திருத்தணி வீரட்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரட்டேசுவரர் கோயில் (Tiruttani Veeratteswarar Temple) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலானது பல்லவர்களில் கடைசி பேரரசனான அபராசித வர்ம பல்லவன் காலத்தில் கற்றளியாக மாற்றிக் கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இக்கோயிலை நம்பி அப்பி என்பவர் தன் செலவில் கற்றளியாக கட்டினார். அதைக்கண்டு மகிழ்ந்த மன்னன் அபராசித வர்ம பல்லவன் ஒரு வெண்பா பாடினான். அப்பாடல் பின்வருமாறு;

திருந்து திருத்தணியற் செஞ்சடையீ சற்க்குக்

கருங்கல்லாற் கற்றளியா நிற்க விரும்பியே

நற்கலைக ளெல்லா நவின்றசீர் நம்பியப்பி

பொற்பமையச் செய்தான் புரிந்து

இப்பாடல் இக்கோயில் சுவற்றில் கல்வெட்டாக செதுக்கப்பட்டு, அதன் கீழ் இவ்வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளித்து. என்ற குறிப்பு வரையப்பட்டுள்ளது.[2]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் ஒரு தூங்கானை மாடக் கோயிலாகும். பொதுவாக தூங்காணை மாடக் கோவில்கள் கருவறை முதல் விமானம் வரை அரைவட்ட வடிவிலே இருக்கும். ஆனால் இக்கோயிலின் கருவறை செவ்வக வடிவிலும், விமானம் அரைவட்ட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது மாடக் கோயில் என்பதால் கருவறைக்கு மேலே இன்னொரு அரைவட்ட கருவறை அமைக்கப்பட்டு அதன்மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவன், உமை, ஆலமர் செல்வன், திருமால், ஏழுகன்னியர் உள்ளிட்டோருக்கு சிற்பங்கள் உள்ளன

இலக்கியம்[தொகு]

தணிகை புராணம் பாடிய கச்சியப்ப முனிவர் வீரகட்டகாச படலத்தில் இத்தல இறைவன் குறித்து 128 பாடல்களை பாடியுள்ளார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "திருத்தணி சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  2. தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தூங்கானை மாடம் (கட்டுரை), பக்கம் 19 தமிழ்ப் பொழில் இதழ், 1958, ஏப்ரல், மே
  3. "Arulmigu Veerateeswarar Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001511].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.