கே. எல். சைகல்
கே. எல். சைகல் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | குந்தன் லால் சைகல் |
பிறப்பு | சம்மு (நகர்), ஜம்மு மற்றும் காஷ்மீர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா) | 11 ஏப்ரல் 1904
இறப்பு | 18 சனவரி 1947 ஜலந்தர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பஞ்சாப், இந்தியா) | (அகவை 42)
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர், நடிகர் |
இசைத்துறையில் | 1932 முதல் 1947 வரை |
குந்தன் லால் சைகல் (Kundan Lal Saigal) (பிறப்பு: 1904 ஏப்ரல் 11 - இறப்பு: 1947 ஜனவரி 18) பெரும்பாலும் கே.எல்.சைகல் என்று அறியப்படும் இவர் ஓர் இந்திய பாடகரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர் இந்தித் திரைப்படத் துறையின் முதல் உச்ச நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். இந்தித் திரையுலகம் சைகலின் காலத்தில் கொல்கத்தாவை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது மும்பையை மையமாக கொண்டுள்ளது .[1][2] பாரிடோன் மற்றும் மென்மையின் கலவையாக இருந்த சைகலின் தனித்துவமான குரல் தரம் இவரைப் பின்தொடர்ந்த பெரும்பாலான பாடகர்களுக்கு முக்கிய அடையாளமாக இருந்தது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சைகல் 1904 ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஜம்முவில் பிறந்தார். அங்கு இவரது தந்தை அமர்சந்த் சைகல் ஜம்மு-காஷ்மீர் ராஜாவின் அரசவையில் ஒரு வட்டாட்சியராக இருந்தார். இவரது தாயார் கேசர்பாய் சைகல் இந்து மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ஒரு பெண்மணியாவர். அவர் இசையை மிகவும் விரும்பினார். இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய பாணிகளில் பஜனைகள், கீர்த்தனை மற்றும் பாடல்கள் போன்றவைகள் நிகழ்த்தப்பட்ட மத நிகழ்ச்சிகளுக்கு தனது சிறுவயது மகனை அழைத்துச் செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தார்.[3] சைகல் தனது பெற்றோர்களின் ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாக இருந்தார். இவரது முறையான பள்ளிப்படிப்பு சுருக்கமாகவும், ஒழுங்கற்றதாகவும் இருந்தது. ஒரு குழந்தையாக இவர் எப்போதாவது ஜம்முவின் இராம்லீலை விழாவில் சித்தாரை வாசித்தார்.
சைகல் பள்ளியை விட்டு வெளியேறி, இரயில்வே நேரக்கட்டுப்பாளராக பணியாற்றி பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். பின்னர், இவர் ரெமிங்டன் தட்டச்சுப்பொறி நிறுவனத்தின் தட்டச்சுப்பொறி விற்பனையாளராக பணியாற்றினார். இப்பணி இவரை இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுமதித்தது. இவரது பயணங்கள் இவரை லாகூருக்கு அழைத்து வந்தது. அங்கு இவர் அனார்கலி கடைவீதியில் மெக்சந்த் ஜெயின் (பின்னர் சில்லாங்கில் அசாம் சோப் தொழிற்சாலையைத் தொடங்கியவர்) என்பவருடன் நட்பு கொண்டார். இருவரும் கல்கத்தாவுக்குச் சென்றபோது மெக்சந்த் மற்றும் குந்தன் இருவரும் நண்பர்களாக இருந்தனர். மேலும் பல மெகபில்-இ-முசைரா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அந்த நாட்களில் சைகல் ஒரு வளர்ந்து வரும் பாடகராக இருந்தார். மேலும் மெக்சந்த் இவரது திறமையைத் தொடர இவரை ஊக்குவித்தார். மெக்சந்தின் ஊக்கத்தையும் ஆரம்பகால ஆதரவையும் சைகல் அடிக்கடி குறிப்பிட்டார். சிறிது காலம் ஒரு விடுதியின் மேலாளராகவும் பணியாற்றினார். இதற்கிடையில், பாடுவதில் இவரது ஆர்வம் தொடர்ந்தது. காலப்போக்கில் அது மேலும் தீவிரமடைந்தது..[4]
புதிய அரங்கங்களில் தொழில்
[தொகு]1930 களின் முற்பகுதியில், பாரம்பரிய இசைக்கலைஞரும் இசை இயக்குனருமான ஹரிச்சந்திர பாலி, கே. எல். சைகலை கல்கத்தாவுக்கு அழைத்து வந்து இசையமைப்பாளர் ஆர். சி. போரல் என்பவருக்கு அறிமுகப்படுத்தினார். ஆர். சி. போரல் இவரது திறமைகளை உடனடியாக அங்கீகரித்தார். சைகல் பி. என். சிர்காரின் கல்கத்தாவை தளமாகக் கொண்ட திரைப்பட படப்பிடிப்பு அரங்கமான நியூ தியேட்டர்சில் ரூ. 200 ரூபாய் மாத ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு இவர் பங்கஜ் முல்லிக், கே. சி. டே மற்றும் பகாரி சன்யால் போன்ற சமகாலத்தவர்களுடன் தொடர்பிலிருந்தார்.
