சாவி (எழுத்தாளர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (பெப்ரவரி 2020) |
சாவி | |
---|---|
பிறப்பு | சா. விசுவநாதன் ஆகத்து 10, 1916 மாம்பாக்கம், வட ஆற்காடு, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 9, 2001 | (அகவை 84)
புனைபெயர் | விடாக்கண்டர் |
தொழில் | பத்திரிக்கையாளர், இலக்கிய ஆசிரியர், இதழாசிரியர் |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் சாமா சுப்பிரமணிய சாஸ்திரிக்கும் மங்களாவுக்கும் பிறந்தவர் விசுவநாதன். தந்தையின் பெயர் முதல் எழுத்து "சா'வுடன் தனது முதல் எழுத்து "வி'யும் சேர்த்து "சாவி' என்று புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதிப் புகழ்பெற்றார். கிராமத்தில் நான்காவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். ஆனால் பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும் சுதேசமித்திரனைத் தொடர்ந்து படித்து வந்ததால் விடயம் அறிந்த பையன் என்று விசுவநாதனுக்கு ஒரு பெயர்.
எழுத்துலகில்
[தொகு]தன் ஊரிலிருந்தபடியே கல்கியில் அவ்வப்பொழுது விடாக்கண்டர் என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் கல்கி ஆசிரியர் சதாசிவம் சாவியை அழைத்து உதவி ஆசிரியர் பதவி வழங்கினார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய மாறுவேஷத்தில் மந்திரி, சூயஸ் கால்வாயின் கதை போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் ஆனந்த விகடன் இதழில் ஆசிரியராகி வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். இத்தொடர் பெரும் புகழ் ஈட்டியது. சிறிது காலம் ஆனந்த விகடனில் பணியாற்றிய பின்னர் குங்குமம், பின்னர் தினமணிக் கதிர் ஆகியவற்றின் ஆசிரியர் பதவியைச் சாவி ஏற்றுக்கொண்டார். பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
சாவியின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால்[சான்று தேவை], அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.
சமூகப் பணி
[தொகு]ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார். கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு ஞானபாரதி விருதும் பொற்கிழியும் அளித்துக் கௌரவித்து வந்தார்.
மறைவு
[தொகு]மு. கருணாநிதி தலைமையில் சாவி எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நாரதகான சபா அரங்கில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தவேளையில் தன்னுடைய பழைய நினைவுகளை மேடையில் பேசிக்கொண்டிருந்தபொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சில மாதங்கள் நினைவின்றி இருந்த சாவி 2001, பெப்ரவரி 9 இல் காலமானார்.
இவர் எழுதியவை
[தொகு]- வாஷிங்டனில் திருமணம்
- விசிறி வாழை (நூல்)
- வழிப்போக்கன் (நூல்)
- வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு (நூல்)
- வேதவித்து (நூல்)
- கேரக்டர் (நூல்)
- பழைய கணக்கு (நூல்)
- இங்கே போயிருக்கிறீர்களா? (நூல்)
- ஊரார் (நூல்)
- திருக்குறள் கதைகள் (நூல்)
- கோமகனின் காதல் (நூல்)
- தாய்லாந்து (நூல்)
- உலகம் சுற்றிய மூவர் (நூல்)
- என்னுரை (நூல்) (கலைஞரின் முன்னுரையுடன்)
- ஆப்பிள் பசி (நூல்)
- நான் கண்ட நாலு நாடுகள் (நூல்)
- நவகாளி யாத்திரை (நூல்)
- சிவகாமியின் செல்வன் (நூல்)
- சாவியின் கட்டுரைகள் (நூல்)
- சாவியின் நகைச்சுவைக் கதைகள் (நூல்)
- தெப்போ 76 (நூல்)
- வத்ஸலையின் வாழ்க்கை (நூல்)
- கனவுப்பாலம் (நூல்)
- மௌனப் பிள்ளையார் (நூல்)
- சாவி-85 (நூல்)
நடத்திய இதழ்கள்
[தொகு]- வெள்ளிமணி
- சாவி
- பூவாளி
- திசைகள்
- மோனா
- விசிட்டர் லென்சு