உள்ளடக்கத்துக்குச் செல்

பறக்கும் விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனத்துப் பறக்கும் தவளை

பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு எதிராகப் பாயவும் உதவியாக உள்ளது.

வளிமண்டலத்தில் அசையும் விதங்கள்[தொகு]

விலங்கினங்கள் வளிமண்டலத்தில் அசையும் விதங்களைப் பற்றிய அறிவு அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது. பொதுவாக பறத்தல் என்றால் இறக்கைகள் தேவை. வழுக்கும் தன்மைக்கு இவை தேவையில்லை. வளிமண்டலத்தில் அசையும் விதம் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது - வலுவான வளிமண்டல அசைவு, வலுவற்ற வளிமண்டல அசைவு. வலுவான அசைவில், விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்தி காற்றியக்க விசையை உண்டாக்குகின்றன. வலுவற்ற அசைவில், காற்றால் அல்லது காற்றில் கீழே விழுவதால் உடலில் பிரயோகிக்கப்படும் காற்றியக்க விசையைப் பயன்படுத்தி அசைகின்றன.

வலுவற்ற அசைவு[தொகு]

இம்முறையானது விலங்கொன்று உயர்ந்த இடத்தில் இருந்து அசைவதற்கு தேவைப்படுகின்றது.

 • மிதக்கும் அல்லது வழுக்கும் முறை: கிடை மட்டத்திற்கு 45 பாகைக்கும் குறைவான கோணத்தில் மேலிருந்து கீழே விழுதல்.
 • வான்குடை (பாரசூட்) முறை: கிடை மட்டத்திற்கு 45 பாகைக்கும் கூடுதலான கோணத்தில் மேலிருந்து கீழே விழுதல்.
 • விழுதல்: மேலிருந்து புவியீர்ப்பு விசைக்கெதிராகக் கீழே விழுதல்

வலுவான அசைவு[தொகு]

வலுவான அசைவு நான்கு தடவைகள் பரிணாம வளர்சியுற்றுள்ளன (தெரோசோர்கள், பூச்சிகள், பறவைகள், வௌவால் இனங்கள்). இங்கு விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்திப் பறக்கின்றன.

 • பறக்கும் முறை: சிறகை அடித்து மேலே எழும்புதல்

ஒரு விலங்கினம் மேற்கூறிய முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் அசைகின்றது. மிதக்கும் அல்லது வழுக்கும் செயற்பாடானது மரத்துக்கு மரம் தாவுவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விலங்குகள் குறைந்த சக்தி தரும் உணவுகளையே (இலைகள் போன்றன) உண்கின்றன என்று ஒரு கருதுகோள் உண்டு, அதேநேரத்தில் கூடிய சக்தி தரும் பழங்கள், பூச்சிகள் போன்றவற்றை வலுவான அசைவு முறையைப் பயன்படுத்தும் பறக்கும் விலங்குகள் உண்கின்றன. வழுக்கும் விலங்குகள் கூடுதலாக தென்கிழக்கு ஆசியாவில் மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகின்றன.

முள்ளந்தண்டிலி பறக்கும் மற்றும் வழுக்கும் விலங்குகள்[தொகு]

கணுக்காலிகள், மெல்லுடலிகள் முள்ளந்தண்டிலிகளில் பறக்கும் தன்மை கொண்டனவையாகும்.

கணுக்காலிகள்[தொகு]

தேனீ பறக்கும் நிழற்படம்..

