இராகம்
இராகம் (ⓘ) (சமஸ்கிருதம்: रागः, இந்தி: राग) என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது.
இராகத்தின் அடிப்படை
[தொகு]"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." [1]
இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த ஸ்வரங்களை (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது.
ஸ்வரங்கள்
[தொகு]ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர (वक्र) ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.
ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat). நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும்.
இராகத்திற்கு தகுந்த நேரம்
[தொகு]காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது.
கர்நாடக-இந்துஸ்தானி ஒற்றுமை வேறுபாடு
[தொகு]இந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன.
- சில ராகங்கள் இரு இசை முறைகளுக்கும் உரியன. தென் இந்திய இசையிலும் வட இந்திய இசையிலும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டிருந்தாலும் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் "கல்யாணி" என்ற பெயர் கொண்ட இராகமும் இந்துஸ்தானி இசையில் "யமன்" என்ற பெயரைக் கொண்ட ராகமும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டுள்ளன.
- சில ராகங்கள் இரு இசை வழக்குகளில் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு ஸ்வர வரிசைகளைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் பைரவி ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவியை ஒப்பிடும் போது சில ஸ்வரங்கள் வேறுபாடு தவிர இராக பாவம் வேறு. ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவி கர்னாடக இசையின் தோடிக்கு சமம். கர்னாடக இசையின் பைரவி இந்துஸ்தானி இசையில் வரும் அஸாவாரி தாட்டோடு இணையும்.
இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன.
இராகம் அறிவியல் அல்ல
[தொகு]ராகங்கள் பழங்காலத்தில் எழுதப்படாமல், குரு - சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டதால் சில ராகங்கள் வெவ்வேறு இடங்களில் வேறு விதமாக தோன்றலாம்.
இந்திய பாரம்பரிய இசை எப்போதும் இராக அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இசை எல்லாம் பாரம்பரிய இசை என்பது உண்மை அல்ல. சினிமா பாட்டுகள் பலவும் ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.
ஆரோகனம் அவரோகனம் தவிர வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு "வர்ணம்" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம்.
உசாத்துணை
[தொகு]- ↑ லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). 1988. இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சென்னை: மணிமேகலை.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- The Raga Guide பரணிடப்பட்டது 2004-06-29 at the வந்தவழி இயந்திரம் (sections)
- இராகம் தானம் பல்லவி தகவல்