டி. பி. ராஜலட்சுமி
டி. பி. ராஜலட்சுமி | |
---|---|
![]() தன் இறுதிக் காலத்தில் ராஜலட்சுமி | |
பிறப்பு | சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) | 11 நவம்பர் 1911
இறப்பு | 20 ஆகத்து 1964 | (அகவை 52)
மற்ற பெயர்கள் | சினிமா ராணி TPR |
பணி | நடிகை · திரைப்படத் தயாரிப்பாளர் · பாடகி · திரைக்கதை எழுத்தாளர் · இசை இயக்குனர் · சமூக சீர்திருத்துநர் |
செயற்பாட்டுக் காலம் | 1929–1964 |
அறியப்படுவது | முதல் தமிழ் & தெலுங்கு திரைப்படக் கதாநாயகி; முதல் தென்னிந்திய பெண் இயக்குனர். |
அரசியல் இயக்கம் | திராவிட இயக்கம் |
வாழ்க்கைத் துணை | டி. வி. சுந்தரம் |
பிள்ளைகள் | கமலா மணி |
டி. பி. ராஜலட்சுமி (11 நவம்பர் 1911[1] - 1964[2]) என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். 1943 ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே திரும்பினார். பின்னர் ராஜலட்சுமியின் தந்தையும் இறந்துவிட்டதால் குடும்பம் வறுமையில் வாட்டியது. இதனால் விதவைத் தாயுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.

மேடை நாடகங்களில் நடிப்பு
[தொகு]நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 ஆம் வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் "பவளக்கொடி". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில், மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.
அதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி, ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும், வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். இவர் பாடிய "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...", "இராட்டினமாம் காந்தி கைபாணமாம்..." போன்ற தேசபக்திப் பாடல்கள் மக்களிடையே வெகுவாகப் பிரபலமடைந்தன. தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காகப் பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு, சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.
திரைப்படத்துறையில்
[தொகு]ஊமைப் படங்களில்
[தொகு]1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த, தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான "கீசகவதம்" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல், ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன், ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில், மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் "இராஜேசுவரி" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.
குறும் படத்தில்
[தொகு]தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.

பேசும் படங்களில்
[தொகு]தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் சினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி "காந்தியின் கைராட்டினமே" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.
காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) என்ற படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்கால கட்டத்திலேயே இவருக்கு, 'சினிமா இராணி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.
அக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள்.
இயக்குநராக
[தொகு]கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதிக் கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கி, வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.
எழுதிய புதினங்கள்
[தொகு]- கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
- விமலா
- சுந்தரி
- வாஸந்திகா
- உறையின் வாள்
விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது, 1961
இறுதிக் காலம்
[தொகு]டி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற சொந்த மகளும் மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.[2]
திரைப்படவியல்
[தொகு]மூலம்:[3]
ஆண்டு | பதட்டித் பெயர் | இயக்குநர் | பாத்திரம் | Notes |
---|---|---|---|---|
1929 | கோவலன் | ரகுபதி எஸ். பிரகாசா | நடிகை | |
1930 | உஷா சுந்தரி | இராசா சாண்டோ | நடிகை | |
ராஜேஸ்வரி | நடிகை | |||
1931 | காளிதாஸ் | எச். எம். ரெட்டி | வித்யாதாரி | |
1932 | இராமாயணம் | சீதை | ||
1933 | சாவித்ரி சத்யவான் | நடிகை | ||
வள்ளி திருமணம் | பி. வி. ராவ் | நடிகை | ||
1934 | திரௌபதி வஸ்திராபகரணம் | ஆர். பத்மநாபன் | திரௌபதி | |
1935 | ஹரிச்சந்திரா | பிரஃபுலா கோஷ் | நடிகை | |
லலிதாங்கி | நடிகை | |||
குலேபகாவலி | எஸ். சௌந்தரராஜன் | நடிகை | ||
1936 | மிஸ் கமலா | டி. பி. ராஜலட்சுமி | மிஸ் கமலா | இயக்குநராக அறிமுகம் |
பாமா பரிணயம் | ஒய். வி. ராவ் | நடிகை | ||
சீமந்தினி | எல்லிஸ் ஆர். டங்கன் | நடிகை | ||
வீர அபிமன்யு | பிரஃபுலா கோஷ் | நடிகை | ||
1938 | நந்தகுமார் | கேசவ் ராவ் தாய்பர் | யசோதை | |
1939 | மதுரை வீரன் | டி. பி. ராஜலட்சுமி | நடிகை, இயக்குநர் | |
சுகுணசரசா | நாராயண் திவேர் | நடிகை | ||
பக்த குமரன் | கே. ரங்கா ராவ் | நடிகை | ||
தமிழ்த் தாய் | நடிகை | |||
1943 | உத்தமி | ஆர். பிரகாஷ் | நடிகை | |
1945 | பரஞ்சோதி | டி. ஆர். ரகுநாத் | நடிகை | |
1948 | ஜீவ ஜோதி | கே. எம். முல்தானி | நடிகை | |
1950 | இதய கீதம் | ஜோசப் தளியத் | நடிகை |
உசாத்துணை
[தொகு]- ↑ "TOI:Destiny's child Rajalakshmi acted to keep her family afloat". Archived from the original on 2011-11-14. Retrieved 2011-11-14.
- ↑ 2.0 2.1 "T. P. Rajalakshmi". geni.com. Archived from the original on 2018-02-13. Retrieved 13 February 2018.
- ↑ Balachandran, Logesh (16 January 2017). "Tamil cinema's first heroine – TP Rajalakshmi". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Tamil-cinemas-first-heroine-TP-Rajalakshmi/articleshow/48465634.cms.
- தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண்
- வீரகேசரி, சூலை 10, 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் (18 சூலை 2015). "தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி!". vikatan.com. Retrieved 23 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - யூடியூபில் சோமசுந்தரா - பரஞ்சோதி (1945) திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தமிழக எழுத்தாளர்கள்
- 1964 இறப்புகள்
- 1911 பிறப்புகள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- தஞ்சாவூர் மாவட்ட மக்கள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்