இதற்கிடையில், ஹரிச்சந்திர பாலி இசையமைத்த ஓரிரு பஞ்சாபி பாடல்கள் அடங்கிய சைகலின் பதிவை இந்தியன் கிராமபோன் நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம், பாலி சைகலின் முதல் இசை இயக்குனரானார். சைகல் ஒரு பாத்திரத்தில் நடித்த முதல் படம் மொஹாபத் கே அன்சு என்றப் படமாகும். அதைத் தொடர்ந்து சுபா கா சித்தாரா மற்றும் ஜிந்தா லாஷ் ஆகியவை 1932இல் வெளியிடப்பட்டன. இருப்பினும், இந்த படங்கள் மிகச் சிறப்பாக செயல்படவில்லை. சைகல் தனது முதல் மூன்று படங்களுக்கு சைகல் காஷ்மீரி என்ற பெயரைப் பயன்படுத்தினார். யாகூடி கி லட்கி (1933) என்ற படத்திலிருந்து குந்தன் லால் சைகல் (கே.எல். சைகல்) என்ற பெயரைப் பயன்படுத்தினார்.[5] 1933ஆம் ஆண்டில், புரான் பகத் படத்திற்காக சைகல் பாடிய நான்கு பஜனைகள் இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின.[6] யாகூடி கி லட்கி, சண்டிதாஸ், ரூப்லேகா மற்றும் கார்வான் -இ-ஹயாத் போன்ற பிற படங்களிலும் தோன்றினார். இந்தியப் பாடகர் லதா மங்கேஷ்கர், சண்டிதாசில் (1934) ஒரு இளைஞனாக, இவரது நடிப்பை கண்டு இவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகக் கூறப்பட்டது. 1935ஆம் ஆண்டில், சைகல் தனது நடிப்பு வாழ்க்கையை வரையறுக்கக் கூடிய தேவதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்தார். அதே பெயரில் வங்காள மொழி எழுத்தாளரானசரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு பி. சி. பார்வா என்பவர் இதை இயக்கியிருந்தார்.[7] தேவதாஸ் (1935), "பாலம் ஆயே பாசோ மோரே மேன் மே" மற்றும் "துக் கே அபின் தின் பீட்டாட் நாஹி" போன்ற படங்களில் இவரது பாடல்கள் நாடு முழுவதும் பிரபலமடைந்தன.[8]
சைகல் வங்காள மொழியை நன்கு பயன்படுத்தி நியூ தியேட்டர்சு தயாரித்த ஏழு வங்காளப் படங்களில் நடித்தார். இரவீந்திரநாத் தாகூர் சைகலின் பாடலைக் கேட்டார். சைகலின் 30 வங்காள பாடல்கள் மூலம் வங்காளம் முழுவதும் இவரை நேசித்தது.
