மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள்
India - Mamallapuram - 022 - Cave pillars (4333675697).jpg
குகைக் கோயில் தூண்கள்
ஆயத்தொலைகள்12°37′00″N 80°11′30″E / 12.6167°N 80.1917°E / 12.6167; 80.1917

மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள் (Cave Temples of Mahabalipuram) தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள குன்று நகரத்தில் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் மாமல்லர் பாணியில், பரவியுள்ள சிறுகுன்றுகளில் செதுக்கப்பட்டு, சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்களாகும். இவை அதிரஞ்சந்தை குகைக் கோயில்களிலிருந்து வேறுபட்டுள்ளன; அந்தக் கோயில்கள் மகேந்திரவர்மன் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. குகைகளில் கிடைக்கும் சிதைவுகளிலிருந்து கட்டப்பட்ட காலத்தில் அவை பூச்சிடப்பட்டு வண்ணமடிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.[1] இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களிலும் புடைப்புச் செதுக்கோவியங்களிலும் பரவலாக அறியப்பட்ட மகிடாசுரமர்த்தினி மண்டபத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளதாகும்.[2] பல்லவர் கால குகைகளில் பலவும் முழுமையடையாதவையாக உள்ளன. இந்தக் குகைக் கோயில்கள் கட்டப்படும்போது முதல் கட்டமாக பாறை முகப்பு வழுவழுக்காக்கப்படுகிறது. பின் வேண்டுமளவில் தூண்கள் வெட்டப்படுகின்றன. பின்னர் புடைப்புச் சித்திரங்கள் சுவர்களில் செதுக்கப்படுகின்றன.[3] அனைத்துக் குகைக்கோயில்களிலுமே எளிய திட்டம் பின்பற்றப்பட்டுள்ளது; அழகாக கட்டிடக்கலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் கருவறையிலுமே தெய்வம் நிர்மாணிக்கப்படவில்லை.[4] 1984இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் மாமல்லபுர மரபுச்சின்னங்களில் மண்டபங்கள் என்ற வகைப்பாட்டில் உலகப் பாரம்பரியக் களமாக ஏற்கப்பட்டது.[5]சில குகைக் கோயில்களுக்கு யுனெசுக்கோ அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் கோனேரி மண்டபம், யாளி மண்டபம், கொடிக்கால் மண்டபம் போன்றவற்றிற்கு தரப்படவில்லை.

மகாபலிபுரத்தில் பல பாறைகளில் செதுக்கப்பட்ட மரபுச் சின்னங்கள் உள்ளன. யுனெசுக்கோவின் வகைப்பாட்டில் "cut-ins" என்ற சொல் குகைக் கோயில்களைக் (உள்ளூரில் மண்டபங்கள்) குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கோயிலாக அமையாத கற்றளிகள் (உள்ளூரில் இரதங்கள் எனப்படுபவை) "cut-outs" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Heritage Sites – Mahabalipuram, Group of Monuments Mahabalipuram (1984), Tamil Nadu". Archaeological Survey of India. 23 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Durga Temple (Mahishasuramardini Cave Temple, Mamallapuram)". Online Gallery of British Library. 23 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. George Michell (1977). The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms. University of Chicago Press. பக். 81–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-53230-1. https://books.google.com/books?id=ajgImLs62gwC&pg=PA81. பார்த்த நாள்: 7 February 2013. 
  4. "A monumental effort". Front Line India's National Magazine from the publishers of தி இந்து. 8 November 2003. 10 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Group of Monuments at Mahabalipuram". UNESCO. 2007-03-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Group of Monuments at Mahabalipuram". UNESCO. October 15, 1982. p. 3.