உள்ளடக்கத்துக்குச் செல்

மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் முகப்புத் தோற்றம்

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாகும். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது.

இதன் முகப்பு நான்கு தனித் தூண்களையும் அவற்றின் இரு புறமும் பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் அதிட்டானம் காணப்படவில்லை. ஆனால் உயரமாக அமைந்துள்ள மண்டபத்துக்குள் செல்வதற்காக இரண்டு பக்கமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.[1]

அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்

மூன்று கருவறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குடைவரையின் நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் பெரும்பாலான பல்லவர் கோயில்களில் காணப்படுவதுபோலச் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் லிங்கம் பொருத்துவதற்கான குழி காணப்படுகின்றது. இக்கருவறைக்கு இருபுறமும் காணப்படும் கருவறைகளில், தெற்குப் பக்கத்தில் உள்ளது சிவபிரானுக்கு என அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மூன்றாவது கருவறையில் முற்றுப் பெற்ற சிற்பங்கள் எதுவும் காணப்படாவிட்டாலும், சிற்பங்கள் செதுக்கப்பட இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. இக்கருவறை திருமாலுக்கு உரியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நடுவிலுள்ள கருவறைக்கு முன்னால், குடைவரையின் உள்ளேயே, இரண்டு சிம்மத்தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்கச் சுவரொன்றில் செதுக்கப்பட்டுள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் இக்குடைவரைக்குரிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம், மாமல்லபுரத்திலுள்ள பரவலாக அறியப்பட்ட சிற்பங்களுள் ஒன்று.

இதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]