பத்தாயிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகாமனிசியப் பேரரசில் செனபோன் மற்றும் பத்தாயிரம் பேரின் பயணப் (சிவப்பு கோடு) பாதை.

பத்தாயிரம் (Ten Thousand, பண்டைக் கிரேக்கம்οἱ Μύριοι , ஓய் மிரியோய் ) என்பது பண்டைய கிரேக்கர்கள் அடங்கிய கூலிப்படையினர் ஆவர். இந்தப் படையைக் கொண்டு இளைய சைரஸ், பாரசீக பேரரசின் அரியாசனத்தை அவரது சகோதரர் இரண்டாம் அர்தசெர்க்சிடம் இருந்து கைப்பற்ற முயற்சித்தார். குனாக்சா போருக்கு அணிவகுத்து சென்ற அவர்கள் மீண்டும் கிரேக்கத்திற்கு (கிமு 401-399) திரும்பி வந்தனர். இப்பயணம் குறித்து அவர்களின் தலைவர்களில் ஒருவரான செனபோன் தனது படைப்பான அனாபாசிஸில் பதிவு செய்துள்ளார்.

முன்னுரை[தொகு]

பாரசிகத்தின் இரண்டாம் டேரியஸ் கிமு 405 இல் இறந்தார். அவருக்குப் பிறகு அவரின் மூத்த மகன் இரண்டாம் அர்ட்டாக்ஜெர்க் என்ற பட்டப் பெயருடன் கிமு 404 இல் அரியணை ஏறினார். இவருக்குப் போட்டியாக இவரின் தம்பியும், கிமு 407 இல் இருந்து சின்ன ஆசியாவுக்கான பாரசிக பிரதிநிதியாக இருந்துவந்த சைரஸ் அரசுரிமை கோரினார். சைரஸ் தன் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள எசுபார்த்தாவின் உதவியை நாடினார். சைரசுக்கு கிரேக்கர்களின் வீரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. மேலும் அச்சமயம் பெலோபொன்னேசியன் போர் முடிந்திருந்த காலம் என்பதால் கிரேக்க போர் வீரர்கள் பலர் வேலை இல்லாமல் இருந்தனர். அதனால் கூலிப்படையில் பணியாற்ற சித்தமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்களைக் கொண்டு ஒரு படையைச் சைரஸ் திரட்டினார். பத்தாயிரம் பேரடங்கிய இந்தப் படைக்குக் கிளியார்க்கஸ் என்ற எசுபார்த்தனை தளபதியாக நியமித்தார். இப்படையில் ஏதெனியரும், சாக்கிரடிசின் சீடருமான செனபோன் போர் அனுபவம் பெறவேண்டி இணைந்தார்.

சேரவேண்டிய இடம் செய்யவேண்டிய போர் முதலியவை பற்றிய விவரங்கள் முதலில் பத்தாயிரவருக்குச் சொல்லப்படவில்லை. ஏனென்றால் தொலை தூரம் செல்வதென்றால் படையினர் விரும்ப மாட்டார்கள் என்பதாகும். படைத்தலைவரான கிளியார்க்கசுக்கு மட்டும் என்ன பணி என்பது தெரிவிக்கபட்டிருந்தது. சின்ன ஆசியாவில் உள்ள பிசிடியா என்ற பகுதியில் நடக்கும் ஒரு கலகத்தை அடக்க படையினர் அழைத்து செல்லப்படுவதாகக் கருதினர். கிமு 401 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இப்படையினர் சார்டிஸ் நகரத்திலிருந்து பறப்பட்டனர். சிறிது தொலைவு சென்றபிறகு தான் தாங்கள் பாபிலோனியாவுக்குச் செல்கிறோம் என்றும், போர் புரியவேண்டியது பாரசிக மன்னரை எதிர்த்து என்று தெரிந்தது. கலகம் செய்த படையினருக்கு நிறையச் சம்பளம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்துச் சமாதானப்படுத்தப்பட்டனர்.

போர்தொடர்[தொகு]

செனோபோனின் அனபாசிஸ் .[1]

கிமு 401 மற்றும் 399 க்கு இடையில், பத்தாயிரம் பேர் அனத்தோலியா முழுவதும் திரண்டு அணிவகுத்து, குனாக்சா போரில் சண்டையிட்டனர். பின்னர் மீண்டும் கிரேக்கத்திற்கு அணிவகுத்துத் திரும்பினர்.

