நாய்த்துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை (Ocimum americanum, known as American basil or "hoary basil" [1]) என்பது வெள்ளை அல்லது லாவெண்டர் பூக்களைக் கொண்ட வருடாந்திர மூலிகை செடியாகும். இது மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.[2] இது பெரிதும் துளசியை ஒத்து இருக்கும். இது ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், சீனா மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. குயின்ஸ்லாந்து, கிறிஸ்மஸ் தீவு மற்றும் வெப்பமண்டல அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த இனங்கள் இயற்கையாக காணப்படுகின்றன.[3][4][5][6][7][8][9][10][11]

விளக்கம்[தொகு]

இது வெற்றிடங்களில் 2-4 அடி உயரம் வரையில் தழைத்துக் கிளைத்து வளரும் செடி ஆகும். இது தோற்றத்தில் துளசிச் செடியைப் பெரிதும் ஒத்து இருக்கும். இதன் இலைகள் துளசி இலையைக் காட்டிலும் சற்று அகன்று நீண்டிருக்கும். (1 5"×.5") இலைக்காம்பு நீண்டது. இலையில் துண்மயிர் இருக்கும். இதன் விதைகளானது 'நட்லெட்' என்ற உலர் கனிகளாகும். இவை சிறியவையாக இருக்கும். இவற்றில் மிக நுண்குழிகள் காணப்படும். இவை வழவழப்பானவையாக இருக்கும். இத்தாவரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை 2n-24 என்று மார்ட்டன் ஜே.கே (1952) என்பவரும், 2n=64 என்று டோயோச் சுக்கி (1936, 1937) என்பவரும் கண்டுள்ளனர்.

மலர்[தொகு]

இது நறுமணமுள்ளது. கிளை நுனியில் நுனிவளர் பூந்துனராக வளரும். துணர்க்காம்பில் இதன் மலர்கள் அடுக்கடுக்காக உண்டாகும். இதன் மலர்கள் மங்கிய வெண்ணிறம் கொண்டவை. இவை துளசி மலரை ஒத்தவை. மலரின் புல்லி வட்டமானது நான்கு அகவிதழ்களும் இணைந்து பசிய குவளை வடிவாக இருக்கும். இதற்குள் நுண்மயிர் அடர்ந்திருக்கும். மலரின் அல்லி வட்டமானது அகவிதழ்கள் இணைந்து அடியில் குழல் போன்றும் மடல்கள் மேலே இரு உதடுகளைப் போன்று வாயவிழ்ந்தும் இருக்கும். மகரந்த வட்டத்தில் இரு மகரந்தத் தாள்கள் உயரமாகவும் மற்ற இரு தாள்கள் குட்டையாகவும் இருக்கும்.

பயன்கள்[தொகு]

இச்செடியின் இலைகளில் நறுமணமிருத்தாக இருப்பதால் கண்ணி தொடுக்குபவர்கள் இதனை இடையிட்டுத் தொடுப்பர். இச்செடி மருந்துக்கு உதவும் என்பர்.

இலக்கியங்களில்[தொகு]

இதனை சங்க நூல்கள் குறிப்பிடும் குல்லை என கூறுபவர் உள்ளனர். குல்லை என்பதற்கு நச்சினார்க்கினியர் கஞ்சங்குல்லை என்று உரைகண்டார்.

குல்லை பிடவம் சிறுமா ரோடம் -குறிஞ்சிப் பாட்டு. 78

என்று கூறிக் குல்லைக்கு இடங்கொடுத்தார் கபிலர். இதற்கு நச்சினார்க்கினியர் கஞ்சங்குல்லைப்பூ என்றே உரைகூறினார்.

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கலித்தொகை. 103:3

குல்லை குளவி கூதளம் குவளை -நற்றினை. 376:5

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை, 29

என்றெல்லாம் சங்க நூல்கள் குல்லையைக் கூறுகின்றன. இவற்றைக்கொண்டு இதனை இக்காலத்துச் செடிகளில் எதுவெனத் துணிந்து கூற இயலவில்லை.

