உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேந்திரநாத் சிர்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. என். சிர்கார் (பிரேந்திரநாத் சிர்கார்)
2013இல் வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் தலையில் சிர்கார்
பிறப்பு1901 சூலை 5
பாகல்பூர், பீகார், இந்தியா
இறப்பு(1980-11-28)28 நவம்பர் 1980
கொல்கத்தா, இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்

பிரேந்திரநாத் சிர்கார் (Birendranath Sircar) என்றும் சர்க்கார் (Sarcar) என்றும் அழைக்கப்பட்ட (சூலை 5, 1901 - நவம்பர் 28, 1980) இவர் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் கொல்கத்தா நியூ தியேட்டர்ஸின் நிறுவனரும் ஆவார். பின்னர் பிரபலமடைந்த பல திரைப்பட இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதற்காக புகழ்பெற்ற இவர் பெங்காலி மொழி திரைப்படங்களை தயாரித்து வந்தார். இவருக்கு 1970இல் தாதா சாகெப் பால்கே விருதும், 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான, பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பி. என். சிர்கார் பாகல்பூரில் அப்போதைய வங்கியின் வழக்கறிஞர் தலைவர் சர் என். என் சிர்கார் என்பவருக்குப் பிறந்தார். கொல்கத்தாவின் இந்து பள்ளியில் படிப்பை முடித்த இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றார். பின்னர், இந்தியா திரும்பியதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்தத் திட்டம் இவருக்கு திரைப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், பெங்காலி மொழித் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார். சித்ரா என்று அழைக்கப்படும் இது கொல்கத்தாவில் சுபாஸ் சந்திரபோஸால் 1930 திசம்பர் 30 அன்று திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்தித் திரைப்படங்களைக் காட்டும் புதிய திரைப்பட அரங்கக் கட்டுமானமும் நடைபெற்றது. பின்னர் இவர் இரண்டு மௌனப் படங்களை தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்த முடிவு செய்தார்.

தொழில்

[தொகு]

1931 பிப்ரவரி 10இல், இவர் கொல்கத்தாவின் நியூ தியேட்டர்ஸை நிறுவினார். தரத்திற்காக, சிர்கார் பி.சி.பருவா, பிரேமங்கோர் அதார்த்தி, தெபாக்கி போஸ், திரேன் கங்குலி, பிமல் ராய் மற்றும் பானி மஜும்தார் போன்ற இயக்குனர்களை தனது சிறகுகளின் கீழ் ஈர்த்தார். கே. எல்.சைகல், பகாடி சன்யால், அமர் முல்லிக், கானன் தேவி, சந்திரபதி தேவி, லீலா தேசாய் லீலா தேசாய், பிருத்விராஜ் கபூர் போன்ற நடிகர்கள் இவரது ஊதியத்தில் இருந்தனர். முகுல் போஸ் (இசைப் பதிவாளர்- இயக்குநர்), யூசுப் மூல்ஜி (ஒளிப்பதிவாளர்), நிதின் போஸ் (ஒளிப்பதிவாளர்-இயக்குநர்) மற்றும் சுபோத் மித்ரா (ஆசிரியர்) போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நன்கு அறிந்திருந்தனர். மேலும், நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோ நிறைய வரம்புகளுக்குள் பலவற்றை மாற்றியமைக்க முடிந்தது. இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களான ஆர்.சி.போரல், திமிர் பரன் மற்றும் பங்கஜ் முல்லிக் ஆகியோரும் நியூ தியேட்டர்ஸ் தயாரிப்புகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.[2] இவர் 1940களின் பிற்பகுதியில் பெங்காலி திரைப்படத்துறையின் தலைவராக இருந்தார்.[1] [3]

நியூ தியேட்டர்ஸ்

[தொகு]

தேமா பௌனா, ஒரு பெங்காலி பேசும் படமாகும். இது 1931இல் பிரேமங்கூர் அதார்த்தி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை நியூ தியேட்டர்ஸ் தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் இராய் சந்த் போரல் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

1935 இல் பி.சி. சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் நாவலான தேவதாசை அடிப்படையாகக் கொண்ட தேவதாசு என்றப் படத்தை பி. சி. பருவா இயக்கி நடித்திருந்தார். மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

1935 ஆம் ஆண்டில், பின்னணி பாடல் இந்தியாவில் முதன்முதலில் நிதின் போஸ் எழுதிய பெங்காலி திரைப்படமான பாக்ய சக்ராவில் பயன்படுத்தப்பட்டது . பாடகர்கள் கே.சி.டே, பருல் கோஷ், சுப்ரபா சர்க்கார்.[4] இந்த படத்தின் இந்தி மறுஆக்கமான தூப் சாவ்ன், பின்னணி பாடலைப் பயன்படுத்திய முதல் இந்தி படம் ஆகும்.[5]

நியூ தியேட்டர்ஸ் தயாரித்த பல படங்களில் தோன்றிய முதல் பிரபலமான நட்சத்திர நடிகை கனன் தேவி ஆவார். மேலும் கே.எல் சய்கல், கேசி டே, பிரித்விராஜ் கபூர், சஹாபி பிஸ்வாஸ், பிகாஷ் ராய், பஹாரி சன்யால், பசந்தா சவுத்ரி போன்ற திறமையான நடிகர்கள் குழு ஒன்று இருந்தது .

பிரேமங்கூர் அதார்தி, பி.சி.பருவா, தெபாக்கி போஸ் மற்றும் நிதின் போஸ் போன்ற சிறந்த இயக்குநர்கள் நியூ தியேட்டர்ஸ் படங்களில் பணியாற்றினர். அங்கு பணியாற்றிய இசைக்கலைஞர்களில் ஆர்.சி.போரல், பங்கஜ் முல்லிக் மற்றும் திமிர் பரன் ஆகியோர் அடங்குவர்.

1970 ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கிய இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார்.[6] மற்றும் 1972 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[7]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "B.N. Sircar : भारतीय सिनेमा के विकास की नींव के एक निर्माता | Cine Manthan". Archived from the original on 16 April 2011. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
  2. B.N.Sircar Upperstall Profile பரணிடப்பட்டது 1 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. Bagiswar Jha : B.N. Sircar : A monograph; Seagull Books, Calcutta (1990)
  4. "Bhagya Chakra (1935)". www.imdb.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2008.
  5. "Dhoop Chhaon (1935)". www.imdb.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2008.
  6. "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  7. "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 15 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேந்திரநாத்_சிர்கார்&oldid=3714986" இலிருந்து மீள்விக்கப்பட்டது