செனபோன் அனபாசிசில் குறிப்பிட்டதாவது, கிரேக்க கனரகத் துருப்புக்கள் குனாக்சாவில் இரண்டு முறை தங்களை எதிர்த்த பாரசீகப் படைகளை முறியடித்தன. அதில் ஒரு கிரேக்க சிப்பாய் மட்டுமே காயமடைந்தார். போரில் வீரத்துடன் போரிட்ட கிரேக்கர்கள் ஏறக்குறைய வெற்றிபெரும் நிலையில் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சைரஸ் கிரேக்க மன்னர் அர்தசெராசசை தன் கைகளாலேயே கொல்லவேண்டும் என்ற வெறியில் அவரைத் தாக்கச் சென்று, தன் உயிரை இழந்தார். போருக்குப் பிறகுதான் கிரேக்கர்கள், சைரஸ் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டனர். இதனால் அவர்களின் வெற்றி பயனற்றதானதால், போர்ப் பயணம் தோல்வியடைந்தது.[2]

பத்தாயிரம் பேரும் தங்களுக்கான உணவு, வேலை கொடுப்பவர்கள், நம்பகமான கூட்டாளிகள் போன்றவர் இல்லாமையால் தங்கள் நாட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பதை எண்ணி கவலையுற்றனர்.

இவர்கள் தங்கள் பாரசீக கூட்டாளியான அரியாயசை அரியணையில் அமர்த்த முன்வந்தனர். ஆனால் அவர் அரச குருதியைச் சேராதர் என்பதால், அரியணையைத் தக்கவைத்துக் கொள்ளப் பாரசீகர்களிடையே போதுமான ஆதரவு கிடைக்காது என மறுத்துவிட்டார்.

இதனால் கிரேக்கப் படையினர் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் சரணடையவும் மறுத்துவிட்டனர். இவர்களுடன் போரிட அர்ட்டாக்ஜெர்கசசுக்கு மனம் இல்லை. இவர்களை எப்படியாவது தன் நாட்டில் இருந்து வெளியேற்றினால் போதும் என்று நினைத்தார். நாட்டில் இருந்து வெளியேறி திக்குத் திசை தெரியாமல் திரிந்து உணவு இல்லாமல் சாகட்டும் என விட்டுவாட்டார்.

கிரேக்கர்களும் தங்கள் தாய்நாடு திரும்ப ஆவல் கொண்டனர். வந்த வழியே செல்ல விரும்பாமல் வடக்கு நோக்கி புறப்பட்டனர். முன்பின் பார்த்திராத வழியில் செல்லத் துவங்கினர்.

கிளியார்க்கசும் அவரின் நான்கு படைத்தலைவர்களும் கிரேக்க மூத்த அதிகாரிகளை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பாரசிக மன்னரின் முன் அழைத்துச் செல்லப்பட்டு மரண தண்டனை விதிக்கபட்டனர்.[3]

தலைவர்களை இழந்த கிரேக்கர்கள் புதிய அதிகாரியாக செனொபெனை தேர்ந்தெடுத்தனர். கிரேக்கர்கள் அவரின் தலைமையில் அவர்கள் கார்டுயீன் மற்றும் ஆர்மீனியா வழியாக கருங்கடலுக்கு வடக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

ஜீன்-அட்ரியன் கிக்னெட் வரைந்த குனாக்ஸா போரில் பத்தாயிரவர் பின்வாங்கல் ஓவியம். லூவ்ரே

பாரசீக குதிரைப்படையினர் செனோபோனையும் அவரது ஆட்களையும் துன்புறுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து வந்தனர். ஒவ்வொரு நாளும் பின்தொடர்ந்து வந்த, இந்த குதிரைப்படை மீது, பத்தாயிரத்தவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. எச்சரிக்கையுடன் நெருக்கமாக நகர்ந்து சென்றனர்.

ஒரு இரவு, செனோபோன் வில்லாளர்கள் மற்றும் இலகு ரக குதிரைப்படைகளின் ஒரு அமைப்பை உருவாக்கினார். பாரசீக குதிரைப்படை அடுத்த நாள் வந்து பல கெஜங்கள் தொலைவில் இருந்து ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது செனோபோன் திடீரென்று தனது புதிய குதிரைப்படையை கட்டவிழ்த்துவிட்டார். இதனால் திகைத்து குழப்பமடைந்த எதிரியை அடித்து நொறுக்கி, பலரைக் கொன்றார்.[4]

திசாபெர்னஸ் ஒரு பெரிய படையுடன் செனோபோனைப் பின்தொடர்ந்தார். அவர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்றனர்.[5]

தங்களுக்கு எதிரான மனநிலைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் மையத்தில் செனோபோன் தனது படைக்கு உணவுதேட முடிந்தது என்பது ஆச்சரியமாக கருதப்பட்டது.

