மிஸ் கமலா
மிஸ் கமலா | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | டி. பி. ராஜலட்சுமி |
கதை | டி. பி. ராஜலட்சுமி |
திரைக்கதை | டி. பி. ராஜலட்சுமி |
இசை | டி. பி. ராஜலட்சுமி |
நடிப்பு | டி. பி. ராஜலட்சுமி |
படத்தொகுப்பு | டி. பி. ராஜலட்சுமி |
கலையகம் | சிறீ ராம் டாக்கிஸ்[1] |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மிஸ் கமலா (Miss Kamala) என்பது 1936 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. ராஜலட்சுமி எழுதி, இயக்கி, நடித்தார். இது அவரது புதினமான கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரனை அடிப்படையாக கொண்டது. இந்தப் படத்தில் ராஜலட்சுமி, டி. வி. சுந்தரம், "பேட்லிங்" சி. எஸ். டி. சிங், வி. எஸ். மணி, டி. பி. ராஜகோபால், "ஸ்டண்ட்" ராஜூ ஆகியோர் நடித்தனர். பெண் இயக்குநரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா ஆகும். இந்தப் படத்தின் வழியாக ராஜலட்சுமி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றார். படத்தைத் தயாரித்து இயக்கியதோடு மட்டுமல்லாமல், அவர் படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்பு செய்தார். படத்தின் எந்தப் பதிப்பும் எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை, இதனால் இது தொலைந்து போன படமாக உள்ளது.
கதை
[தொகு]கமலாவும் கண்ணப்பனும் காதலிக்கின்றனர். கமலாவின் பெற்றோர் இவர்களது உறவை ஏற்கவில்லை. கமலாவை மருத்துவரான சந்திரசேகருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, கமலா தனது கணவரிடம் கண்ணப்பனுடனான தனது காதலைப் பற்றிக் கூறுகிறாள். தன் காதலனை தன் பெற்றோர் அடித்து இருப்பிடத்தைவிட்டு விரட்டிவிட்டு, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் அவரிடம் கூறுகிறாள். இதைக் கேட்டதும், அவளை கண்ணப்பனுடன் சேர்த்துவைக்க முயற்சிப்பதாக நல்லமனம் கொண்ட மருத்துவர் உறுதியளிக்கிறார். ஆனால், மறுநாள், மருத்துவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். கமலாவின் அண்டை வீட்டார் அவளைப் பற்றி மோசமாக பேசத் தொடங்குகின்றனர். பின்னர் கமலா மருத்துவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோரின் வீட்டுக்கு வருகிறாள், ஆனால் அவர்கள் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
தனித்து விடப்பட்ட கமலா தன் வாழ்வுக்காக வேலை தேடத் தொடங்குகிறாள். ஆனால் அவளுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக கண்ணப்பனைச் சந்திக்கச் செல்கிறாள். ஆனால் அவன் வேரொருவரின் மனைவியான அவளை ஏற்க மறுக்கிறான். இதனால் விரக்தியடைந்த கமலா தற்கொலைக்கு முயல்கிறாள். ஆனால் அது ஒரு கார் விபத்தில் முடிகிறது. கண்ணப்பனின் பெற்றோரான தம்பதியினரால் அவள் மீட்கப்படுகிறாள். அவர்கள் கமலாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, அவளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவரை அழைக்கின்றனர். அந்த மருத்துவர் அவளுடைய கணவர், கமலாவை அவளுடைய உண்மையான காதலனுடன் சேர்த்துவைப்பது என்ற தனது முந்தைய வாக்கில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும், கமலாவை இந்த நிலையில் தனது வீட்டில் பார்த்ததும் கண்ணப்பன் மனச்சோர்வடைகிறான். அவள் குணமடைந்த பிறகு, கமலா தனது வாழ்வாதாரத்திற்காக பணம் சம்பாதிக்க ஒரு நாடோடியாக மாறுவேடம் போடுகிறாள். இந்தச் செயல்பாட்டின் போது, கண்ணப்பன் அவள் மீது காதல் கொள்கிறான். பின்னர் கண்ணப்பன் அவளை தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறான். இறுதியில், அவள் தனது பழைய அடையாளத்தை வெளிக்காட்டி, இறுதியாக கண்ணப்பனுடன் இணைகிறாள்.
