும் வழியில் திருப்பெருந்துறை என்ற தலத்தில் சிவபெருமான் குருந்தமரத்தினடியில் தவக்கோலங்கொண்டு முனிவர்களோடு இருப்பதைக் கண்ட வாதவூரர், பல்லக்கை விட்டிறங்கி வந்து குருநாதனைத் தரிசித்து, பஞ்சாட்சர உபதேசம் பெற்ற நிலையில், குருநாதன் ஆலயம் கட்ட வேண்டிக்கொண்டு மறைகிறார்.[4]

பின்பு, வாதவூரர் மதுரையிலிருந்து வேலையாட்களை தருவித்து குதிரை வாங்கக் கொண்டுவந்த பொன்னையெல்லாம் செலவுசெய்து திருப்பணி வேலைகளை ஆரம்பித்தார். பாண்டியன் குதிரைகள் குறிப்பிட்ட தவணையில் வராதது கண்டு ஓலை அனுப்பினான். வாதவூரருக்கு பாண்டியன் அனுப்பிய ஓலை வரவும், பார்த்து திகைத்து ஈஸ்வரனிடம் முறையிடுகிறார். அசரீரி வாக்கின்படி ஆவணி மூலத்தன்று குதிரைகள் கொண்டுவருவதாய் பதில் ஓலை அனுப்பி உறங்கும் வேளை, கனவில் சிவபெருமான் தோன்றி மாணிக்கம் கொடுத்து அரசனிடம் போகச் சொல்கிறார். வாதவூரர் அரசனிடம் வந்து மாணிக்கத்தைக் கொடுத்து குதிரைகள் ஆவணிமூலத்தில் வருமென்று சொல்ல பாண்டியன் மகிழ்ச்சியடைகிறான். பாண்டியன் ராணிகளுக்குச் சொல்ல, மனோன்மணியால் சந்தேகப்பட்டு பட்டர்கள் மூலம் உண்மை அறிகிறான்.[4]

பாண்டியன் கோபித்து வாதவூரரைத் தண்டிக்க உத்தரவிடுகிறான். வாதவூரர் சிறையிலிருந்து சிவபெருமானைத் துதிக்க, சிவபெருமான் காட்டில் உள்ள நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டு அரசனிடம் புறப்படுகிறார். பாண்டியன் குதிரைகள் வருவதை திக்குவாயன் மூலம் அறிந்து சிறையிலிருந்த வாதவூரரை அழைத்துக்கொண்டு வேம்படித்திடலுக்கு வந்து குதிரைகளை வாங்கிக்கொண்டு குதிரைத் தலைவனுக்கு வெகுமதி அளித்து அனுப்புகிறான். அன்று நடுநிசியில் குதிரைகள் மறுபடியும் நரிகளாகி நகரைப் பாழாக்குகின்றன. மறுநாள் காலை பாண்டியன் வாதவூரரை கைகால்களை கட்டி வைகையாற்று மணலில் நிறுத்தும்படி கட்டளையிடுகிறான்.[4]

இதைக்கண்ட சிவபெருமான் சினங்கொண்டு வைகையாற்றில் வெள்ளம் பெருகச் செய்கிறார். வைகை வெள்ளத்தால் கரை உடைக்கப்படுகிறது. பாண்டியன் இதை அறிந்து வீட்டிற்கு ஒருவர் வீதம் வந்து உடைப்பை அடைக்கவேண்டுமென பறை சாற்ற உத்தரவிடுகிறான். பிட்டுசுட்டு விற்கும் வந்தி என்ற கிழவி தன் பங்கை அடைப்பதற்கு ஆள் இல்லாமல் வருந்துகிறாள். இதை அறிந்த அடியார்க்கடியன் கூலியாளாக வந்து வந்தியின் பங்கை அடைப்பதாக ஒப்புக்கொண்டு பிட்டை வாங்கித் தின்றுகொண்டு பங்கை அடைக்காமல் பாடிக்கொண்டு நிற்க பாண்டியன் கோபங்கொண்டு அடிக்கவும் அந்த அடி உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் விழுகிறது. கூலியாள் மறையவும் அரசன் வியந்து வந்தியின் வீடுநோக்கி வரும்பொழுது அசரீரியால் வாதவூரரின் பெருமையை அறிந்து வந்தி புஷ்பக விமானத்தில் சுவர்க்கம் செல்வதைப் பார்க்கிறான். பாண்டியன் ஆலயத்திலிருந்த வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்டு வாதவூரருக்கு உத்தரவு கொடுத்து அனுப்பிவிடுகிறான்.[4]