நற்றிணை உரைகாரர். இதனை 'மலைப்பச்சை' என்கிறார். பிங்கலம் இதனைப் 'புனத்துளசி' என்று கூறுகிறது. சேந்தன்திவாகரம்.[12] இதனைக் கஞ்சாச் செடி என்று கூறுகிறது. மருத்துவ நூலார் இதனை நாய்த்துளசி என்பர். குல்லை இலையினையும் பூவையும் வாலிணர் இடையிட்டுத் தொடுத்த தழையுடையாக இது பயன்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

முடித்த குல்லை இலையுடை நறும்பூ -திருமுருகாற்றுப்படை. 201

'வடுகர் குல்லையைக் கண்ணியாகக் கொண்டனர்' என்று கூறுவர் மாமூலனார்.

குல்லைக்கண்ணி வடுகர் முனையது. -குறுந்தொகை 11 : 5

இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு” என்றார் நத்தத்தனார்.

குல்லை மிகுந்த வெப்பத்திற் காற்றாது என்பதைக் குல்லை கரியவும் (பொருந. 234) என்பதால் அறியலாம்.

ஆகவே, குல்லை என்பது துளசி இனத்தைச் சேர்ந்தது என்றும், இது நாய்த்துளசி, புனத்துளசி எனப்பட்டது என்றும் இதன் இலைகளில் நறுமணமிருத்தலின் இக்குல்லை கண்ணியாகக் கட்டிச் சூடப்பட்டது என்றும் அறிய முடிகிறது. இதனை ஆங்கிலத்தில் வொயில்டு பேசில் (Wild Basil) என்று கூறுவர்.[13]

குறிப்புகள்[தொகு]

 1. USDA GRIN Taxonomy, 11 June 2016 அன்று பார்க்கப்பட்டது
 2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2015-03-19 அன்று பரணிடப்பட்டது.
 3. http://apps.kew.org/wcsp/namedetail.do?name_id=136802
 4. Flora of China Vol. 17 Page 296, 灰罗勒 hui luo le, Ocimum americanum Linnaeus, Cent. Pl. 1, 15. 1755.
 5. Berhaut, J. (1975). Flore illustrée du Sénégal 4: 1-625. Gouvernement du Sénégal, Ministère du développement rural direction des eaux et forêta, Dakar.
 6. Boulvert, Y. (1977). Catalogue de la Flore de Centrafrique 2(1): 1-85. ORSTOM, Bangui.
 7. George, A.S., Orchard, A.E. & Hewson, H.J. (eds.) (1993). Oceanic islands 2. Flora of Australia 50: 1-606. Australian Government Publishing Service, Canberra.
 8. Hokche, O., Berry, P.E. & Huber, O. (eds.) (2008). Nuevo Catálogo de la Flora Vascular de Venezuela: 1-859. Fundación Instituto Botánico de Venezuela.
 9. Figueiredo, E. & Smith, G.F. (2008). Plants of Angola. Strelitzia 22: 1-279. National Botanical Institute, Pretoria.
 10. Khanam, M. & Hassan, M.A. (2008). Lamiaceae. Flora of Bangladesh 58: 1-161. Bangladesh National Herbarium, Dhaka.
 11. Paton, A.J., Bramley, G., Ryding, O., Polhill, R., Harvey, Y., Iwarsson, M., Willis, F., Phillipson, P., Balkwill, K., Lukhoba, C., Otiend, D & Harley (2009). Lamiaceae (Labiatae). Flora of Tropical East Africa: 1-430.
 12. கஞ்சங் குல்லை. கஞ்சாவாகும் -திவாகரம்.
 13. டாக்டர் கு. சீநிவாசன், 588-590
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்த்துளசி&oldid=2866535" இருந்து மீள்விக்கப்பட்டது