தேவர் குருபூசை
தேவர் குருபூஜை விழா வருடம்தோறும் தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் ஒரு ஆன்மிகத் திருவிழாவாகும். மறைந்த ஆன்மிகவாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தெய்வத் திருமகனார் என்றழைக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். [1][2]
தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி: தேவருக்கு பூஜை வழிபாடு பக்தி பரவசம்".தினமணி (29 அக்டோபர் 2013)
- ↑ "பசும்பொன்னில் தேவர் குருபூசை, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்". தினமணி (30 அக்டோபர் 2013)
- ↑ "செயலலிதா அளித்த தங்க கவசம் வங்கி லாக்கரில் வைக்க முடிவு". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-05.தினகரன் (11 பெப்ரவரி 2014)