பிரான்சிஸ்கன் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எளிய துறவிகள் சபை
சுருக்கம்OFM, பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட்ஸ் (பிரான்சிஸ்கன் சபை)
உருவாக்கம்1209
வகைகத்தோலிக்க துறவற சபைகள்
தலைமையகம்போர்சிங்குலா சிற்றாலயம் ,
அசிசி, இத்தாலி
முக்கிய நபர்கள்
அசிசியின் பிரான்சிசு – நிறுவனர்
வலைத்தளம்OFM

பிரான்சிஸ்கன் சபை புனித அசிசியின் பிரான்சிசினால் 1209 ஆம் ஆண்டு இத்தாலியில் தோற்றுவிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையில் ஒரு மாபெரும் துறவற சபையாகும். எளிய துறவிகளின் சபை என்ற பெயரில் தொடங்கப்பட்டது பின்னாளில் தூய அசிசி பிரான்சிசின் பெயரால் பிரான்சிஸ்கன் சபை என அழைக்கப்படுகிறது. புனித பிரான்சிசால் தொடங்கப்பட்ட இச்சபை பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட்ஸ் (பிரான்சிஸ்கன் சபை), பிரான்சிஸ்கன் கன்வென்ட்சுவெல்ஸ் மற்றும் பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை என்று இன்று மூன்று தனி சபைகளாக உள்ளது ஆனால் பிரான்சிஸ்கன் குடும்பம் என்ற ஒற்றை குடையின் கீழ் இயங்குகிறது. பிரான்சிஸ்கன் சபை என்றால் அது நேரடியாக பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட்ஸ் சபையையே குறிக்கும்.

சபையின் தோற்றம்[தொகு]

இத்தாலி நாட்டில் அசிசி நகரில் மிகவும் வசதியான குடுமபத்தில் பிரான்சிஸ் 1182 இல் பிறந்தார். தாய் பீக்காவின் புனித வளர்ப்பில் பிரான்சிஸ் ஏழை இயேசுவின் ஊழியனாக உருவெடுத்தார். சமூகத்தில் அடித்தட்டு மக்களோடு தோழமைக்கொண்டு திருச்சபையில் கிறிஸ்துவின் நற்செய்தி வாழ்வை புதுப்பித்தார். தன்னுடன் இணைந்த சக நண்பர்களை கொண்டு எளிய துறவிகள் சபையை 1209 இல் தோற்றுவித்தார். ஏழைகள், தொழுநோயாளிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கு இயேசுவின் பெயரால் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். ஐரோப்பா முழுவதும் பிரான்சிசின் புகழ் பரவியதால் ஏராளமான இளையோர் இணைந்தனர், பெண்களும் இணைய அவர்களுக்கு புனித அசிசி கிளாரா உதவியுடன் ஒரு துறவற சபையை ஆரம்பித்தார்.திருமணமான ஆண்களும் பெண்களும் குடும்பத்தில் நற்செய்தி வாழ்வை வாழ புனித பிரான்சிசை நாட அவர்களுக்கும் ஒரு சபையை ஆரம்பித்தார் அதுவே இன்று பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை அல்லது பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பிரான்சிஸ்கன் குடும்பம்[தொகு]

புனித பிரான்சிசால் ஆரம்பிக்கப்பட்ட எளிய துறவிகள் சபை அவரது இறப்பிற்குப் பிறகு பல குழுக்களாக செயல்பட்டது அதை அனைத்தையும் 1517 இல் திருத்தந்தை பத்தாம் சிங்கராயர் பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட்ஸ் மற்றும் பிரான்சிஸ்கன் கன்வென்ட்சுவெல்ஸ் ஆகிய இரு குழுக்களில் இணைத்து தனி சபைகளாக அங்கீகரித்தார். பிரான்சிஸ்கன் சபையில் மறுமலர்ச்சியாக உருவெடுத்த கப்புச்சின் சபையை திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் 1528 இல் பிரான்சிஸ்கன் சபையின் மூன்று பிரிவுகளில் ஒன்றாக அங்கீகரித்து தனி சபையாக இயங்கிட அனுமதித்தார். பெண்களுக்கான உருவான சபை மற்றும் பொதுநிலையினர்க்கான ஒழுங்குகளை நூற்றுக்கணக்கான பல புதிய துறவற சபைகள் பின்பற்றி புனித பிரான்சிசின் ஆன்மிகத்தில் இணைந்தனர் இச்சபைகள் அனைத்தும் பிரான்சிஸ்கன் குடும்பம் என்ற ஒரு குடையின் கீழ் இயங்குகின்றன. திருச்சபையில் அதிகமான துறவிகளை கொண்ட துறவற குடும்பமாக இயங்குவது பிரான்சிஸ்கன் சபையாகும். இக்குடும்பத்தில் புகழ்பெற்ற பல புனிதர்கள் உண்டு அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புனித அசிசியின் பிரான்சிசு, அசிசியின் புனித கிளாரா, புனித பதுவை நகர அந்தோனியார் புனித பொனவெந்தூர், புனித ஹங்கேரியின் எலிசபெத், புனித சீயன்னா பெர்னார்டின், புனித சிக்மரிங்ஞன் பிதேலிஸ், புனித பிரின்டிசி நகர லாரன்சு, புனித வெரோனிக்கா ஜூலியானி, புனித லியோபோல்டு மேன்டிக், புனித மாக்சிமிலியன் கோல்பே, புனித பியட்ரல்சினாவின் பியோ ஆகியோர் ஆவர்.