நடிப்பு
[தொகு]- மிஸ் கமலாவாக டி. பி. ராஜலட்சுமி
- சி. எம். துரைசாமி
- "பேட்லிங்" சி. எஸ். டி. சிங்
- வி. எஸ். மணி
- டி. பி. ராஜகோபால்
- "ஸ்டண்ட்" ராஜூ
தயாரிப்பு
[தொகு]1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (காளிதாஸ்) பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்தார்.[2] இப்படத்தின் கதை கலமவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்ற அவரது முதல் புதினத்தை அடிப்படையாக கொண்டது.[3] ஒரு சமூக புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது.[4] திரைக்கதை மற்றும் இயக்கத்தைத் தவிர, அவர் படத்திற்கு இசையமைத்து படத் தொகுப்பையும் மேற்கொண்டார்.[5] படத்தை இயக்கியதன் மூலம், ராஜலட்சுமி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநராகவும், 1926 இல் புல்புல்-இ-பரிஸ்தானை இயக்கிய பத்மா பேகத்திற்கு அடுத்து,[6] இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.[2][7]
ராஜலட்சுமி மிஸ் கமலா என்ற முதன்மை வேடத்தில் நடித்தார். வி. எஸ். மணி, டி. வி. சுந்தரம் போன்ற பிரபல நடிகர்கள் துணை நடிகர்களாக நடித்தனர். ஒரு கூலிப்படையால் கதாநாயகி கடத்தப்படும் ஒரு காட்சியை சித்தரிக்க ராஜலட்சுமி சண்டைக் காட்சியைப் படமாக்கினார். அன்றைய இரண்டு "பிரபல" சண்டைக் கலைஞர்களான "பேட்லிங்" சி. எஸ். டி. சிங் மற்றும் "ஸ்டண்ட்" ராஜூ ஆகியோர் இந்தக் குறிப்பிட்ட காட்சிக்காக பணியமர்த்தப்பட்டனர்.[8] வானொலி அப்போது ஒரு பிரபலமான வெகுஜன ஊடகமாக இல்லாத காலத்தில், படத்தில் வானொலியில் ஒரு பாடல் கேட்கும் ஒரு காட்சி இருந்தது.[8]
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், நன்னு விடிச்சி என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்[9]. திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டர் கை, ராஜலட்சுமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராஜரதினம் பிள்ளை அதற்கு ஊதியத்தை பெறவில்லை என்று திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை கூறியுள்ளார்.[8][10] படத்தின் எந்த பிரதியும் எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை, இதனால் அது தொலைந்து போன படமாக ஆனது.[9]
வரவேற்பு
[தொகு]கணவனே மனைவியின் காதலனுடன் மனைவியை சேர்த்து வைக்கும் இப்படத்தின் கதைக்கு அக்காலத்தில் பெருத்த எதிர்ப்பு எழுந்தது. இப்படத்திற்கு தமிழ் பெண்கள் போவது சரியல்ல என்று கூறினர். படம் வெளியான திரையரங்குகள் முன்னாள் பலர் கூடி கலவரம் செய்தனர். இதனால் படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1936 - மிஸ் கமலா - ஸ்ரீ ராஜம் டாக்கீஸ்" [1936 - Miss Kamala - Sri Rajam Talkies]. Lakshman Sruthi. Archived from the original on 8 May 2020. Retrieved 8 May 2020.
- ↑ 2.0 2.1 "Centenary fete hails South India's first woman director". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 September 2013 இம் மூலத்தில் இருந்து 2 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202222155/http://www.newindianexpress.com/entertainment/tamil/Centenary-fete-hails-South-India%E2%80%99s-first-woman-director/2013/09/21/article1795326.ece.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 184.
- ↑ மீரான். "சாதிப்பார்களா பெண் இயக்குநர்கள்?". Kungumam. Archived from the original on 2 February 2015. Retrieved 2 February 2015.
- ↑ Narayanan, Sharadha (15 November 2011). "A tribute to Tamil cinema's first woman director". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 2 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202214345/http://www.newindianexpress.com/entertainment/tamil/article243941.ece.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 95.
- ↑ Baskaran, Sundraraj Theodre (24 December 2013) [1996]. The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema. Westland. p. 75. ISBN 978-93-83260-74-4.
- ↑ 8.0 8.1 8.2 Randor Guy (27 March 2009). "Miss Kamala 1938". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090401013610/http://www.hindu.com/cp/2009/03/27/stories/2009032750381600.htm.
- ↑ 9.0 9.1 Guy, Randor (23 December 2010). "Memorable notes". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609041622/https://www.thehindu.com/features/friday-review/music/Memorable-notes/article15605540.ece.
- ↑ "அரசு மனது வைத்தால் முடியும்!" (in ta). தினமணி. 27 November 2011 இம் மூலத்தில் இருந்து 2 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202220121/http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article679813.ece.
- ↑ "என்னே புதுமை.. கோபுரப் பதுமை! - கண் விழித்த சினிமா 19". Hindu Tamil Thisai. Retrieved 31-மே-2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)