கணுக்காலிகளில் பூச்சிகள் பறக்கும் மற்றும் வழுக்கும் முறை கொண்டு அசைகின்றன. பறக்கும் முறையுடைய பூச்சிகளில் இறக்கை காணப்படுகின்றது. சில உதாரணங்கள்: தும்பி, வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி. இவற்றின் பறக்கும் முறைகள் அறிவியலில் ஆராயப்பட்டவண்ணம் உள்ளன. சில பூச்சியினங்கள் இறக்கைகள் ஏதுமற்ற நிலையிலும் வளிமண்டலத்தில் அசையும் தன்மை உடையன. இவை மரத்துக்கு மரம் தாவுவதற்கு வழுக்கும் முறையைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு உதாரணங்களாக:

 • முள்மயிர்வாலிகள் (bristletails): சில மரவாழ் முள்மயிர்வாலிகள் வழுக்கும் முறையைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு இறக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை பறக்கும் பூச்சிகளுக்கு கூர்ப்பில் முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளன என்று கருதப்படுகின்றது. வழுக்குவதற்குத் தேவையான முக்கியமான உறுப்பாக இதன் நடுப்பகுதி வால் இருக்கின்றது.[1]
 • வழுக்கும் எறும்புகள்: வழுக்கும் (மிதக்கும்) முறைமூலம் அசையும் பூச்சிவகைகளில் வழுக்கும் எறும்பும் அடங்கும். சாதாரண எறும்பு மேலிருந்து கீழே விழ வான்குடை முறையைப் பயன்படுத்துகிறது. செபலோட்டுக்கள் (Cephalotes) என்னும் எறும்பு இனங்கள் வழுக்கும் தன்மை கொண்டன என அறியப்பட்டுள்ளது.
 • சிலந்தி: சில இளம் சிலந்திகளும் வேறு சில சிலந்திவகைகளும் தமது நூலிழையைப் பயன்படுத்தி வான்குடை முறைப்படி அசைகின்றன.

மெல்லுடலிகள்[தொகு]

மெல்லுடலிகளில் பறக்கும் திறனைக் கொண்ட உயிரினமொன்று பறக்கும் கணவாய் ஆகும். இவை கடல் மேற்பரப்பில் வழுக்கும் முறையைப் பயன்படுத்தி அசைகின்றன. தம்மைக் கொல்லவரும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க இச்செயன்முறை உதவுகிறது. ஒம்மாசுட்ரேபிடே (Ommastrephidae) எனும் குடும்பத்தைசேர்ந்த சில கணவாய் வகைகள் இத்தகைய ஆற்றல் உடையவை. யப்பானிய அல்லது பசுபிக் பறக்கும் கணவாய் இனங்கள் தாம் உள்ளெடுத்த நீரைப் பீச்சியடிப்பதன் மூலம் கடல்நீர் மேற்பரப்பில் இருந்து மேலெழும்புகின்றன. பின்னர் தமது துடுப்புகளை விரித்து இறக்கை போன்றதொரு அமைப்பை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் பறக்கும்/வழுக்கும் போது தமது சமநிலையைப் பேணுகின்றன. சில வகை யப்பானிய பறக்கும் கணவாய்கள் தொடர்ச்சியாக நீரைப் பீச்சியடித்துப் பறக்கின்றன எனப்படுகின்றது. இந்த முறை மூலம் இவை செக்கனுக்கு 11.2 மீட்டர்கள் வேகத்தில் பறக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் பறக்க அல்லது வழுக்க வல்ல தூரம் 30 – 50 மீட்டர்கள் மட்டுமே. சில பறவைகள் இரையைப் பிடிப்பதற்கு நீர்நிலையின் கீழ் செல்கின்றன. இக் கணவாய்கள் தாம் இரையாகாமல் தவிர்ப்பதற்கு நீர்நிலையின் மேலே எழும்புகின்றன.

