தாழாக்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
தாழாக்சியம்
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
குறைந்த ஆக்சிசன் நிரம்பல் உள்ள ஒருவரின் கை நீல நிறமாதல்
ஐ.சி.டி.-10
ஐ.சி.டி.-9 799.02
MeSH D000860

தாழாக்சியம் (Hypoxia அல்லது hypoxiation) முழுமையான உடலோ (பொதுப்படை தாழாக்சியம்) அல்லது உடலின் ஒரு பகுதியோ (இழைய தாழாக்சியம்) தகுந்தளவு ஆக்சிசன் பெறாதிருக்கும் நோய் நிலை ஆகும். வழக்கமான உடலியக்கத்திலேயே ஒருவரின் தமனிய ஆக்சிசன் நிரம்பலில் வேறுபாடுகள் இருக்கும்; காட்டாக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஆக்சிசன் கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. குருதியில் எடுத்துச் செல்லப்படும் ஆக்சிசன் அளவு கலங்கள் வேண்டுகின்ற அளவை விட குறைவாக இருப்பின் தாழாக்சிய நோய்நிலை ஏற்படும். முழுமையான அளவில் ஆக்சிசன் வழங்கல் தடைப்படுமாயின் அந்நிலை தாழாக்சியம் அனோக்சியா (anoxia) என அறியப்படுகிறது.

தாழாக்சியம் என்ற நிலை குருதி தாழாக்சியம் என்ற நிலையிலிருந்து வேறானது. குருதி தாழாக்சியம் என்பது தமனியக் குழாயில் ஆக்சிசன் அளவு மிகவும் குறைந்திருப்பது ஆகும். [1] தாழாக்சியம் இருந்து குறைந்த ஆக்சிசன் அடக்கம் இருகின்ற நிலையிலும் (காட்டாக, குருதிச்சோகை) உயர்ந்த ஆக்சிசன் அழுத்தம் (pO2) பராமரிக்கப்படலாம். எனவே தவறான புரிதல்கள் குழப்பத்தை உண்டாக்கலாம்; தாழாக்சியத்திற்கான ஒரு காரணியாக குருதி தாழாக்சியம் உள்ளது.

உடல்நலமுள்ளவர்களுக்கும் உயர்ந்த இடங்களுக்கு ஏறும்போது பொதுப்படை தாழாக்சியம் ஏற்படலாம்; இதனால் உயர ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்படலாம்: உயர்ந்த இட நுரையீரல் நீர்கோவை (HAPE) மற்றும் உயர இட மூளைய நீர்க்கோவை (HACE).[2] மேலும் நலமான மனிதர்களுக்கும் குறைந்த ஆக்சிசன் அடங்கிய வளிக்கலவைகளை சுவாசிக்கையில் தாழாக்சியம் ஏற்படுகிறது. காட்டாக நீரினடியே பாய்கையில், குறிப்பாக ஆக்சிசன் கட்டுப்பாடு கொண்ட மூடிய சுற்று சுவாசிப்பு அமைப்புகளில் இதற்கான வாய்ப்பு கூடுதலாகும்.

பச்சிளம் குழைந்தைகளுக்கு குறைப் பிரசவ சிக்கல்களில் தாழாக்சியமும் ஒன்றாகும். கருப்பத்தின்போது மனிதச் சிசுவின் நுரையீரல்கள் கடைசியில் உருவாகும் உறுப்புக்களில் ஒன்றாக இருப்பது இதன் முதன்மைக் காரணம் ஆகும். இத்தகைய தீவாய்ப்புள்ள குழந்தைகள் ஆக்சிசனேற்றிய குருதியை பரப்பிட குழவி அடைகாப்பியில் தொடர்ந்த காற்றழுத்தத்தில் வைக்கப்படுகின்றனர்.

அறிகுறிகளும் நோய்க்குறிகளும்[தொகு]

பொதுப்படை தாழாக்சியத்தின் நோய்க்குறிகள் அதன் தீவிரத்தன்மையையும் தாக்கலின் விரைவையும் பொறுத்தது. தாழாக்சியம் மெதுவாக தாக்கும், உயரத்தினால் ஏற்படும் நோயில் தலைவலி, களைப்பு, மூச்சிறைப்பு, பொய் உற்சாகம், குமட்டல் போன்ற அறிகுறிகள் உண்டாகின்றன. தீவிரமான தாழாக்சிய நிலையில் அல்லது விரைவாகத் தாக்கிய தாழாக்சிய நிலையில் உணர்வு நிலையில் மாற்றங்கள், வலிப்புத் தாக்கம், ஆழ்மயக்கம், ஆண்குறி/பெண்குறி விறைப்பிலிருந்து மீளாதிருத்தல் மற்றும் இறப்பு நிகழலாம். தீவிர தாழாக்சியம் தோலில் நீல நிறம் தோன்றச் செய்வதால் இந்நிலை நீலம் பூரித்தல் என்றழைக்கப்படுகிறது. இது ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்ட குருதிவளிக்காவியின் நிறம் நல்ல சிவப்பாகவும் ஆக்சிசன் பிணைக்கப்படாத குருதிவளிக்காவி கரும் சிவப்பாகவும் இருப்பதால் தோல் வழியே பார்க்கும்போது கூடுதலான நீல நிறத்தை தெறிக்கும் தன்மையுடையதாகிறது. ஆக்சிசனுக்கு மாற்றாக வேறு மூலக்கூறு இருக்குமானால், காட்டாக கரிம மோனாக்சைடு, தோல் நீல நிறமல்லாது 'செர்ரி சிவப்பாக' இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. West, John B. (1977). Pulmonary Pathophysiology: The Essentials. Williams & Wilkins. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-683-08936-6.
  2. Cymerman, A; Rock, PB. Medical Problems in High Mountain Environments. A Handbook for Medical Officers. USARIEM-TN94-2. US Army Research Inst. of Environmental Medicine Thermal and Mountain Medicine Division Technical Report. http://archive.rubicon-foundation.org/7976. பார்த்த நாள்: 2009-03-05. 

நூற்கோவை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழாக்சியம்&oldid=3215952" இலிருந்து மீள்விக்கப்பட்டது