தூங்கானை மாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைலோக்கியநாதர் கோயிலின் தூங்கானை மாடம்

தூங்கானை மாடம், யானைக்கோயில், ஆனை மாடம், ஆலக்கோவில் என்பது தமிழ்நாட்டு கோயில்களில் மாடக் கோயில்களில் ஒரு வகை ஆகும். இந்த மாடக் கோயில் விமானமானது படுத்திருக்கும் யானையின் பின்புறத்தைப் போல இருக்கும் என்பதால் இப்பெயர் பெற்றது. [1] இவ்வகை கோயில்களில் சில கருவறையிலிருந்தே இந்த வடிவமைப்பில் இருக்கும்.

பெயர்கள்[தொகு]

தூங்கானை மாடக் கோயில் அமைப்பைச் சேதியகிருஹம் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது சேதியகர என்று கூறுப்படுகிறது. சிற்பசாத்திரங்கள் இந்தக் கட்டட அமைப்பை கஜபிருஷ்டம், ஹஸ்தி பிருஷ்டம், குஞ்சர பிருஷ்டம் என்றும் கூறுகின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பதாகும். குஞ்சரக்கோவில் என்பதை மணிமேகலையில் குச்சரக்குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம். காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக் கோவிலாகிய சம்பாபதிக் கோவில் இந்த அமைப்பாக இருந்தது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர் பெற்றிருந்தது. தமிழ்நாட்டுக் கோயில் கட்டடங்களின் பெயர்களைக் கூறுகிற திருநாவுக்கரசு நாயனார் தூங்கானை மாடக் கோவிலை ஆலக்கோவில் என்று கூறுகிறார் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.[2]

வரலாறு[தொகு]

தற்போது காணப்படும் தூங்கானை மாடக் கோயில்கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்திற்கு பிற்பட்டவை. என்றாலும் இவ்வகை கோயில்கள் மிகப் பழமையானவை என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்க காலத்திலேயே தூங்கானை மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தன. அவை பௌத்த சமயத்தினரால் கட்டப்பட்டவை என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த சோழன் கோச்செங்கண்ணன் சிவபெருமானுக்கு 70 மாடக் கோயில்கள் அமைத்ததாக திருமங்கையாழ்வார் தன் திருநறையூர் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.[3] கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருத்தூங்கானை மாடப் பதிகம் என்ற பதிகத்தில் தூங்கானை மாடக் கோயில் குறித்து அப்பர் தெரிவிக்கிறார்.[1] பல்லவர் , சோழர், பாண்டியர் ஆகியோர் இக்கோவில்களை அமைத்தார்கள். சோழ பாண்டியருக்குப் பிறகு விஜயநகர அரசர் காலத்திலும் சில யானைக்கோவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

ஆந்திராவின் நாகார்ஜுனகொண்டாவில் உள்ளிட்ட பௌத்த யானைக் கோயிலகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. அதுபோன்று இந்தியாவின் பல இடங்களில் யானைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்ட பௌத்த கோயில்கள் காணப்படுகின்றன.[2]

தூங்கானை மாடக் கோயில்கள் சில[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 என். வெங்கடேஸ்வரன், கட்டுரை, ஒடுங்கும் பிணிப்பிறவி -பாடல் 1 தினமணி 12, ஆகத்து, 2018
  2. 2.0 2.1 ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  3. தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தூங்கானை மாடம் (கட்டுரை), பக்கம் 19 தமிழ்ப் பொழில் இதழ், 1958, ஏப்ரல், மே
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்கானை_மாடம்&oldid=3654878" இலிருந்து மீள்விக்கப்பட்டது