முள்ளந்தண்டுள்ள பறக்கும் விலங்குகள்[தொகு]

பறக்கும் மீன்கள்[தொகு]

பறக்கும் மீன்

எக்சொசிடிடே (Exocoetidae) குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பது பறக்கும் மீன் வகை இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சிறியது தொடக்கம் நடுத்தர அளவு வரையான சமுத்திரவாழ் மீன்கள் ஆகும். பெரிய பறக்கும் மீன் 45 சென்டிமீட்டர் (18 அங்குலம்) நீளமானவை. ஆனால் பெரும்பாலான இனங்கள் 30 செ.மீ. (12 அங்குலம்) நீளத்துக்கும் குறைவாகவே உள்ளன. அவற்றை இரண்டு இறக்கை உடைய வகைகள் மற்றும் நான்கு இறக்கை வகைகள் எனப் பிரிக்கலாம். மற்றைய மீன்களை விட இவற்றின் மார்புத்துடுப்பு (pectoral fin) இயல்பான அளவுக்கும் அதிகமாகக் காணப்படும். பறக்கும் மீன்கள் அவற்றின் மார்புத்துடுப்பைப் பயன்படுத்தி நீருக்கு மேலே சுமார் நூறு மீட்டர் வரையிலும் வழுக்குகின்றன. இச்செயற்பாடு பெரும்பாலும் அவற்றை இரையாக்க முயற்சிக்கும் உயிரினங்களிடம் இருந்து தப்புவதற்கே நிகழ்கின்றது என நம்பப்படுகிறது. வழுக்குமுறை: பறப்பதற்கு முன்னர், நீருக்கடியில் ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) வேகத்தில் நீர்மேற்பரப்பை நோக்கி சாய்வாக (விமானம் பறப்பதற்கு எழும்புவதைப் போன்று) நீந்துகின்றன.[2] இதன் பொழுது இவற்றின் வால்துடுப்பு விரைவாக அடித்துக் கொள்கின்றது. நீரில் இருந்து உந்தி நீர்மேற்பரப்பை அடைந்த மீன்கள் மார்புத் துடுப்பைப் பயன்படுத்தி நீர்மட்டத்துக்கு சுமார் 1.2 மீட்டர்களுக்கு மேலே பறக்கின்றன அல்லது வழுக்குகின்றன. இவை தொடர்ச்சியாகப் பறப்பதற்கு தமது வால் துடுப்பை நீரில் அடித்துக்கொள்கின்றன.

பறக்கும் பலஞ்சர்கள்

பறக்கும் தவளைகள்[தொகு]

இராக்கொபெரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் தவளைகள் வழுக்குமுறையைப் பயன்படுத்தி 45 பாகைக்கும் குறைவான கோணத்தில் மேலிருந்து கீழே இறங்குகின்றன. மற்றைய தவளைகள் வான்குடை முறையைப் பயன்படுத்தி கீழிறங்கவல்லன. இவை விரல்களின் இடையே மற்றும் காற்பகுதிகளில் காணப்படும் சவ்வுகளைப் பயன்படுத்தி வழுக்குகின்றன. இவைகளில் ஒன்று வாலசின் பறக்கும் தவளை வகைகள் ஆகும். இவை இந்தோனேசிய மற்றும் மலேசிய பகுதிகளில் வசிக்கின்றன.

ஊர்வன[தொகு]

 • திராக்கோ எனும் பறக்கும் பல்லியினம் சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றன. மரங்களில் வாழும் இவை மரவாழ் எறும்புகளை உணவாக உட்கொள்கின்றன. இவை அறுபது மீட்டர் வரை வழுக்கவல்லன.[3]
வழுக்குகின்ற பறக்கும் அணில்
 • கிரிசொபெலியா எனும் இனத்து பாம்புகள் பொதுவாக பறக்கும் பாம்புகள் என அழைக்கப்படுகின்றன. இவை தென்கிழக்கு ஆசியா, மெலனீசியா, இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தமது உடலை பக்கவாட்டாக நீட்சியடையச்செய்வதன் மூலமும் விழா எலும்பைத் தட்டையாக மாற்றுவதன் மூலமும் வழுக்குகின்றன. இவை நூறு மீட்டர் வரை வழுக்கவல்லன. இலங்கை பறக்கும் பாம்பு இவ் வகையைச் சார்ந்ததொன்றாகும்.

