டெலியம் சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெலியம் சமர் (டெலியன்)
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு424
இடம் டெலியம்
போயோட்டியா வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ் போயோட்டியா
தளபதிகள், தலைவர்கள்
Hippocrates  Pagondas
பலம்
மொத்தம் 17,000
7,000 ஹாப்லைட்[1]
10,000 மெட்டிக்[1]
மொத்தம் 18,500
7,000 ஹாப்லைட்கள்[2]
10,000 இலகுரக ஆயுதம் ஏந்திய படைகள்[2]
1,000 குதிரைப்படை[2]
500 பெல்டாஸ்ட்கள்[2]
இழப்புகள்
சுமார் 1,200 சுமார் 500

டெலியம் சமர் (Battle of Delium) என்பது பெலோபொன்னேசியன் போரின் போது கிமு 424 இல் நடந்த ஒரு சமராகும். இது எசுபார்த்தன்களின் கூட்டாளிகளாக இருந்த போயோட்டியர்களுக்கும், ஏதெனியர்களுக்கும் இடையே நடந்த சண்டையாகும். இது அடுத்தடுத்த வாரங்களில் டெலியம் முற்றுகையுடன் முடிவடைந்தது.

நிகழ்வு[தொகு]

எசுபார்த்தன்களின் கூட்டாளிகளாக இருந்த போயோட்டியர்களுக்கும், ஏதெனியர்களுக்கும் இடையே எப்போதும் பகை இருந்துவந்தது. போயோட்டியாவில் சிலவர் ஆட்சி நடந்துவந்தது. மக்களாட்சி ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தனர். போயேட்டியாமீது படை எடுத்தால் அங்குள்ள மக்களாட்சி ஆதரவாளர்கள், தங்களுக்கு சாதகமாக இருந்து வெற்றி வாங்கித் தருவார்கள் என ஏதென்சு கருதியது. அதன்படி கிமு 424 இல், படையெடுப்புக்குத் திட்டமிடப்பட்டது. ஏதெனியன் தளபதி டெமோஸ்தீனஸ் தலைமையிலான ஒரு படை போயேட்டியாவின் மேற்குப் பக்கமாக தாக்குவது; இப்போகிரட்டீஸ் தலைமையிலான படை போயோடியாவின் கிழக்குப் பக்கமாக தாக்குவது; போயோட்டியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கெரோனியா என்ற ஊரை மக்களாட்சிப் பிரிவினர் கைப்பற்றுவது; இப்படி மூன்று புறங்களிலிருந்தும் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்தத் திட்டப்படி செயல்கள் நடைபெறவில்லை. ஏனெறால் சகல விசயங்களும் அவர்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. அவர்கள் ஏதெனியப் படைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். டெமோஸ்தீனஸ் தவறுதலாக மிக விரைவாகப் பயணம் செய்து பெயோட்டியாவின் சிபே பகுதிக்கு தன் படைகளுடன் வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு அவர்களது திட்டங்களை நிகோமாச்சஸ் என்ற ஃபோசியன் மூலமாக கசிந்திருந்தது. மேலும் இப்போகிரட்டீஸ் அச்சமயத்தில் வந்து சேராததால், டெமோஸ்தீனஸ் மட்டும் தாக்குதல் நடத்த முடியாமல் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போகிரட்டீஸ் இறுதியில் ஏதெனிய இராணுவத்துடன் போயோட்டியாவிற்கு வந்து சேர்ந்தார். ஆனால் தாங்கள் வகுத்த திட்டம் சொதப்பிவிட்டதை உணர்ந்தார். மக்களாட்சி ஆதரவாளர்கள் கெரோனியாவை ஆக்கிரமிப்பது என்பதும் நடக்கவில்லை. இறுதியில் இப்போகிரட்டீஸ் அங்கிருந்த டெலியம் கோவிலை கோட்டை போல பலப்படுத்தத் தொடங்கினார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, கோட்டைப் பணிகள் நிறைவடைந்தன. அதன்பிறகு இப்போகிரட்டீஸ் ஒரு பாதுகாப்புப் படையை அங்கு அமர்த்திவிட்டு, மீதமுள்ள தனது படைகளுடன் ஏதென்சுக்குத் திரும்பத் தொடங்கினார். அதே நேரத்தில், போயோட்டியர்கள் இப்போகிரட்டீசின் படைகளை எதிர்க்க தங்கள் படைகளைத் திரட்டினர். ஆனால் ஏதெனியர்கள் வெளியேறுவதைக் கண்டதும், போயோட்டியர்களில் பலர் அவர்களைத் தாக்குவது பொருளற்றது என்று நினைத்தனர். ஏதெனியர்கள் மீண்டும் திரும்பி வந்து டெலியத்தை படையெடுப்புகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்று ஏதெனியர்களின் திட்டத்தை அறிந்திருந்த போயோடியன் படைகளின் தளபதியான தீப்சின் பகோண்டாஸ் அவர்களைத் தாக்கும்படி படைகளைத் தூண்டினார். அதன்படி போயோட்டியா படைகள் ஏதெனியப் படைகளைத் தாக்கியன. இந்தப் போரில் ஏதெனியப் படை படு தோல்வியைக் கண்டது. இப்போகிரட்டீஸ் போரில் மடிந்தார்.

