பட்டுக்கோட்டை அழகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டுக்கோட்டை அழகிரி
தனிநபர் தகவல்
பிறப்பு அழகர்சாமி
23 சூன் 1900
கருக்காக்குறிச்சி, புதுக்கோட்டை அரசாட்சி,
பிரித்தானிய இந்தியா (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 28 மார்ச்சு 1949(1949-03-28) (அகவை 48)
தஞ்சாவூர்,
சென்னை மாகாணம்,
இந்திய மேலாட்சி (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமை பிரித்தானிய இந்தியர் (1900-1947)
இந்தியர் (1947-1949)
வாழ்க்கை துணைவர்(கள்)
எத்திராசம்மாள் (தி. 1920)
பிள்ளைகள் 2 மகன்கள்
3 மகள்கள்
பெற்றோர் கண்ணம்மா (தாய்)
வாசுதேவன் (தந்தை)
படைத்துறைப் பணி
பற்றிணைவு பிரித்தானிய இந்திய இராணுவம்
பணி ஆண்டுகள் 1915-1921 (?)
சமர்கள்/போர்கள் முதல் உலகப் போர்

பட்டுக்கோட்டை அழகிரி (23 சூன் 1900 - 28 மார்ச் 1949) திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், கவிஞருமாவார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் கண்ணம்மா - வாசுதேவன் இணையருக்கு 23 சூன் 1900 அன்று பிறந்தார் அழகிரி. இவர் தந்தை, இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக வேலை பார்த்தவர்.

அழகிரிக்கு ஐந்து அகவை ஆனபோது தந்தையை இழந்தார். பின், தனது தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார்.

கல்வி[தொகு]

மதுரையில் உள்ள பசுமலை அமெரிக்கன் உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.

போர்ப்பணி[தொகு]

முதல் உலகப் போர் காலத்தில், தன் முன்னோர்களைப் பின்பற்றி பிரித்தானிய இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.[1] இராணுவப் பணியின் போது மெசொப்பொத்தேமியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய இராணுவத்தினர் இந்தியப் படை வீரர்களைத் கைவிட்டு இங்கிலாந்து சென்றுவிட்டனர்.[சான்று தேவை] அதன்பின் கடல்வழியாகக் கல்கத்தா வந்தடைந்த அழகிரி, அங்கு சிறிது நாள்கள் தங்கிவிட்டு, தனது சிற்றப்பாவான வழக்கறிஞர் வேணுகோபாலின் இல்லத்தில் சென்று தங்கினார்.[2]

தனி வாழ்க்கை[தொகு]

வேணுகோபாலின் தங்கை மகளான எத்திராசம்மாளை 1920-இல் மணந்தார் அழகிரி. இவ்விணையருக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். எத்திராசம்மாள் 25 மே 1956 அன்று மறைந்தார்.[3][4][5]

அரசியல்[தொகு]

வேணுகோபால் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த பார்ப்பன மேலாளருடன் ஏற்பட்ட பிணக்கினால் அப்பணியிலிருந்து விலகினார். ரிவோல்ட் என்னும் இதழின் ஆசிரியர்களாக இருந்த "பெரியார்" ஈ.வெ.இராமசாமி, இராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது 1 ஆகத்து 1938 அன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோருடன் சேர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் தொடங்கி மதராசு வரை நடைப்பயண இந்தி எதிர்ப்புப் பரப்புரை செய்தார்.[6]

திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சைக் கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது. தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்தச் சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாகப் பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதைச் சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கிய அந்தச் சிறுவன்தான் மு. கருணாநிதி.

மறைவு[தொகு]

பட்டுக்கோட்டை அழகிரி, காசநோயின் தாக்கத்தால் 28 மார்ச் 1949 அன்று பிற்பகல் 2 மணியளவில், தன் 49-ஆம் அகவையில் காலமானார்.[7]

அவர் மறைவுக்கு விடுதலை இதழில் இரங்கல் தெரிவித்த பெரியார், "நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும் என்னை மனப்பூர்வர்மாய் நிபந்தனை இல்லாமல் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். இந்த 30 ஆண்டுக் காலத்தில் என் கொள்கையிலும் திட்டத்திலும் எவ்வித ஆலோசனையும் தயக்கமும் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து அவைகளுக்காகத் தொண்டாற்றி வந்தவர். கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒருநாளும் காணமுடிந்ததில்லை. அவருடைய முழு வாழ்க்கையிலும் அவர் இயக்கத் தொண்டைத் தவிர வேறு எவ்விதத் தொண்டிலும் ஈடுபட்டதில்லை.... போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார்...அப்படிப்பட்ட ஒருவர், உண்மையான வீரமும் தீரமும் உள்ளவர், இச்சமயத்தில் முடிவெய்திவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காணமுடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்" என்று குறிப்பிட்டார். (தொகுதி 6, கிளர்ச்சிகளும் செய்திகளும் 1, ப. 3121).[8]

புகழ்[தொகு]

"அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன்" என்ற "கலைஞர்" மு. கருணாநிதி. தன் மகனுக்கு மு. க. அழகிரி என்று பெயர் சூட்டினார்.

ம. கோ. இராமச்சந்திரன் முதல்வரான போது தன் சொந்தச் செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையைப் பட்டுக்கோட்டையில் நிறுவினார். எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் தொடங்கினார். அதன் பிறகு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.[9]

ஆதாரம்[தொகு]

  1. "மரணம் ஒரு கலை 22: பகுத்தறிவு இயக்கப் பாயும் சிறுத்தை" (in ta). https://www.hindutamil.in/news/literature/139766-22.html. 
  2. மரு.க.சோமாஸ்கந்தன். "சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி!" (in ta-in). https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-march-19/36815-2019-03-18-06-30-32. 
  3. "Pattukkottai Alagiri | பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி" (in en-US). 2022-10-09. http://www.pattukkottaiinfo.com/pattukkottai-alagiri/. 
  4. க.திருநாவுக்கரசு. "இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி" (in ta-in). https://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-may-19/37400-2019-06-07-11-10-27. 
  5. திராவிடநாடு (இதழ்) நாள்:17-6-1956, பக்கம் 4
  6. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி! சிறப்புரை பெருவை வெ. சித்தார்த்தன் 2/523/24/1/22, retrieved 2023-01-17
  7. "முரண்சுவை -30 : அஞ்சா நெஞ்​சன்!" (in ta). https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2010/aug/15/முரண்சுவை--30--அஞ்சா-நெஞ்​சன்-226998.html. 
  8. "சாதிக்கு எரியூட்டுவோம்". https://www.tnpscthervupettagam.com/ta/articles-detail/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D. 
  9. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Manimandapams-a-tribute-to-leaders-Minister/article15540801.ece

வெளி இணைப்புகள்[தொகு]