தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவரின் வரைபடம், பிற்கால டையடிசிஸ்மா சுவர்களுடன்.

தெமிஸ்ட்டோக்லீன் சுவர் (Themistoclean Wall, கிரேக்கம்: Θεμιστόκλειον τείχος‎ ), [1] என்பது ஏதெனியன் அரசியல்வாதியான தெமிஸ்டோக்கிளீசின் பெயரால் அழைக்கப்படும் மதில் சுவராகும். இது கிரேக்கத்தின் ஏதென்சில், பாரசீகப் போர்களின் விளைவாகவும், அவர்களின் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் எண்ணத்துடனும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

கிரேக்கத்தின், ஏதென்சில் உள்ள தெமிஸ்ட்டோக்ளீன் சுவரின் இடிபாடுகள், கிமு 5 ஆம் நூற்றாண்டு ஏதெனியன் அரசியல்வாதி மற்றும் தளபதி தெமிஸ்ட்டோக்ளீஸ் பெயரால் அழைக்கப்படுகிறது

கிரேக்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பாரசீகப் போர்களானது பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசால் மேற்கொள்ளபட்டது. மன்னர் முதலாம் டேரியசு இந்தப் படையெடுப்பு முயற்சியில் தோல்வியுற்றார். மேலும் அவரது மகனான முதலாம் செர்கசு, கிமு 480 முதல் 479 வரை நீடித்த இரண்டாம் பாரசீகப் போர்களை வழிநடத்தினார். செர்க்செசு தனது தந்தையை விட அதிக வெற்றிகளை ஈட்டினார். ஏதென்சை எரித்து அழித்தார். பாரசீகப் போர்களைத் தொடர்ந்து கிரேக்க நகர அரசுகள் சீர்குலைந்தன. கிரேக்க நகர அரசுகளின் பல கட்டிடங்கள், சிலைகள், கோட்டைகள் போன்றவை அழிக்கப்பட்டன.

பாரசீக படையெடுப்பால் கவலையடைந்த ஏதெனிய மக்கள், தெமிஸ்ட்டோக்ளீசின் மதில் சுவர்களை மறுகட்டுமானம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தனர். உயர்ந்துவரும் ஏதென்சின் சக்தியால் பீதியடைந்த, எசுபார்த்தன்களும், அவர்களது பெலோபொன்னேசிய கூட்டாளிகளும் இந்த மதில் சுவரைக் கட்டும் திட்டத்தை எதிர்த்தனர். ஆக்கிரமிக்கவரும் படைகளுக்கு இந்தச் சுவர் ஒரு தடைக்கலாக இருக்கும் என்றும், கொரிந்தின் பூசந்தியின் பாதுகாப்புக்கு தேவையானதாக இருக்கும் என்றும் ஏதெனியர்கள் வாதிட்டனர். எனவே பெலோபொன்னேசியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மதில் சுவர் கட்டுமானத்தில் ஏதெனியர்கள் தீவிரமாக இருந்தனர். [2] இந்த மதில் சுவர் கட்டுமான நிகழ்வுகளின் போது எசுபார்த்தாவினால் ஏற்பட்ட தடைகளை தெமிஸ்ட்டோகிளீசு என்வாறு சூழ்ச்சிகளைச் செய்து கையாண்டு முடித்தார் என்பதை துசிடிடீஸ், தனது பதிவுகளில், விவரித்துள்ளார். சுவர் கட்டுமானத்தின் போது அவர் எசுபார்த்தன்களின் கவனத்தைத் திசைதிருப்பி மதில் சுவர்கள் கட்டப்பட்டு முடிக்கும் வரை அவர்களின் நடவடிக்கையை தாமதப்படுத்தினார். [3]

ஏதென்சில் உள்ள அக்ரிப்பாவின் பழைய கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு

தெமிஸ்ட்டோக்லீன் சுவர் கிமு 479 இல் முடிக்கப்பட்டது [4] இது கோவில்கள், சிலைகள் போன்ற பிற இடிபாடுகளை அழித்தது அவற்றில் கிடைத்த பழைய பொருட்களால் கட்டப்பட்டது. [4] ஏனெனில் இப்பணியை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு விரைவாக கட்டி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஏதெனியர்கள் இருந்தனர். இதன் மொத்த நீளம் 8500 மீ, உயரம் 8-10 மீ, அகலம் 3 மீ மேலும் குறைந்தது 13 வாயில்களைக் கொண்டிருந்தது.

