பகதூர், நடிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகதூர்
பிறப்புபதியத் கொச்சுமொய்தீன் குஞ்ஞாலு
1930
கொடுங்கல்லூர், கொச்சி இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்கால திருச்சூர், கேரளம், இந்தியா)
இறப்பு22 மே 2000(2000-05-22) (அகவை 69–70)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
செயற்பாட்டுக்
காலம்
1954 – 2000
பெற்றோர்
  • பதியத் பிளாங்காச்சலில் கொச்சுமொய்தீன்
  • கதீஜா
வாழ்க்கைத்
துணை
ஜமீளா
பிள்ளைகள்3

பகதூர் என்னும் மேடைப் பெயரில் அறியப்படும் பாடியத் கொச்சுமொய்தீன் குஞ்ஞாலு (1930 – 22 மே 2000) என்பவர் இந்திய மலையாள திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் அடூர் பாசியுடன் சேர்ந்து, மலையாளத் திரைப்படத்துறையில் நகைச்சுவை மற்றும் வேடிக்கைக் காட்சிகளை கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றினார். பகதூர் சில தீவிரமான பாத்திரங்களிலும் தொழில்முறை நாடகங்களிலும் தோன்றினார். இவரது கடைசி படம் ஜோக்கர், இது இவரது மரணத்திற்குப் பிறகு வெளியானது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பகதூர் கொச்சி இராச்சியத்தில் (இன்றைய இந்தியாவின், கேரளம்) திருச்சூருக்கு அருகில் உள்ள கொடுங்கல்லூரில் 1930 இல் பதியத் பிளாங்காச்சலில் கொச்சுமொய்தீன் மற்றும் கதீஜா இணையரின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் பி.கே. குஞ்ஞாலு ஆகும். இவருடன் பிறந்த எட்டு பேரில் ஏழு பேர் சகோதரிகளாவர். இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக ஏழ்மையானது. மேலும் அந்த காலகட்டத்தில் கேரள சமூக அமைப்பில் வரதட்சணை என்பது வீரியமானதாக இருந்ததால் வீட்டில் இருந்த ஏழு இளம் பெண்களால் குடும்ப சுமை அதிகரித்தது. சிறுவயதிலிருந்தே நாடகங்களில் இவருக்கு ஈடுபாடு இருந்தது. 10ஆம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இடைநிலைப் படிப்பிற்காக கோழிக்கோடு ஃபாரூக் கல்லூரியில் சேர்ந்தார். பணப்பிரச்சனையால் படிப்பை முடிக்க முடியாமல், பிழைப்புக்காக வேலைக்குச் செல்லத் தொடங்கினார். தனியார் பேருந்தில் பேருந்து நடத்துனராக முதலில் இவருக்கு வேலை கிடைத்தது. நடிகராக வேண்டும் என்று ஆசையால், உறவினர் மூலம் திக்குறிசி சுகுமாரன் நாயரை சந்தித்தார். திக்குறிசி இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அளித்து பெயரை பகதூர் என்று மாற்றினார்.

இவர் ஜமீலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு சித்திக், முகமது, ருக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தொழில்[தொகு]

பகதூர் அவகாசி (1954) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். [1] அப்போது ஆகாசவாணி மற்றும் நாடகங்களிலும் நடித்து நல்ல நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். நீலா புரொடக்‌சனின் படாத பைங்கிளி படத்தில் சக்கரவாக்கன் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பகதூர் கவனிக்கதக்கவராக ஆனார். மிகப்பெரிய வெற்றிய ஈட்டிய இப்படத்தின் வழியாக திரையுலகில் நன்கு காலூன்றினார் அடூர் பாசியுடன் இணைந்து வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார். மேலும் இருவரும் லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பிடப்படுகிறார்கள். பகதூர் நீலிசாலி மற்றும் முச்சீட்டு கலிக்கரண்டே மகள் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். பகதூர் நாடகங்களிலும் நடித்து வந்தார். மாணிக்யக்கொட்டாரம் மற்றும் பல்லாத பஹயன் போன்ற பெரும் வெற்றிபெற்ற நாடகங்களை உருவாக்கிய நாடக மன்றத்தில் பங்குதாரராக இருந்தார். இந்த நாடகங்கள் பின்னாளில் இவரால் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவர் கமல்ஹாசன் நடித்த தமிழ் திரைப்படமான சத்யாவில் நடித்தார். இதுவே இவர் நடித்த மலையாளம் அல்லாத ஒரே திரைப்படம் ஆகும். அப்படத்தில் கமல்ஹாசன் ஏற்ற கதாபாத்திரத்தின் தந்தையாக துணை வேடத்தில் நடித்திருந்தார். பகதூர் திருவனந்தபுரத்தில் கேசி லேப் என்ற பெயரில் கருப்பு வெள்ளை படங்களின் படச்சுருளுக்கான நுட்ப ஸ்டுடியோவைத் தொடங்கினார். ஆனால் திரைப்படங்கள் வண்ணத்திற்கு மாறுதல் என்பது விரைவு பெற்ற காலமாதலால் ஸ்டுடியோ நிறுவனம் துவக்கபட்டது தவறான நேரமாக இருந்தது. இதனால் பகதூர் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டார். இறுதியாக ஸ்டுடியோ பகதூருக்கு கடன்கொடுத்தவர்களின் கைகளுக்குச் சென்றது. படுதோல்விகளை சந்திப்பதற்காகவே தொழில் தொடங்குவது போல பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார். இவர் தயாரித்த சில படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்தன. தொழில்துறையில் இவர் வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும், இவர் தனது குடும்பத்தின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடிப்புத் துறையே உதவியது. பகதூர் கடைசியாக லோகிதாசின் ஜோக்கர் படத்தில் நடித்தார். அப்படத்தில் இவர் ஒரு வட்டகை முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த கோமாளியாக நடித்தார். படத்தில், வட்டகை குகையில் உள்ள சிங்கத்தின் கூண்டிற்குள் தானே ஏற்றிச் சென்று தற்கொலை செய்து கொள்வார்.

விருதுகள்[தொகு]

கேரள அரசு திரைப்பட விருதுகள் :

  • இரண்டாவது சிறந்த நடிகர் – 1973 – மாதவிக்குட்டி
  • இரண்டாவது சிறந்த நடிகர் – 1976 – ஆலிங்கனம், துலாவர்ஷம்
  • சிறந்த நகைச்சுவை கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருது – 1972 – பல்வேறு படங்கள்

இறப்பு[தொகு]

பகதூர் தன் இறுதி காலத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத கொழுப்பு போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளோடு போராடினார். உடல்நலக்குறைவு இவரை திரையுலகில் இருந்து விலக வைத்தது. ஆனால், ஜோக்கர் படத்தின் மூலம் மீண்டும் திரும்பிய இவர், விரைவில் உலகை விட்டு வெளியேறினார். 22 மே 2000 அன்று காலை 10 மணியளவில் பகதூர் சென்னையில் உள்ள தனது வீட்டில் கடுமையான நெஞ்சு வலியை உணர்ந்தார், அதனால் அருகிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாரடைப்பால் மூளையில் ஏற்பட்ட குருதி கசிவு காரணமாக இவர் மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இறந்தார்.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bahadoor".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்,_நடிகர்&oldid=3837636" இலிருந்து மீள்விக்கப்பட்டது