முலையூட்டிகள்[தொகு]

 • குட்டிகளைச் சுமக்க பைக்களுடன் இருக்கும் பாலூட்டி விலங்குகளான பைம்மா இனக்குடும்பத்து பெத்தாரசுக்கள். இவற்றில் பறக்கும் பலஞ்சர்கள் ( flying phalangers) இவை பார்ப்பதற்கு அணிலைப் போன்று இருந்தாலும் அணில்வகையைச் சார்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவை இரவாடிகள் ஆகும். பொசும் எனும் பலஞ்சர்கள் ஆத்திரேலியா நியூகினியா நாடுகளில் வசிக்கின்றன.[4][5][6][7][8][9]
 • வௌவால் இனம். இவற்றின் இறக்கைகள் பறவைகளைக் காட்டிலும் மெல்லியதாக இருந்தாலும் அதிகமாக எலும்புகளைக் கொண்டன.
 • பறக்கும் அணில். இவை பறவை போன்றோ அல்லது வௌவால் போன்றோ பறக்கக் கூடியனவல்லை. ஏனைய வழுக்கும் விலங்கினம் போன்று வழுக்க வல்லன. தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் மிதவெப்ப மண்டல நாடுகளிலும் காணப்படுகின்றன. வடதுருவத்துக்குரிய பகுதிகளில் கூட இவை வசிக்கவல்லன என அறியப்பட்டுள்ளது. பொதுவாக இவையும் இரவாடிகள் ஆகும். பலவன் பறக்கும் அணில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அகணிய உயிரி ஆகும்.
தெரசோர்

அழிந்துபோன பறக்கும் விலங்குகள்[தொகு]

ஊர்வன[தொகு]

 • திராக்கோ பல்லியினத்தை ஒத்த பல்லிகள். இக்கரோசோரசு, சீலுரோசோரசு, மெசிசுடோதிராகலோசு [10] பேரினங்கள் இவற்றுள் அடங்கும்.
 • தெரசோர் (இறகுடைய பல்லி) [11] அல்லது டெரடக்டல் (pterodactyl) என்று அழைக்கப்படும் முற்றிலுமாக அழிந்துவிட்ட பறக்கும் பல்லிகள் முதன்முதல் பறக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்கினம் என்று நம்பப்படுகின்றது.

காணொளி இணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 1. Yanoviak, SP; Kaspari, M; Dudley, R (2009). "Gliding hexapods and the origins of insect aerial behaviour". Biol Lett 5 (4): 510–2. doi:10.1098/rsbl.2009.0029. பப்மெட்:19324632. 
 2. Hyungmin Park, Haecheon Choi. (2010). "Aerodynamic characteristics of flying fish in gliding flight.". Journal of Experimental Biology 213 (19): 3269-3279. http://jeb.biologists.org/content/213/19/3269. 
 3. Ross Piper (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press.
 4. Gliding Possums — Environment, New South Wales Government
 5. Cronin, Leonard — "Key Guide to Australian Mammals", published by Reed Books Pty. Ltd., Sydney, 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7301-0355-2
 6. van der Beld, John — "Nature of Australia — A portrait of the island continent", co-published by William Collins Pty. Ltd. and ABC Enterprises for the Australian Broadcasting Corporation, Sydney, 1988 (revised edition 1992), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7333-0241-6
 7. Russell, Rupert — "Spotlight on Possums", published by University of Queensland Press, St. Lucia, Queensland, 1980, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7022-1478-7
 8. Troughton, Ellis — "Furred Animals of Australia", published by Angus and Robertson (Publishers) Pty. Ltd, Sydney, in 1941 (revised edition 1973), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-12256-3
 9. Morcombe, Michael & Irene — "Mammals of Australia", published by Australian Universities Press Pty. Ltd, Sydney, 1974, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7249-0017-9
 10. Ancient Gliding Reptile Discovered | LiveScience
 11. Jones, Daniel (2003) [1917], English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-12-539683-2 {{citation}}: Unknown parameter |editors= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Animal flight
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_விலங்குகள்&oldid=3633247" இலிருந்து மீள்விக்கப்பட்டது