உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்ல நாடு

மல்லம் (Malla) என்பது அங்குத்தர நிக்காயவில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும். இது அந்நாட்டை ஆண்ட கோத்திரத்தாரின் பெயரையே கொண்டுள்ளது. மகாபாரதம் (VI.9.34) இப்பகுதியை மல்லராஷ்டிரா எனக் குறிப்பிடுகிறது. மல்ல நாடு மகதத்துக்கு வடக்கே அமைந்திருந்தது. இது மகா ஜனபதங்களில் மிகவும் சிறியதாகும். இது காகுத்த(இன்றைய குகு) நதியால் இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

இவ்விரு பகுதிகளினதும் தலைநகர் குசிநகர் ஆகும். [1] குசிநகர் மற்றும் பவா நகரங்கள் பௌத்த வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், புத்தர் தனது இறுதி உணவினை பவா நகரத்தின் சுந்தனிடம் வாங்கி உண்டு, குசிநகரில் வயிற்றுப்போக்கால், பின் சுகவீனமுற்று, பரிநிர்வாண நிலை எய்தினார்.

மல்லர்கள், கௌதம புத்தரின் காலத்தில் கிழக்கிந்தியாவின் மிகவும் பலம் வாய்ந்த கோத்திரத்தினராவர்.[2] மேலும் அவர்கள் பௌத்த, சமணக் குறிப்புகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றனர். பாண்டவர்களில் இரண்டாமவனான பீமன் தனது கிழக்கிந்திய விஜயத்தின்போது மல்லர்களின் தலைவனை வெற்றிகொண்டதாக மகாபாரதத்தில் (II.30.3) குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதம் (VI.9.46) மல்லர்களை அங்க தேசத்தினர், வங்கதேசத்தினர், கலிங்கர்கள் போன்ற கீழைத்தேய நாடோடிக் குழுவொன்றாகக் குறிப்பிடுகிறது.[2] மல்லர்கள் குடியரசு ஆட்சி நடத்தினர். இவர்களது நாடு ஒன்பது ஆட்சிப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. (கல்ப சூத்திரம், நிராயவலி சூத்திரம்) ஒவ்வொரு ஆட்சிப்பகுதியையும் தனித்தனி ஆட்சியாளர்கள் நிர்வகித்தனர்.

லிச்சாவி வம்சத்தினரைப் போல் மல்லர்களூம் விராத்த்ய சத்திரியர்கள் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்படுகின்றனர். மகாபரிநிர்வாண சுத்தந்தவில் இவர்கள் வசிஷ்தர்கள் எனக் குறிப்பிடப் படுகின்றனர். மல்லர்கள் வீரமிக்க, போர்க்குணமுள்ள மக்களாவர். மல்லர்களில் பலர் பௌத்த, சமண சமயத்தினராவர். மல்லர்கள் ஒரு முடியாட்சி வடிவிலான ஆட்சி நடத்தினர். ஆயினும் பின்னர் அவர்கள் கண வடிவிலான (குடியரசு அல்லது முடியாட்சியற்ற) ஆட்சிக்கு மாறினர். இவற்றின் உறுப்பினர்கள் தம்மை ராஜா என அழைத்தனர். கண அரசு, சந்தகார எனும் அமிப்பின் மூலம் முடிவுகளை எடுத்தது. மல்லர்கள் தமது தற்பாதுகாப்புக்காக லிச்சவிகளுடன் கூட்டிணைந்தனர். எனினும் அவர்கள், புத்தரின் இறப்புக்கு முன்னரே தமது சுதந்திரத்தை இழந்தனர். இவர்களின் பகுதிகள் மகதப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.

மல்லநாட்டின் முக்கிய நகரங்கள் இரண்டாகும். அவற்றுள் ஒன்று , சமண மத ஸ்தாபகரான மகாவீரர் இறந்த பாவா. மற்றையது, புத்தர் பரிநிர்வாணமடைந்த குசினாரா. விநாயக பீடிகையின் கல்லவக்க பகுதி அனுபிய எனும் இன்னொரு நகரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அங்குத்தர நிக்காயவில் நான்காவது நகரமாக, உருவெல கப்பா குறிப்பிடப்படுகிறது.[2] ஐந்தாம் நகரம் போகநகர[1] எனக் குறிப்பிடப்படுகிறது.

தற்கால இந்தியாவில் மல்லர்கள்[தொகு]

மனுஸ்மிருதி தொகுப்பின்போது மல்லர்கள் பழமைவாதப் பிராமணர்களால் சத்திரிய குலத்தோரிலும் குறைந்தோராக, குரு-பாஞ்சால சத்திரியர்களாக குறிப்பிடப்பட்டனர். இதற்கு அவர்களிடையே வேதப் பண்பாட்டுக்கு முரணான பௌத்த சமயக் கொள்கைகள் காணப்பட்டமை காரணமாயிருக்கலாம். புத்தரின் காலத்திய சத்திரியர்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட P.C.முகர்ஜி, ராகுல் சங்கிரித்யயான், ஹரிநந்தன் பாண்டே, ராஜ்பாலி பாண்டே, ரகுநாத் சந்த் கௌசிக், திரிபட்காச்சாரியா மகோபாத்யாய பிட்சு புத்தமித்திரா மற்றும் குமார் சுரேஷ் சிங் போன்ற வரலாற்றியலாளர்களின் கருத்துப்படி கோரக்பூர், டியோரியா, குசிநகர் மற்றும் அதனைச் சூழவுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் வாழும் தற்கால சந்தவார வம்சத்தினர், குசினாராவின் மல்லர்கள், ராமாக்கிரமாவின் கோலியர்கள், கபிலவஸ்துவின் சாக்கியர்கள், பிப்பலிவானவின் மௌரியர்கள் போன்ற பண்டைய சந்தாக்ரா சத்திரியர்களின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Raychaudhuri, Hemchandra (1972) Political History of Ancient India, University of Calcutta, Calcutta, pp. 85, 113
  2. 2.0 2.1 2.2 Law, B.C. (1973). Tribes in Ancient India, Poona: Bhandarkar Oriental Research Institute, pp.257-62

மேற்கோள்கள்[தொகு]

  1. Buddhacharya by Rahul Sankrityayan
  2. Gorakhpur Janpad aur Uski Kshatriya Jatiyon Ka Itihaas By Dr. Rajbali Pandey, pp. 291–292
  3. Kshatriya Rajvansh by Dr. Raghunath Chand Kaushik
  4. Bhagwan Buddh ke Samkalin Anuyayi tatha Buddha Kendra By Tripatkacharya, Mahopadhyaya Bikshu Buddhamitra, pp. 274–283.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லம்&oldid=2986955" இலிருந்து மீள்விக்கப்பட்டது