டத்தோ ஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Seri Paduka Mahkota Selangor எனும் டத்தோ ஸ்ரீ விருது

மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ ஸ்ரீ விருதுகளில் இருவகைகள் உள்ளன. டத்தோ ஸ்ரீ (மலாய்:Dato' Sri அல்லது Dato' Seri) என்பது முதலாம் வகை. டத்துக் ஸ்ரீ (மலாய்:Datuk Seri) என்பது இரண்டாம் வகை. ஆனால், இந்த இரண்டு விருதுகளையும் டத்தோ ஸ்ரீ என்றே பொதுவாக அழைக்கின்றனர். மலேசியாவின் பேரரசரும் மாநில சுல்தான்களும் டத்துக் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகளை வழங்குகின்றனர். மலேசிய ஆளுநர்களால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் டத்துக் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகளும் ஒன்றாகும். மலேசியாவிற்கு அரிய சேவைகள் ஆற்றியவர்களைப் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

டத்தோ ஸ்ரீ விருது[தொகு]

டத்தோ ஸ்ரீ விருது (மலாய்:Dato' Sri அல்லது Dato' Seri) என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, துன் விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். டான் ஸ்ரீ விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ (மலாய்:Datin Sri) என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான மகாதீர் முகமது, அப்துல்லா அகமது படாவி போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய துன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மலேசிய இந்தியர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய மலேசிய மனித ஆள்பலத் துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியத்திற்கு டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது[தொகு]

டத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் Seri Paduka Mahkota Selangor (SPMS) விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற பெண்களை ‘டத்தின் பாதுக்கா ஸ்ரீ’ (மலாய்:Datin Paduka Seri) என்று அழைக்கின்றனர். 1998ஆம் ஆண்டிற்கு முன்னால் ‘டத்தின் பாதுக்கா’ (மலாய்:Datin Paduka) என்று அழைத்தனர். 23 டிசம்பர் 1998-இல் மாற்றம் செய்யப்பட்டது.[1]

சிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை, ஏனைய இனத்தினர் பலர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழர்களில் இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். முன்னாள் ம.இ.கா. தலைவரும், அமைச்சருமான டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம்,[2] முன்னாள் மலேசியக் கடற்படைத் தளபதி டான் ஸ்ரீ கே. தனபாலசிங்கம்[3][4]ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் Dato' Sri Utama எனும் டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

டத்துக் ஸ்ரீ விருது[தொகு]

டத்துக் ஸ்ரீ விருது (மலாய்:Datuk Seri) மலேசியாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலேசிய மாநில சுல்தான்கள், மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநில ஆளுநர்கள் இந்த டத்துக் ஸ்ரீ விருதை வழங்குகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டத்தோ_ஸ்ரீ&oldid=2011430" இருந்து மீள்விக்கப்பட்டது