மகிடாசுரமர்த்தினி சிற்பம், மாமல்லபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிடாசுரமர்த்தினி சிற்பம்

மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் மகிடாசுரமர்த்தினி சிற்பம் முதன்மையானது. அங்குள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் என அழைக்கப்படும் குடைவரையில் இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள்ள இந்தச் சிற்பம் நேர்த்தியாக அமைந்துள்ளது. மகிடாசுரனை வதம் செய்ய வரும் மகிடாசுரமர்த்தினி என அழைக்கப்படும் சக்தி, பத்துக் கைகள் உடையவளாய் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தியின் பத்துக் கைகளிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தியபடி பூதகணங்களும் காணப்படுகின்றன. எருமைத் தலை கொண்ட மகிடாசுரன், கதாயுதத்துடன் சத்தியை எதிர்ப்பதும், இரண்டு படைகளும் மோதுகின்ற காட்சியும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.53,54.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]