சேரீசு (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்போது எசுப்பெயினில் உள்ள மெரிடா எனப்படும் எமெரித்தா அகத்தாவில் (Emerita Augusta) இருந்து எடுக்கப்பட்ட இருக்கும் நிலையில் உள்ள "செரசு". கிபி முதலாம் நூற்றாண்டு. (உரோமக் கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகம்).

பண்டை உரோமச் சமயத்தில், சேரீசு (Ceres - /ˈsɪəriːz/) ஒரு பெண் தெய்வம். இத்தெய்வம், வேளாண்மை, தானியப் பயிர், வளமை, தாய்மை உறவுகள் ஆகியவற்றோடு தொடர்புடையவள். தொடக்கத்தில், உரோமின் "பிளெபியன்" அல்லது "அவென்டைன்" முத்தெய்வங்களுள் முக்கியமானவளாக விளங்கியவள் இவள். இத் தெய்வத்துக்காக ஏப்ரலில் ஏழு நாள் திருவிழா கொண்டாடினர். இத்திருவிழாவில் "லூடி" (Ludi) எனப்படும் விளையாட்டையும் விளையாடுவது வழக்கமாக இருந்தது. மே மாதத்தில் அக்கால உரோமில், அறுவடை நாட்களில் இடம்பெறும் "அம்பவாலியா" (Ambarvalia) என்னும் திருவிழாவின் ஒரு பகுதியாக வயல்களைத் தூய்மையாக்கும் சடங்கு இடம்பெற்றது. இச் சடங்கிலும், உரோமர்களின் திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கான சடங்குகளிலும் சேரீசுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

கிரேக்கத் தொன்மங்களில் "பன்னிரண்டு ஒலிம்பியர்"களுக்கு இணையான உரோமர்களின் "டி கான்சென்ட்டீசு" எனப்படும் தெய்வங்களின் குழுவில் வேளாண்மைக்கான தெய்வம் சேரீசு மட்டும் அல்ல. செரீசுவை கிரேக்கர்களின் டிமிடர் உரிய தொன்மங்கள் செரீசுவின் மீது ஏற்றிக் கூறப்பட்டன.

சொற்பிறப்பும் தோற்றமும்[தொகு]

"சேரீசு" என்னும் பெயர் முந்து இந்திய-ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதும், "வளர்தல்" என்னும் பொருள் கொண்டதுமான கெர் என்னும் வேர்ச் சொல்லில் இருந்து உருவானது என்பது சிலரது கருத்து. கிரியேட் (create), (சீரியல்) (cereal), குரோ (grow) போன்ற பல ஆங்கிலச் சொற்களும் இதே வேரிலிருந்தே உருவாயின என்பது அவர்களுடைய கருத்து. இத்தெய்வம், கால்நடை மேய்ப்பு, வேளாண்மை, மனிதக் கருவளம் போன்றவற்றோடு தொடர்புடையதால், "தாங்குதல்", "உண்டாக்குதல்", "உற்பத்தி செய்தல்" போன்ற பொருள்களைக் கொண்ட கெரீரீ (gerere) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே "சேரீசு" என்னும் சொல்லின் மூலமாக இருக்கலாம் என்பது இன்னும் சிலரது கருத்து. மிகப் பழைய நம்பிக்கைகளில் இருந்து சேரீசு தோன்றியது என்பதற்கு உரோமரின் அயலவர்களான இலத்தீனியர், ஆசுக்கானியர், சாபெலியர் போன்ற இனத்தவரிடமிருந்து தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. எட்ரசுக்கர், உம்பிரியர் போன்றோரிடம் இருந்தும் அதிகம் தெளிவில்லாத சான்றுகள் உள்ளன. உரோமர் காலம் முழுவதிலும் "சேரீசு" என்னும் சொல் தானியத்தையும் அதன் நீட்சியாக ரொட்டியையும் குறிப்பதற்குப் பயன்பட்டது.

வழிபாட்டு மரபுகளும் கருப்பொருளும்[தொகு]

வேளாண்மை வளமை[தொகு]

ஒருவகைக் கோதுமை, காளைகளை நுகத்தில் கட்டுதல், உழுதல், விதைத்தல், இளம் வித்துக்களைப் பாதுகாத்தல், போன்றவற்றைக் கண்டுபிடித்ததுடன், மனித குலத்துக்கு வேளாண்மையை அளித்ததும் சேரீசுவே என நம்பினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரீசு_(தொன்மவியல்)&oldid=2492815" இலிருந்து மீள்விக்கப்பட்டது