உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்...

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்...
நூல் பெயர்:சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்...
ஆசிரியர்(கள்):மு.மாரியப்பன்
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:நினைவலைகள்
இடம்:சர்வோதய இலக்கியப் பண்ணை ,
32/1, மேல வெளி வீதி,
மதுரை -625 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:104
பதிப்பு:டிசம்பர்2011
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்... என்பது 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் இரவு ம. பொ. சி. யின் மறைவுக்கும் இடைப்பட்ட 39ஆண்டு காலப்பகுதியின் நிகழ்வுகள் பலவற்றின் பதிவுகளே இந்நூல். மு. மாரியப்பன் இந்நூலை எழுதியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றின் பார்வை

[தொகு]

இந்நூலில் ம. பொ. சி.யைப் பற்றிய தன்னுடைய நினைவலைகளோடு இணைத்து, 1927 முதல் 1995ஆம் ஆண்டு வரையிலான தமிழக வரலாற்றை; தமிழ் மண்ணில் இயங்கிய இயக்கங்களின் வரலாற்றை வாழ்ந்த, வாழ்கின்ற தலைவர்களின், தொண்டர்களின் வரலாற்றை தன்னுடைய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறார்.

இயல் 1 : தமிழினத் தலைவர் ம.பொ.சி

[தொகு]
ம.பொ.சி.யுடன் நூலாசிரியர் மு.மாரியப்பன்

இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு உள்ளேயே தமிழ்ப்பண்பாட்டு இயக்கமாக ம. பொ. சி.யால் தொடங்கப்பட்டது தமிழரசுக் கழகம். இக்கழகம் 1947ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை மொழிவழி சோசலிசக் குடியரசுகளும் அவற்றின் கூட்டரசாக இந்திய ஒன்றியமும் உருவாக வேண்டும் என ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தது. மறுபக்கம், மொழிவழி மாநிலப் பிரிவினையால் தமிழகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளைக் காக்க அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் தலைவர்களைக் கொண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. அப்போராட்டங்கள் மதுரை நகரிலும் எதிரொலித்தன. அந்த எதிரொலிகளால் ஈர்க்கப்பட்ட அந்நாளைய கல்லூரி மாணவரான நூலாசிரியர், அவற்றிற்கு காரணராக இருந்த ம. பொ. சியின் பெயரை 1956ஆம் ஆண்டில் முதன்முதலிற் கேட்டிருக்கிறார்; பின்னர் அவருடைய புகழைக் கேட்டு இருக்கிறார்; பின்னர் அவருடைய உரைகளைக் கேட்டு இருக்கிறார்; அதன் பின்னர் அந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 1956-59ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தன்னிடம் ஏற்பட்ட இந்த நிலைமாற்றத்தையே இந்த இயலில் பதிவு செய்திருக்கிறார்.

இயல் 2: சட்டக்கல்லூரிப் படிப்பும் ம. பொ. சி. தொடர்பும்

[தொகு]

நூலாசிரியர் 1959ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியில் தங்கியிருந்த படித்தார். அங்கு அவரோடு தங்கியிருந்து படித்தவர் கோவை சு. வெங்கட்ராமன் என்பவர். ம. பொ. சி.க்கு இவர் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர். எனவே இவரது உதவியோடு ம. பொ. சி.யின் இல்லத்திற்குச் சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இந்நிகழ்வு தொடங்கி, 1961ஆம் ஆண்டில் திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டு, ம. பொ. சி.க்கு அப்பகுதி மக்கள் "தணிகைகொண்டான்" என்னும் பட்டம் வழங்கி மகிழ்ந்தது வரையுள்ள பல நிகழ்வுகள் இந்த இயலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இயல் 3: தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்

[தொகு]

தமிழ்நாடு, தெலுங்குநாடு என்னும் ஆந்திரம், கருநாடகம் என்னும் கல்நாடு, கேரளம் என்னும் சேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணம், மொழிவழி பிரிக்கப்பட்டு தமிழகமாக 1956ஆம் ஆண்டில் மலர்ந்தது. ஆயினும் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம், சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. எனவே இதனை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரி 1961ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் போராட்டம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக, திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியின் வாயிலில் இருந்து நடிகமேதை ஔவை தி. க. சண்முகம் தலைமையில் போராடக் கிளம்பினார்கள். அவர்களை வழியனுப்பி வைத்த நிகழ்வு தொடங்கி, தமிழரசுக் கழகம் தோன்றியதற்கான காரணத்தை விவரிக்கும் பகுதி இந்த இயலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இயல் 4: திராவிட இயக்கமும் விளைவும்

[தொகு]

நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் நிலைப்பாடு. இது இந்திய தேசிய காங்கிரசின் தமிழகக் கிளையில் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியது. அச்செல்வாக்கை எதிர்த்த ம. பொ. சி.யை அன்றைய தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த கு. காமராசர் அக்கட்சியிலிருந்து வெளியேற்றினார். அதற்கான காரணத்தை விளக்கி, 1962ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் வேலூரில் நடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில் முதன்முறையாக தான் உரையாற்றிய நிகழ்வு வரையிலான தன்னுடைய நினைவலைகளையும் திராவிட இயக்கங்கள் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டையும் இந்த இயலில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இயல் 5 : எனது வழக்கறிஞர் தொழில்

[தொகு]

நூலாசிரியர், 22.1.1962ஆம் நாள் சென்னையில் தன்னை வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டது தொடங்கி, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக, சுதந்திராக் கட்சி, முசுலீம் லீக், தமிழரசுக் கழகம் ஆகியன போன்றவை இணைந்து, கூட்டணி அமைத்து, காங்கிரசுக் கட்சியைத் தோற்கடித்தது வரையிலான காலப்பகுதியின் நினைவலைகளை இந்த இயலில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