உலகெங்கும் பிரான்சிஸ்கன் சபை[தொகு]

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சென்ற முதல் துறவற சபை என்ற பெருமை பிரான்சிஸ்கன் சபைக்கே உண்டு. புனித பிரான்சிஸ் தனது சகோதரர்களை மொராக்கோ நாட்டுக்கு அனுப்பி நற்செய்தி அறிவிப்பு பணியை தொடங்கி வைத்தார். ஆசிய, ஆப்ரிக்கா, இலத்தின் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அணைத்து கண்டகளுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை முதலில் எடுத்து சென்று விதைத்த பெருமை பிரான்சிஸ்கன் துறவற குடும்பத்துக்கு உண்டு. இன்று ஒரு இலட்சத்திற்கும் மேலான இருபால் பிரான்சிஸ்கன் துறவியர் உலகின் பல இடங்களில் இயேசுவின் புனித பணியை எளிய பிரான்சிசின் வழியில் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் பிரான்சிஸ்கன் சபையினர்[தொகு]

ஜான் மோந்தே கொர்வினோ என்ற பிரான்சிஸ்கன் துறவி சீனாவின் பெக்கிங்க் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். சீனாவிற்கு செல்லும் வழியில் 1291-1292 ஆகிய ஆண்டுகளில் மயிலையில் தங்கி பல இடங்களுக்குச் சென்று பலருக்கு திருமுழுக்கு தந்தார். இந்தியாவிற்கு வாஸ் கோடாகாமா வருகைக்கு பிறகு 1500 இல் சில போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கோவா வருகை தந்து கிறிஸ்தவத்தை போதித்தனர். இந்தியாவில் முதன் முதலில் கால் பதித்த துறவற சபை பிரான்சிஸ்கன் சபையினர் ஆவர். போர்த்துக்கீசியர் இந்தியாவில் நிறுவிய அனைத்து குடியிருப்புகளின் ஆன்மிக பணியை இவர்களே ஏற்றனர், இந்தியாவில் புனித பதுவை அந்தோனியார் பக்தியை வளர்த்த பெருமைகுரியவர்களும் பிரான்சிஸ்கன் துறவிகளே ஆவர். பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினர் 1632 முதல் இந்தியாவில் மறைப்பணி ஆற்றி வருகின்றனர், மேலும் 20ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சிஸ்கன் கன்வென்ட்சுவல் துறவிகளும் இந்தியாவில் துறவற இல்லங்களை அமைத்து ஆன்மீகப் பணியாற்றுகின்றனர். பிரான்சிஸ்கன் கன்னியர் மற்றும் பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் என ஏராளமானயோர் புனித பிரான்சிசின் வழியில் இறைப்பணி ஆற்றுகின்றனர். இந்தியாவை சேர்ந்த புனித கொன்சாலோ கார்சியா மற்றும் புனித அல்ஃ‌போன்சா ஆகிய இருவரும் பிரான்சிஸ்கன் சபையை சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழகத்தில் பிரான்சிஸ்கன் துறவிகள்[தொகு]

போர்த்துக்கீசியர் மயிலாப்பூரில் வணிகத்தளம் அமைத்தவுடன் முதலில் குடியேறி துறவற இல்லம் அமைத்தவர்கள் போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள். சாந்தோம் அருகில் புனித பிரகாச அன்னையின் (லஸ் சர்ச்) பெயரால் ஆலயம் நிறுவி மறைப்பரப்பு பணியை 1526 களில் தமிழ் மண்ணில் தொடங்கினர். பின் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மணப்பாடு, தூத்துக்குடி என தமிழக கடற்கரையோரங்களில் முதலில் கிறித்தவப்பணியை தொடங்கியவர்கள். தென்கோடி தமிழகத்தில் வாழும் பரதவர் இன மக்களை முதலில் கிறிஸ்தவத்திற்கு கொண்டு வந்தவர்கள் பிரான்சிஸ்கன் துறவிகளே ஆவர். புனித ஆரோக்கிய அன்னை காட்சி தந்த வேளை நகர் எனப்படும் வேளாங்கண்ணியின் முதல் மறைப்பணியாளர்கள், இங்கு அன்னையின் பக்தியை புகழை முதலில் பரப்பியவர்களும் இவர்களே ஆவர், 300 ஆண்டுகளுக்கு மேலாக தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி பங்கின் பொறுப்பை ஏற்று திருத்தலமாக உயர உழைத்தவர்களும் இவர்களே. பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினர் 1632 முதல் தமிழ் மண்ணில் மறைபரப்பு பணியாற்றி புதுச்சேரி,சென்னை மற்றும் செங்கல்பட்டு மறைமவட்டங்களுக்கு கிறிஸ்தவ அடித்தளம் அமைத்தனர். இன்று 300 கப்புச்சின் தமிழ் துறவிகள் பல்வேறு புனித பணிகளை மேற்கொண்டுள்ளனர். பல பிரான்சிஸ்கன் கன்னியர் சபைகள் கல்விப் பணி, மருத்துவப்பணி தமிழகம் எங்கும் செய்து வருகின்றனர். பிரான்சிஸ்கன் பொதுநிலையினரும் தமிழத்தின் அணைத்து மறைமாவட்டங்களில் பிரான்சிசின் எளிய வாழ்வை மேற்கொண்டுள்ளனர். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையை சேர்ந்த ஜோசப் தம்பி மற்றும் பரதேசி பீட்டர் ஆகியோர் திருச்சபையில் இறையடியார் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்கன்_சபை&oldid=1671374" இலிருந்து மீள்விக்கப்பட்டது