பொயோட்டியர்கள் இரவு வரை ஏதெனியர்களை துரத்தி அடித்தனர். பெரும்பாலான ஏதெனியர்கள் டெலியத்தில் உருவாக்கப்பட்ட அரணுக்குத் திரும்பினர். அங்கு போயோடியன் அறிவிப்பாளர் ஒருவர் ஏதெனியர்கள் போயோட்டியர்களின் புனித தலத்தை மாசுபடுத்துவதாகவும், எனவே அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்தார். ஏதெனியர்கள் அந்த தலம் தற்போது தங்களுடையது என்றும், எனவே தற்போது தங்களுக்கு புனிதமானது என்றும், போயோட்டியர்களிடமிருந்து தற்காத்தாக்கொள்ள அதை தாங்கள் வைத்திருந்ததாகவும் பதிலளித்தனர்.

பின்விளைவுகள்[தொகு]

இரண்டு வாரங்களுக்கு, ஏதெனியர்களின் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை . ஆனால் கொரிந்தில் இருந்து 2,000 ஹோப்லைட்டுகள் மற்றும் அவர்களின் பல்வேறு கூட்டாளிகளின் பிற துருப்புக்களும் போயோட்டியர்களுடன் வந்து இணைந்தனர். டெலியனில் அரண் அமைத்து தங்கியுள்ள ஏதெனியர்களிடம் போராட போயோட்டியர்கள் ஒரு விசித்திரமான சாதனத்தை உருவாக்கினர். இது துசிடிடிசியசின் (4.100) விளக்கத்தின்படி, ஒரு வகையான தீச்சுடர் எறிவி ஆகும். இதைக் கொண்டு டெலியத்திற்கு தீ வைத்து ஏதெனியர்களை விரட்ட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் சுமார் 200 ஏதெனியர்கள் கொல்லப்பட்டனர்; மீதமுள்ளவர்கள் தப்பிக்க விடப்பட்டனர். டெலியம் கைப்பற்றப்பட்ட பிறகுதான், டெமோஸ்தீனஸ் மற்றும் அவரது படைகள் தாமதமாக வந்தடைந்தன. ஆனால் அவருக்கும் இப்போகிரட்டீசுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாததால், அவரது வருகை பொதுவாக பயனற்றதாக ஆனது. அவரின் தலைதையிலான படைகள் சிசியோன் அருகே வந்திறங்கின ஆனால் அவை விரைவில் தோற்கடிக்கப்பட்டன.

இந்தப் போரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதுமையான கருவியைக் காட்டுவதுடன், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் முதல்முறையாக திட்டமிடப்பட்ட நுண்ணறிவு சார்ந்த தந்திரமான போரை பகோண்டாஸ் நடத்தினர். முந்தைய நூற்றாண்டுகளில், கிரேக்க நகர அரசுகளுக்கிடையேயான போர்கள் ஹாப்லைட்டு வீரர்களுக்கு இடையே ஒப்பீட்டளவில் எளிமையான மோதல்களாக இருந்தன. போர்களில் குதிரைப்படை முக்கிய பங்கு வகிக்கவில்லை. மேலும் அனைத்தும் காலாட்படை வீரர் அணிகளின் ஒற்றுமை மற்றும் ஆற்றலைச் சார்ந்ததாக இருந்து, எதிரிக்கு எதிராக சிரமப்பட்டுப் போராடுவதாக இருந்தது. டெலியம் போரில், பகோண்டாஸ் ஆழ்ந்த தேர்வுகள், சேமப் படைப் பகுதிகள், குதிரைப்படை பயன்பாடு, இலகுரக ஆயுதம் ஏந்திய சண்டைகள், போரின் போது தந்திரோபாயங்களில் படிப்படியாக மாற்றங்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Kagan, Donald (1974), the Archidamian War, p. 281.
  2. 2.0 2.1 2.2 2.3 Kagan, Donald (1974), the Archidamian War, p. 282.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலியம்_சமர்&oldid=3479518" இலிருந்து மீள்விக்கப்பட்டது