வாதவூரர் திருப்பெருந்துறைக்கு வந்து குருநாதனை வணங்கி குருநாதனின் கட்டளைப்படி பல தலங்கள் வழிபட்டு சிதம்பரம் வந்து சேருகிறார். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் நாத்திக அரசன் ஒருவன் வாதிக்க வருவதாக சன்னியாசி மூலம் அறிந்து பயப்படுகிறார்கள். மாணிக்கவாசகரை வாதிக்க அழைத்துவந்து நாத்திக அரசனின் மந்திரியோடு வாதிக்க நாத்திகர்கள் ஊமையாகின்றனர். அரசனின் மகள் மாணிக்கவாசகரின் பெருமையால் ஊமைத்தன்மை நீங்கி பேசவும் கண்டு வியந்து தன் மந்திரிகளையும் ஊமை அகன்று பேசும்படி செய்யவேண்டுமென்று கேட்க மாணிக்கவாசகர் விபூதி அளிக்கிறார். எல்லோரும் ஊமை நீங்கி சிவனடியார்களாகின்றனர்.[4]

சிவபெருமான் பிராமண உருவத்தில் மாணிக்கவாசகரிடம் வந்து திருவாசகம், திருக்கோவையார் எழுதி சுவடியோடு மறைகிறார். மறுநாள் காலை தீட்சிதர்கள் நடராசர் சன்னதியில் சுவடி இருக்கக் கண்டு சுவடியை பல்லக்கில் வைத்துக்கொண்டு போய் மாணிக்கவாசகரிடம் அதன் பொருளை வினவ அதற்கு அவர் சொல்வதைவிட பொருளையே நேரில் காட்டுவதாக தீட்சிதர்களை ஆலயத்திற்கு அழைத்து வந்து நடராசரைக் காட்ட சிற்சபையில் சோதி உண்டாகிறது. அதில் மாணிக்கவாசகர் இரண்டறக் கலக்கிறார்.[4]

நடிக, நடிகையர்

[தொகு]

மாணிக்கவாசகர் திரைப்படத்தில் நடித்தவர்கள்:[4]

நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
எம். எம். தண்டபாணி தேசிகர் மாணிக்கவாசகர்
வீரகேசரி டி. பி. ரங்காச்சாரி பாண்டியன்
சி. வி. வி. பந்துலு சிவபெருமான்
என். எஸ். கிருஷ்ணன் மேஸ்திரி வெங்குபிள்ளை
எஸ். எஸ். கொக்கோ காளிமுத்து
டி. எஸ். துரைராஜ் சித்தாள்
டி. வி. தேவனாதய்யங்கார் வேலாயுத கொத்தன்
கே. வி. வெங்கிடராமய்யர் பட்டர், பாட்டி, திக்குவாயன்
ஆர். பி. எக்ஞேசுவரய்யர் பட்டர்
பி. ராமய்ய சாத்திரி தீட்சிதர்
புரொபசர் மல்லையா நாத்திக மந்திரி
கே. ஆர். சுந்தரேசன் திருச்சிற்றம்பல யோகி
எஸ். ஆர். சாமி மந்திரி, பெரியார்
சாமி சதாசிவம் பெரியார்
கே. ஆர். சிங் நாத்திக அரசன்
எம். என். எஸ். பார்த்தசாரதி நாத்திக மந்திரி
சுப்பிரமணியன் நாத்திக பரிக்காவலன்
நாராயணசிங் சிப்பாய், கூலியாள், மேஸ்திரி
சாமிநாதன் சிப்பாய்
வேணு குடியானவன், பறைசாற்றுபவன்
மயில்வாகன ஐயர் பூசகர்
நடிகையர்
நடிகை பாத்திரம்
எம். எஸ். தேவசேனா மனோன்மணி
எம். என். எஸ். சாந்தாதேவி மனோகரி
டி. ஏ. மதுரம் அமிர்தம்
பி. எஸ். ஞானம் கரும்பு
ஜீவரத்தினம் ஊமைப்பெண்
சி. டி. ராஜகாந்தம் பொன்னம்மாள்
சீதாலெட்சுமி தீட்சிதர் மனைவி
தேவாரம் ராஜம்மா வந்தி