மும்பைக்குக் குடிபெயர்தல் மற்றும் இறப்பு
[தொகு]1941 டிசம்பரில், ராயித் மூவிடோனுடன் இணைந்து பணியாற்ற சைகல் மும்பைக்குச் சென்றார். அங்கே இவர் பல வெற்றிகரமான படங்களில் பாடி நடித்து வந்தார். இந்த காலகட்டத்தில் பக்த சுர்தாஸ் (1942) மற்றும் தான்சேன் (1943) ஆகியவை பெரிய வெற்றி பெற்றது. தான்சேன் படத்தில் தீபக் ராகத்திலமைந்த "தியா ஜலாவ்" என்ற பாடலில் சைகலின் நடிப்புக்காக அப்படம் இன்னும் நினைவுகூரப்படுகிறது.
இந்த நேரத்தில், சைகலின் வாழ்க்கையில் மது ஒரு முக்கிய காரணியாக மாறியது. இவர் மதுவை நம்பியிருப்பது இவரது வேலையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்கியது. மதுபானத்தை அருந்திய பின்னரே இவரால் ஒரு பாடலைப் பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. இவ்வாறு குடித்துவிட்டு பத்து ஆண்டுகள் உயிர் தப்பினார். எவ்வாறாயினும், இவரது குடிப்பழக்கம் மிகவும் அதிகமானது. இதனால் சைகல் தனது மூதாதையர் நகரமான ஜலந்தரில் 1947 ஜனவரி 18 அன்று தனது 42 வயதில் இறந்தார்.[9] இருப்பினும், அவர் இறப்பதற்கு முன், ஷாஜகான் (1946) படத்திற்காக நௌசாத் அலியின் கீழ் மேலும் மூன்று வெற்றிகளைத் தர முடிந்தது. பர்வனா (1947) இவரது கடைசி படம். இது இவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது, அதில் இவர் கவாஜா குர்ஷித் அன்வரின் இசையில் பாடினார். இறப்பின்போது அவருடன் அவரது மனைவி ஆஷா ராணி (1935 இல் திருமணம் செய்து கொண்டார்) மற்றும் மூன்று குழந்தைள் (ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள்) இருந்தனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Nevile, Pran. K L Saigal: Immortal Singer and Superstar. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ Chaudhuri, Shantanu Ray. "Cinema of Bengal: A Historical Narrative (Part I)". projectorhead.in. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ "K.L. Saigal, a musician of the masses". பார்க்கப்பட்ட நாள் 7 April 2011.
- ↑ R.Raghava Menon, K.L.Saigal, The Pilgrim of the Swara New Delhi:Hind Pocket Books, 1989
- ↑ "The Music Greats K. L. Saigal". sangeetmahal.com. Sangeet Mahal. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ Gulazāra; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. pp. 308–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ Sabine Haenni; Sarah Barrow; John White. The Routledge Encyclopedia of Films. Routledge. pp. 199–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-68261-5. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ Chopra, Satish. "The three versions of film: 'Devdas'". apnaorg.com. Academy of the Punjab in North America. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kundanlal Sehgal Dead". The Indian Express: p. 1. 20 January 1947. https://news.google.com/newspapers?id=4no-AAAAIBAJ&sjid=_EsMAAAAIBAJ&pg=1271%2C1277803. பார்த்த நாள்: 11 April 2018.
மேலும் படிக்க
[தொகு]- Ashish Rajadhyaksha and Paul Willemen: Saigal, Kundan Lal. [In] Encyclopedia of Indian Cinema, Oxford University Press, New Delhi, revised edition, 1999, p. 203.
- Pran Nevile (11 May 2011). K. L. Saigal: The Definitive Biography. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5214-160-9.
- Pran Nevile (1 January 2004). K L Saigal: Immortal Singer and Superstar. Nevile Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-901166-1-9.
- Śarada Datta (2007). Kundan (Hindi) (in இந்தி). Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-310156-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.kundanlalsaigal.org/ : A comprehensive resource centre for research and documentation of K.L. Saigal songs & related memorabilia
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கே. எல். சைகல்