ம. பொ. சியும் தமிழரசுக் கழகத்தின் அன்றைய மதுரை நகரத் தலைவரான இந்நூலாசிரியரும் மதுரைப் பல்கலைக் கழகம் 1.2.1966ஆம் நாள் தொடங்கபட்டபொழுது, அதன் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் அம்மன்றத்தில் தமிழ்மொழியில் பேசி, அங்கே தமிழை அலுவல்மொழியாக ஆக்கினர். பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கறுப்புடை அணியும் ஆங்கிலேயே மரபினை தாமும் துறந்து, தமிழக முதல்வரும் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினருமான கா.ந. அண்ணாதுரையையும் அவ்வுடையைச் துறக்கச் செய்தனர். இந்நிகழ்வுகளையும் "காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட விடுதலைப் புரட்சி" என்னும் தலைப்பில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் முனைவர் மு.வரதராசனார் தலைமையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ம. பொ. சி. நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு பற்றிய நினைவலைகளையும் தந்து இந்த இயல் நிறைவடைகிறது.

இயல் 7: மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி

[தொகு]

திராவிடநாடு வேண்டும் கோரிக்கைக்கு மாற்றாக தமிழரசுக் கழகத்தால் முன்வைக்கப்பட்ட, "மாநிலத் தன்னாட்சி" என்னும் கோரிக்கை, "மாநிலத்தில் தன்னாட்சி; மத்தியிற் கூட்டாட்சி" என்னும் முழக்கம் ஆகியவற்றின் சுருக்கமான வரலாற்றோடு தொடங்குகிறது இந்த இயல். ம. பொ. சி. தமிழக மேலவையின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்று தமிழை அதன் அலுவல் மொழியாக மாற்றியதைக் குறிப்பிட்டு, இந்திராகாந்தி இந்தியாவில் அவசரநிலையை அறிவித்த காலகட்டம் வரையுள்ள பல நிகழ்வுகள் இதில் பதியப் பட்டுள்ளன.

இயல் 8: ஜே,பி.யுடன் தொடர்பு

[தொகு]

சோசலிசத் தலைவரான மக்கள் தலைவர் செயப்பிரகாசு நாராயணனோடு தமிழக சர்வோதய மண்டலின் செயலாளராக இருந்த க. மு. நடராசனார் வழியாக மு. மாரியப்பனுக்கு தொடர்பு ஏற்பட்டது. 1973ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தப் போராட்டத்தில், செ. பி.யின் சட்ட ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பு இந்நூலாசிரியருக்குக் கிடைத்தது. அவசரநிலைக் காலத்தில் ம. பொ. சி.யின் கருத்தோடு தான் முரண்பட்டு, செ. பி.யோடு இணைந்து அவசரநிலையை எதிர்த்து இவர் போராடியிருக்கிறார். அவசரகாலத்திற்குப் பின்னர் அரசியல் மாற்றம் நடைபெற்றது. ம. பொ. சி. தமிழக மேலவையின் தலைவரானார். இந்நிகழ்வுகள் அனைத்தையும் பதிவுசெய்யும் இந்த இயல், 1986ஆம் ஆண்டில் ம. பொ. சி. தன் ஒரே மகனான திருநாவுக்கரசை இழந்து, கையறுநிலை அடைந்த தகவலோடு நிறைவடைகிறது.

இயல் 9: அமெரிக்கா செல்ல ஆயத்தம்

[தொகு]

சுவாமி சச்சிதானந்தாவின் அழைப்பை ஏற்று, அவர் அமெரிக்காவில் அமைத்திருந்த தாமரைக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு ம. பொ. சி., எழுத்தாளர்களான சாவி, பகீரதன். நூலாசிரியர் ஆகிய நால்வரும் சென்றனர். அதற்கு அன்றைய முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) உதவிகள் செய்தார். இவற்றைப் பற்றிய பதிவே இந்த இயலாகும்.

இயல் 10: மேலவைக் கலைப்பு

[தொகு]

1986ஆம் ஆண்டில் ம. பொ. சி. தலைவராக இருந்த தமிழக மேலவைக் கலைக்கப்பட்டது. அவர் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நூலாசிரியரின் தலைமகள் காயத்திரி தேவியின் திருமணம் ம.பொ.சி.யின் தலைமையில் நடைபெற்றது. இத்தகவல்களைக் கொண்டதே இந்த இயலாகும்.

இயல் 11: தமிழ் உணர்வும் திராவிட உணர்வும்

[தொகு]

திராவிட இயக்கங்களின் பார்ப்பனிய எதிர்ப்பைப் பற்றிய ம.பொ.சி.யின் கண்ணோட்டத்தின் பதிவே இந்த இயலாகும்.

இயல் 12: ஐயாவின் ஆன்மீக ஞானம்

[தொகு]

1972ஆம் ஆண்டில் சென்னை சங்கர சமிதியில் ஆதிசங்கரின் அத்வைதக் கோட்பாட்டைப் பற்றி ம. பொ. சி. ஆற்றிய உரையாற்றினார். அதன் ஆழத்தை எடுத்துரைத்து, அவரது ஆன்மீக நாட்டத்தை விளக்கி, அவரது மறைவோடு நூலாசிரியர் தன்னுடைய ஆதனியத் தொடர்பு அறுந்ததாக குறிப்பிடுவதோடு, நூலின் இறுதி இயல் நிறைவடைகிறது.

வெளி இணைப்பு

[தொகு]