தயாரிப்பு

[தொகு]

திரைப்படத்தை வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயர் தயாரிக்க, டி. ஆர். சுந்தரம் இயக்கியிருந்தார். மாயவரம் கே. தியாகராஜ தேசிகர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியிருந்தார்.[2][4]

பாடல்கள்

[தொகு]

மாணிக்கவாசகர் பாடிய சில பாடல்கள் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. ஏனைய பாடல்களை மாயவரம் கே. தியாகராஜ தேசிகர் இயற்றியிருந்தார். இசையமைப்பளரின் பெயர் தரப்படவில்லை, ஆனாலும் பங்களித்த இசைக்கலைஞர்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன.[2][4]

இசைக்குழு
மாணிக்கவாசகர் இய்ற்றிய பாடல்கள்
எண். பாடல் பாடியவர்(கள்) இராகம்-தாளம்
1. நமச்சிவாய வாழ்க எம். எம். தண்டபாணி தேசிகர் பூபாளம்
2. முத்திநெறி அறியாத தேவகாந்தாரி-ஆதி
3. உற்றாரை யான் வேண்டேன் சகானா
4. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே மோகனம்
5. நாதவோ நாதமுடிவிறந்த நாடகஞ் செய் முகாரி
6. வளைந்தது வில்லு மால்கோசு
7. பூசுவதும் வெண்ணீறு எதுகுல காம்போதி
8. திருவளர் தாமரை சீர்வளர் பியாகடை
மாயவரம் கே. தியாகராஜ தேசிகர் இயற்றிய பாடல்கள்
எண் பாடல் பாடியவர்(கள்) இராகம்-தாளம்
1 திருவருள் புரிவாயே - நீயே குழுவினர் கல்யாணி-ஆதி
2 அடிமை கொண்டாயெனை வாதவூரர் பூர்விகல்யாணி-ஆதி
3 அடிக்கடி எனை எதிர்த்து நீ மனோன்மணி-மனோகரி பியாக்
4 வாதவூரன்பா நீ வண்டமிழால் குருநாதன் சங்கராபரணம்
5 மாமரத்திலே பூ மணக்குதடி குழுவினர் தெம்மாங்கு-திசுரம்
6 கேளையா சற்றேநீ கேளையா கரும்பு தெம்மாங்கு சந்தம்
7 கட்டிக்கருமே கரும்பின் சுவையே மேஸ்திரி-கரும்பு தெம்மாங்கு
8 காரியத்தை நீ முடித்து யென்னை அனுப்பு மேஸ்திரி-கரும்பு தெம்மாங்கு
9 இனி எனக்கேது விசாரம் வாதவூரர் மோகனம்-ஆதி
10 ஆலவாயமர் ஆதியே - தேவா பாண்டியன் காம்போதி-மிசுரம்
11 வேண்டாம் வேண்டாம் வேதனைத் தொல்லை வாதவூரர் ஆபோகி-ஆதி
12 தேவா தேவா மூவா முதலே வாதவூரர் இந்துத்தானி முகாரி-ஆதி
13 ஆசை மன்னா நீர் அவமானமே மேஸ்திரி-அமிர்தம் -
14 கூலியாள் வேலை செய்ய தேவை உண்டோ கூலி ஆள் சிந்துபைரவி-ஆதி
15 இந்நேரம் வேலை செய்தது போதும் கூலி ஆள் ஹுனேஜிகருக்கு மெட்டு-ஆதி
16 மானிடப்பேதை வாழ்வையே மதித்தேன் பாண்டியன்-வாதவூரர் ராகமாலிகை-ஆதி
17 ஸ்ரீரஜ தாசல வாசத யாகர வாதவூரர் காபி-ஆதி
18 பாடும் சிதம்பரமாம் மாணிக்கவாசகர் இந்துத்தானி மெட்டு-ஆதி
19 நம்பாதே (x3) மனமே நம்பாதே திருச்சிற்றம்பல சாது செஞ்சுருட்டி-திசுரஏகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 614.
  2. 2.0 2.1 2.2 அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108. pp. 350–352.
  3. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers. Archived from the original on 26 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 ஜூலை 2021. {{cite book}}: Check date values in: |access-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 மாணிக்கவாசகர் பாட்டுப் புத்தகம். காஞ்சிபுரம்: குமரன் பிரசு. 1939.