கிமு 404 இல் பெலோபொன்னேசியப் போரில் தோல்வியடைந்த பிறகு, ஏதெனியர்கள் தங்கள் நகரைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் அனைத்தையும் அழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். இருப்பினும், ஏதென்சில் சனநாயகம் மீண்டும் நிறுவப்பட்டபிறகு, கிமு 394 இல் ஏதெனிய தளபதி கோனான் மதில் சுவர்களை சரிப்படுத்தினார். கிமு 338 இல் மாசிடோனிய படையெடுப்பை எதிர்கொண்டபோது, ஒரு சிறிய சுவரானது கூடுதல் தற்காப்புக்காக பிரதானப்பகுதியின் முன்னால் கட்டப்பட்டது.

கிமு 86 இல் உரோமானிய தளபதி சுல்லா நகரத்தை முற்றுகையிட்டு தாக்கியபோது சுவர்கள் மோசமாக சேதமடைந்தன. அவை இறுதியில் உரோமானிய மன்னர் வலேரியனால் (கி.பி. 253-260) சில பகுதிகளுடன் மீண்டும் கட்டப்பட்டன.

காணக்கூடிய எச்சங்கள்[தொகு]

கெராமிகோசில் உள்ள தெமிஸ்டோக்லீன் சுவர்

காணக்கூடிய முக்கிய எச்சங்கள்: [5]

  • கெராமிகோசில், மிக உயர்ந்த மீதமுள்ள பகுதி
  • பினெக்சில் காணப்படும் மதிலின் அடித்தளங்கள்
  • கோட்சியா சதுக்கத்திற்கு அருகில், அயோலோ தெருவில் உள்ள நேசனல் வங்கியின் அடித்தளத்தில் ஆச்சார்னியன் வாயிலுக்கு அருகில்
  • 29 எரிசிக்தானில்; பீரைக் கேட்டிற்கு வடக்கே ஒரு வீட்டின் அடித்தளத்தில் உள்ள ஒரு பகுதி

வாயில்கள்[தொகு]

தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவரில் பல வாயில்கள் இருந்தன, அவற்றில் பல முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை:

  • டிபிலான் வாயில் (Δίπυλον, "டபுள் கேட்"), முதலில் திரியாசியன் வாயில் (Θριάσιαι Πύλαι)
  • புனித வாயில் (Ἱερὰ Πύλη)
  • பீரைக் வாயில் (Πειραϊκαὶ Πύλαι, "பிரேஸ் " வாயில்)
  • டெமியன் வாயில் (Δήμιαι Πύλαι, "தண்டனை நிறைவேற்றுபவரின் வாயில்")
  • எரியாய் வாயில் (Ήριαι Πύλαι, "கல்லறைகளின் வாயில்")
  • ஆச்சார்னியன் வாயில் (Ἀχαρνικαὶ Πύλαι, "கேட் ஆஃப் ஆச்சர்னே ")
  • வடகிழக்கு வாயில் (நவீன பெயர், பண்டைய பெயர் தெரியவில்லை)
  • டியோமியன் வாயில் (Διοχάρους Πύλαι), அகழப்படவில்லை
  • இப்பேட்ஸ் வாயில் (Ἱππάδες Πύλαι, "கேட் ஆஃப் தி ரைடர்ஸ்") அல்லது ஏஜியஸ் வாயில் ( Αἰγέως Πύλαι)
  • டியோமியன் வாயில் (Διόμιαι Πύλαι, "கேட் ஆஃப் டியோமியா "), அகழப்படவில்லை
  • இடோனியன் வாயில் (Ἰτώνιαι Πύλαι)
  • ஹாலேட் வாயில் (Ἅλαδε Πύλαι) அல்லது கிழக்கு ஃபலேரிக் வாயில் (Φαληρική Πύλη), அகழப்படவில்லை
  • தெற்கு வாயில் (நவீன பெயர், பண்டைய பெயர் தெரியவில்லை) அல்லது மேற்கு ஃபாலெரிக் வாயில் (Φαληρική Πύλη)
  • வாயில்களுக்கு மேலே உள்ள டிபிலான் (Δίπυλον το ὑπέρ τῶν Πυλῶν)
  • மெலிடைட்ஸ் வாயில் (Μελίτιδαι Πύλαι, "கேட் ஆஃப் மெலைட் ")

குறிப்புகள்[தொகு]

  1. THE ANCIENT CIRCUIT WALL OF ATHENS: Its Changing Course and the Phases of Construction Anna Maria Theocharaki Hesperia: The Journal of the American School of Classical Studies at Athens Vol. 80, No. 1 (January–March 2011), pp. 71-156 https://www.jstor.org/stable/10.2972/hesp.80.1.0071
  2. Fine, The Ancient Greeks, 330
  3. Thucydides, The Peloponnesian War 1.90–91
  4. 4.0 4.1 Neer, Richard T. Greek Art and Archaeology: a New History, c. 2500-c. 150 BCE. Thames & Hudson, 2012.
  5. Strolling Through Athens: Fourteen Unforgettable Walks Through Europe's Oldest City, John Freely.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1850435952 9781850435952 p 165-