ந. ச. பொன்னம்பல பிள்ளை
வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை | |
---|---|
பிறப்பு | 1836 நல்லூர், யாழ்ப்பாணம் |
இறப்பு | 1902 (அகவை 65–66) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | உரையாசிரியர், தமிழறிஞர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | நல்லூர் சரவணமுத்துப்பிள்ளை |
உறவினர்கள் | ஆறுமுக நாவலர் |
வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை எனப் பரவலாக அறியப்படும் ந. ச. பொன்னம்பலப்பிள்ளை (1836 - 1902) இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். இவர் நல்லூர் ஆறுமுக நாவலரின் சகோதரி மகனும் அவரது மாணாக்கருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஏவிளம்பி ஆண்டு சித்திரை 24 ஆம் நாள் பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ் பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர், உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை மற்றும் வித்துவசிரோமணி சி. கணேசையர் ஆகியோர் இவரின் மாணாக்கராவார்.
பொன்னம்பலபிள்ளை சிறந்த தமிழ் அறிவு கொண்டவராக விளங்கினார். தெருக்கள், திண்ணைகள், குளக்கட்டுகள், மரநிழல்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாடம் நடத்துவார். பொன்னம்பலபிள்ளை உரை சொல்வதில் வல்லவர். யாழ் வண்ணை வைத்தீசுவரன் கோவில் வித்தியா மண்டபத்தில் இடம்பெறும் புராண படனங்களில் ஒருவர் பாடல்களைப் பாடப் பொன்னம்பலபிள்ளை உரை சொல்வது வழக்கம். பாடுபவர் எந்த இராகத்தில் பாடுகிறாரோ அதே இராகத்தில் பொன்னம்பலபிள்ளை உரை சொல்லுவாராம். அப்போது அவரது மாணாக்கர்கள் கையில் ஏடும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு குறிப்பெடுப்பார்கள்.
பொன்னம்பலபிள்ளை கம்பராமாயணம், சீவக சிந்தாமணி இரண்டிலும் மிக்க புலமை உடையவர். சிந்தாமணி அவருக்கு மனப்பாடம். சீவக சிந்தாமணியை முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் அதன் ஒரு பிரதியைப் பொன்னம்பலபிள்ளைக்கு அனுப்பி அதனை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை பொன்னம்பலபிள்ளை அவர்களை தேன்குடம் என வர்ணிப்பார். எவ்வாறு தேன்குடத்தைச் சுற்றி எறும்புகள் மொய்த்திருக்குமோ அதுபோல பொன்னம்பலபிள்ளையைச் சுற்றி மாணாக்கர் கூட்டம் சூழ்ந்திருக்கும் என்பதால் அந்த உவமை.[1]
ஒரு சமயம் வண்ணை வைத்தீசுவரன் கோவிலில் கம்பராமாயண விரிவுரை ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனினும் சிவன் கோவிலில் இராமாயண காதை சொல்வது அடாது என்ற கருத்தும் நிலவியது. ஆனாலும் பொன்னம்பலபிள்ளைக்கு எதிராகக் கருத்துச் சொல்ல யாரும் முன்வரவில்லை. ஆனால் உரை வாலி வதம் நடந்த கட்டத்துக்கு வந்தபோது பொன்னம்பலபிள்ளை 1902 மார்கழி மாதம் காலமானார்.
விருது
[தொகு]நாட்டுக்குப் பெருமை சேர்த்த அறுவருக்கு கொழும்பு கம்பன் கழகம் ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த விருதுகளில் ஒன்று வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை விருது ஆகும்.[2]
எழுதிய நூல்கள்
[தொகு]- இரகுவம்மிசம்[3]
- நீதிவெண்பா (1927)
- பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணச் சுருக்கம்
- சூடாமணி நிகண்டு பதினொராவது மூலமுமுரையும், பன்னிரண்டாவது மூலமும்
- சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்
- சைவசமய நெறி
- ஸ்ரீராமநாத மான்மியம்
- திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்கள் அடங்கிய பதினொராந்திருமுறை
- திருத்தொண்டர் புராணச் சுருக்கம், முதற் பாகம்
- பாலபாடம் முதல் புத்தகம்
- அகத்தியமகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு
- பாலபாடம் இரண்டாம் புத்தகம்
- பாலபாடம் நான்காம் புத்தகம்
- சுப்பிரமணியக்கடவுள் வரப்பிரசாதியாகிய காஞ்சீபுரம் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் அசுர காண்டம்
- மார்க்கண்டேயப்படல மூலமும் உரையும்
- சிவாலய தரிசன விதி (1914)[4]
- பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு (1914)[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ ஈழநாட்டுப் புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும் - பக்-47 (பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்)
- ↑ தினகரன் (கொழும்பு)
- ↑ Koha[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Google Books
- ↑ Google Books
வெளி இணைப்புகள்
[தொகு]- வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை பரணிடப்பட்டது 2012-09-17 at the வந்தவழி இயந்திரம்