பத்தாயிரம் பேர் இறுதியில் நவீன தென்கிழக்கு துருக்கியின் மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியான கார்டுசியன்களின் நாட்டிற்குள் நுழைந்தனர்.

காட்டுவாசிகளின் பகுதிக்குள் நுழைந்த பத்தாயிரவர் பேர் பல நாட்களுக்கு கற்களாலும், அம்புகளால் தாக்கப்பட்டனர்.

மலைப் பகுதியில் கடுமையான சண்டைக்குப் பிறகு, கிரேக்கர்கள் சென்ட்ரைட்ஸ் ஆற்றில் உள்ள மலைகளின் வடக்கு அடிவாரத்திற்குச் சென்றனர், ஒரு பெரிய பாரசீகப் படை வடக்கே பாதையைத் தடுப்பதைக் கண்டனர். கார்டுசியன்கள் காட்டுவாசிகள் கிரேக்கர்களின் பின்புறத்தில் உள்ளதால் பின்வாங்கிச் செல்லவும் முடியாது. இதனால் செனோபோன் தலைமையிலான கிரேக்கர்கள் மொத்தமாக அழியக்கூடிய அச்சுறுத்தலை சந்தித்தனர்.

செனோபோனின் வீரர்கள் ஆற்றில் ஆழம் குறைந்த ஒரு பகுதியைக் கண்டுபிடித்தனர். ஆனால் பாரசிகர்கள் நகர்ந்து வந்து அந்த வழியை தடுத்தனர். செனோபோன் ஒரு சிறிய படையை மற்றொரு ஆழம் குறைந்த பகுதியை நோக்கி திருப்பி அனுப்பினார், இதனால் பாரசீகர்கள் தங்கள் படையின் பெரும்பகுதியை பிரித்து அவர்களை நோக்கி சென்றனர். செனபோன் ஆழம் குறைந்த பகுதியில் எஞ்சியிருந்த பாரசிகப் படையை முற்றிலுமாகத் தாக்கி முறியடித்தார்.

டெலியம் சமருக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகும், எபமினோடாஸ் லுக்ட்ராவில் நடந்த தாக்குதலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பும் செய்யப்பட்ட ஆழமிக்க தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

செனபோன் மற்றும் பத்தாயிரவர் மலையிலிருந்து பார்த்தல் 19 ஆம் நூற்றாண்டின் சித்தரிப்பு

கிரேக்கர்கள் ஆர்மீனியா வழியாக அணிவகுத்துச் சென்றபோது குளிர்காலம் வந்துவிட்டது, "அந்த வானிலைக்கு ஏற்ற ஆடைகள் முற்றிலும் அவர்களிடம் இருக்கவில்லை ",[6] இதனால் எதிரி படைகளினால் ஏற்பட்டதை விட அதிகமான உயிரிழப்புகளை ஏற்பட்டன.

கிரேக்கர்களுக்கு உணவு தேவைப்படாமல் இருந்த ஒரு கட்டத்தில், உணவுப்பொருட்கள் இருப்பதாக அறியப்பட்ட ஒரு மரக் கோட்டையைத் தாக்க முடிவு செய்தனர். அந்தக் கோட்டை காடுகளால் சூழப்பட்ட ஒரு மலையில் அமைந்திருந்தது. செனோபோன் தனது ஆட்களில் கொஞ்சம் பேரை மலைப்பாதையில் கோட்டையில் காவலுக்கு உள்ளவர்களுக்கு காணும்படி செல்ல கட்டளையிட்டார்; கோட்டை பாதுகாவலர்கள் அவர்கள் மீது கற்பாறைகளை எறிந்தபோது, சிப்பாய்கள் மரங்களுக்குள் பதுங்குவர். பின்னர் வெளியே வருவர், அவர்கள் மீண்டும் பாறைகளை எரிவர். இதை "இதை அடிக்கடி செய்தனர், கடைசியில் அவருக்கு முன்னால் நிறைய கற்கள் கிடந்தன, ஆனால் ஒன்றுகூட அவர்களைத் தீண்டவில்லை." பின்னர், மற்ற வீரர்கள் அவர்களைப் பின்பற்றி, அதை ஒரு வகையான விளையாட்டாக ஆக்கி, பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை மகிழ்ந்தனர் ஒரு கணம் ஆபத்தை ரசித்து, பின்னர் விரைவாக தப்பித்து போக்கு காட்டினர்.

கற்கள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதால் கோட்டையை வந்து தாக்கினர். கோட்டையை பாதுகாத்த படையினரில் பெரும்பாலானோர் சண்டையிடவில்லை.[7]

தலத்தா! தலத்தா! (Θάλαττα! θάλαττα!, "கடல்! கடல்!").டிரேபிஸஸ் (டிரெபிஸோண்ட்) என்பது பாரசீகத்தின் உள்நாட்டிலிருந்து பின்வாங்கியபோது பத்தாயிரம் பேர் அடைந்த முதல் கிரேக்க நகரமாகும். ஹெர்மன் வோகலின் 19ஆம் நூற்றாண்டு சித்தரிப்பு

தெச்சஸ் மலையின் உயரமான பகுதியில் இருந்து பத்தாயிரம் பேர் (உண்மையில் அப்போது அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டிருந்தது), கடலையும், கடலோரத்தில் இருந்த நட்பு கிரேக்க குடியேற்றங்களையும் கண்ட மகிழ்ச்சியான தருணத்தை செனபோன் பதிவு செய்துள்ளார். அப்போது அவர்கள் Θάλαττα! θάλαττα! : தலத்தா! தலத்தா! ("கடல்! கடல்!" ) என்று கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.[8]

விரைவில், செனோபோனின் ஆட்கள் கருங்கடலின் கரையோரத்தில் உள்ள திரேபீசை அடைந்தனர் ( அனபாசிஸ் 4.8.22). குனாக்சாவைவிட்டு இவர்கள் புறப்பட்டபோது மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் இருந்தனர். ஆனால் பாரசிகத்தில் இருந்து திரும்பி திரேபீசஸ் நகரத்தை அடைந்தபோது பல்வேறு காரணங்களினால் எண்ணாயிரத்து நூறு பேர் மட்டுமே இருந்தனர். இவர்கள் இதற்குப் பிறகு கலைந்து செல்லாமல் திரேஸ் நாட்டின் அரசனிடம் பணிக்கு அமர்ந்தனர். அந்த நாட்டின் உள்ளூர் மக்களுடன் ஒரு கூட்டணி சேர்ந்து, மலைநாட்டில் பாரசிகர்களின் ஆதரவாளர்களான கொல்கியர்களுக்கு எதிராக கடைசியாக போரிட்டனர். போரில் கிரேக்கர்கள் வெற்றிபெற்றனர்.[9]

பின்விளைவுகள்[தொகு]

பாரசிகத்தின் மீதான பத்தாயிரவரின் வெற்றிப் பயணமானது, அதுவரை கிரேக்கர்களுக்கு பாரசிகர்கள் மீது இருந்துவந்த பிரமையைப் போக்கியது. கிரேக்கத்துக்கு வந்த இந்தக் கூலிப்படையினர் கிமு 399 இல் எசுபார்த்தாவின் படையில் இணைந்தனர் அப்போது இவர்கள் ஆறாயிரம் பேராக குறைந்து போயிருந்தனர். பின்னர் பாரசிகத்தை எதிர்த்து போர் புரிந்தனர்.

படைப்புகள்[தொகு]

இவர்கள் பாரசிகத்துக்குச் சென்று திரும்பிவந்த வரலாற்றை பதினாயிரவர் நடைபயணம் என்று வருணித்து செனபோன் அனபாசிஸ் என்ற நூலை எழுதினார். அதில் கிரேக்கர்களின் விடா முயற்சி, சகிப்புத் தன்மை போன்றவற்றை நன்கு விளக்கி எழுதினார்.

குறிப்புகள்[தொகு]

  1. Brownson, Carlson L. (Carleton Lewis) (1886). Xenophon;. Cambridge, Mass. : Harvard University Press. https://archive.org/details/xenophon03xeno/page/n5. 
  2. Bigwood, J. M. (1983). "The Ancient Accounts of the Battle of Cunaxa". The American Journal of Philology 104 (4): 341. doi:10.2307/294560. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9475. https://archive.org/details/sim_american-journal-of-philology_winter-1983_104_4/page/341. "The Greek mercenaries were victorious, but the cause was lost.". 
  3. "Clearchus of Sparta". Encyclopedia Iranica. Retrieved 8 June 2021.
  4. Witt, p. 123
  5. Anabasis III.5
  6. Witt, p. 166
  7. Witt, pp. 175-176
  8. Xenophon (1904). Anabasis. Oxford, UK: Clarendon Press (published 1961). Book 4, Chapter 7, Section 24. https://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0201%3Abook%3D4%3Achapter%3D7%3Asection%3D24. பார்த்த நாள்: 3 January 2014. 
  9. Witt, pp. 181-184
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாயிரம்&oldid=3520990" இலிருந்து மீள்விக்கப்பட்டது